Skip to main content

போலி வாக்காளர்களை சேர்க்க ஆளும் கட்சி முயற்சி - ஸ்டாலின் கண்டனம்

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
M. K. Stalin



என் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே!
 

ஹிட்லர் மற்றும் முசோலினியின் வாரிசுகள் தான் இந்நாட்டை ஆள்கிறார்களோ என்று அனைத்துத் தரப்பு மக்களும் அச்சப்படக் கூடிய அளவிலே, ஜனநாயகத்திற்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் விரோதமான செயல்பாடுகளை மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், பொதுமக்களின் இறுதியானதும் உறுதியானதுமான நம்பிக்கையாக இருப்பது தேர்தல் களம் மட்டும் தான். அதுதான் அவர்கள் கையில் உள்ள வாக்குரிமை என்கிற வலிமை மிகுந்த ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்தக் கூடிய இடமாகும். ஆனால், அந்த ஆயுதத்தையும் தந்திரமாகப் பறித்து, தேர்தல் களத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள ஆட்சியாளர்கள் பல மோசடிகளையும் சூழ்ச்சிகளையும் செய்து வருகிறார்கள். இவை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு எத்தனையோ புகார்கள் தெரிவிக்கப்பட்டாலும், சட்ட விதிமுறைகளின்படி அந்த மோசடிகளைக் களைவதில் உரிய வேகமும் போதிய அக்கறையும் காட்டப்படவில்லை. அதனால், மகேசன் தீர்ப்புக்கு நிகரானதும் மேலானதுமான மக்கள் தீர்ப்பையே மாற்றிவிடக் கூடிய தில்லுமுல்லுகளை அதிகாரத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ள நினைக்கிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்திட நமக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு தான் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம். அடுத்தவர் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, மோசடி செய்வதற்கு ஆளுந்தரப்பு அனைத்து வழிகளையும் மேற்கொள்ளும் நிலையில், கழகத்தினர் விழிப்புடன் இருந்து, கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு ஊன்றிக் கவனிப்பது போல, இந்த முகாம்களில் செயல்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். 

 

கடந்த செப்டம்பர் 8ந் தேதி நடைபெற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில், ஆளுங்கட்சியினர், போலி வாக்காளர்களைப் புகுத்தவும், பாரம்பரியமான கழக வாக்காளர்களை நீக்கவும் முயற்சி செய்வதாக பல இடங்களிலிருந்தும் தகவல்கள் வருகின்றன. அவ்வாறு நடைபெறும் அத்துமீறல்களை - சட்டவிரோத செயல்களைப் பற்றி, உடனுக்குடன் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார்களைக் கொடுத்து உரிய நிவாரணம் பெற்றிட வேண்டும் எனவும், அப்படி புகார் கொடுத்த விவரங்களைக் கழகத் தேர்தல் பணிக்குழுவிற்கும், தலைமைக் கழகத்திற்கும் அவ்வப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனுப்பி வைத்திட வேண்டும்"" என வலியுறுத்தப்பட்டது. இதனை கழக நிர்வாகிகள் சரியாகவும் முறையாகவும் கடைப்பிடித்திட வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.

 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பான (ஏன், சட்டமன்றத் தேர்தலுக்கும் என்று கூட சொல்லலாம்) வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்கான கடைசி முகாம்  14-10-2018 அன்று நடைபெறுகிறது. கடந்த 7-10-2018 ஞாயிறன்று நடைபெற்ற முகாமின் போது, கொளத்தூர் தொகுதியில் நேரில் சென்று பல வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டேன். கழகத்தின் சார்பிலான முகவர்களும், தோழமைக் கட்சிகளைச் சார்ந்த முகவர்களும் அக்கறையுடன் பணியாற்றியதுடன், என்னைக் கண்டதும் ஆர்வத்துடன் வந்து அன்பினை வெளிப்படுத்தினர். கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பைச் சுமக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய கொளத்தூர் தொகுதியில் வெளிப்படும் அக்கறை, ஒவ்வொரு தொகுதியும் நம்முடைய தொகுதி என்கிற எண்ணத்துடன், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் அதில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெளிப்பட வேண்டும். கடைசி முகாம் நடைபெறும் அக்டோபர் 14ஆம் நாள் அன்று கழகத்தினர் மிகுந்த விழிப்போடு இருந்து அந்தப் பணியினை மேற்கொள்ள வேண்டும். 

 

இதுகுறித்து தலைமைக் கழகம் ஏற்கனவே விடுத்துள்ள அறிவிப்பில், "மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, நகரிய, பேரூர், ஊராட்சி, வார்டு கழக செயலாளர், நிர்வாகிகள் மற்றும் வாக்குச் சாவடி நிலைய முகவர்கள் (BLA-2) ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை அலட்சியப்படுத்திடாமல் அவசியமாகச் செயல்படுத்த வேண்டிய கடமை கழகத்தினருக்கு இருக்கிறது. நாம் காட்டுகின்ற அக்கறையை தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களும் காட்டிட வேண்டும். அப்போது தான், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்கின்ற பணி முழுமையாக நிறைவேறிடும். அது நிறைவேறிடக்கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் அக்கறை செலுத்தி, போலி வாக்காளர்களைச் சேர்ப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். 
 

கடந்த வாரம் நடைபெற்ற முகாமின் போது, கொளத்தூர் தொகுதியில் உள்ள எவர் க்ரீன் பள்ளியின் 16 வாக்குச்சாவடிகளுக்கும் க்ஷடுடீ என்கிற வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டாயம் வந்திருக்க வேண்டும். நான் அங்கு பார்வையிடச் சென்ற போது அந்த அலுவலர்கள் வரவில்லை. அதன் காரணமாக, ஆளுங்கட்சியினர் தாங்கள் திட்டமிட்டு நிறைவேற்ற நினைக்கிற தில்லுமுல்லுகளை மேற்கொள்கிறார்கள்.
 

கொளத்தூரில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதுமிருந்தும் கழகத்தினர்-தோழமைக் கட்சியினர்-பொதுமக்களிடமிருந்து வரக்கூடிய தகவலின்படி, தி.மு.கழகத்திற்கு ஆதரவான வாக்காளர்களை நீக்குகின்ற வேலையை ஆளுங்கட்சியினர் ஒருசில அதிகாரிகளின் துணையுடன் மேற்கொள்கிறார்கள். அதுபோலவே முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையின வாக்காளர்களும் நீக்கப்படுகின்றனர். புதிதாகக் குடிவந்தவர்களின் பெயர்களை சேர்ப்பதிலும் அலட்சியம் காட்டப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்படும் புகார்களின் மீது தேர்தல் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை; ஏனோ தயக்கம் காட்டுகிறார்கள். இருப்பவர்களை நீக்குகின்ற அதே நேரத்தில், இறந்து போனவர்களின் பட்டியலை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி, அவர்களை நீக்குமாறு கழகத்தினரும் மற்ற கட்சியினரும் எடுத்துச் சொன்னால் அந்த வாக்காளர்களை நீக்கிவிடாதவாறு ஆளுங்கட்சியினர் செயல்படுகிறார்கள். வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள தொழிலாளர்களுக்கு உரிய முகவரியில்லாத போதும் அவர்களின் பெயர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சேர்த்து, வாக்காளர் அடையாள அட்டைகளையும் பெற்றுத் தரும் வேலையை ஆளுந்தரப்பு மேற்கொள்கிறது. இறந்தவர்கள்-இடம் பெயர்ந்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் நீக்கப்படுவதில் அலட்சியமும், கழகத்தினர்-சிறுபான்மையினர்-தோழமைக் கட்சியினர் ஆகியோர் சார்ந்த வாக்காளர்கள் பெயர்களை நீக்குவதில் அதிதீவிர அக்கறையும் காட்டி ஆளுங்கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, 14ந் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் கழகத்தின் முகவர்கள் விழிப்புடன் செயல்பட்டால் தான், வாக்காளர் பட்டியல் மோசடியைத் தடுத்திட முடியும்.

 

புதிய இளம் வாக்காளர்களை சேர்ப்பது என்பதும் மிகவும் முக்கியமான பணியாகும். 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ந் தேதியுடன் 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்பதால், அத்தகைய இளைஞர்கள் உரிய சான்றுகளுடன் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திட கழக முகவர்கள் துணை நிற்க வேண்டும். நம் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் சமூகநீதித் திட்டங்களால் பயன் பெற்று வாழ்க்கையில் உயர்வடைந்துள்ள இளைய சமுதாயம் அந்த நன்றியினை நெஞ்சில் தேக்கியிருப்பதை தலைவர் அவர்கள் மறைந்த போது காண முடிந்தது. அவர்கள் முதன்முதலாகப் பதிவு செய்யும் வாக்குகள் உதயசூரியனுக்குப் பதிவாகி, தமிழ்நாட்டில் புதிய விடியல் ஏற்படும் வகையில் கழகத்தினர் செயலாற்ற வேண்டும்.
 

வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது, வாக்குச்சாவடி முகவர்களுக்கு மட்டுமான பணிதானே என்று நினைத்துவிடாமல் கழகத்தின் மாவட்ட-ஒன்றிய-நகர-பேரூர்-ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கவனம் செலுத்திட வேண்டும். கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் முழுமையான அக்கறை காட்டிட வேண்டும். 
 

அக்டோபர் 14 காலை முதல் மாலை வரை இந்தப் பணியில் சிறிதும் சோர்வின்றிச் செயல்பட்டால் தான் ஆளுந்தரப்பு மேற்கொள்ளும் மோசடிகளைத் தடுத்திட முடியும். வாக்காளர் பட்டியலில் உள்ள களைகளை நீக்கினாலே, வெற்றி எனும் பயிர் விரைந்து விளையும். சமுதாய சீர்திருத்தமும் தேர்தல் கள அரசியலும் கழகத்தின் இரு கண்கள். நம் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்கள் இவற்றை நமக்குப் பல முறை வலியுறுத்தியிருக்கிறார்.
 

அறுவடைக்குப் பின் 

வீட்டுக்கு வந்த நெல்லை 

அரிசியாக்கி உலையிலிட்டு 

சோறு படைத்தல் 

அரசியல் என்றால் 

அந்நெல் விளையும் வயலுக்கு 

நீர் பாய்ச்சி உரமிட்டு,

அருகில் வளர் களைகளையும் 

அகற்றுவதே சமுதாயப் பணி என்பேன் 

-        இது தலைவர் கலைஞரின் வாக்கு. 
 

 

தேர்தல் அரசியல் களத்தில் உலை பொங்கி, அனைவருக்கு உணவு பரிமாறப் பட வேண்டுமென்றால், அதற்கு முன்பாக, நெல் விளையும் வயல் போன்ற வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் எனும் களைகளை நீக்கி, புதிய வாக்காளர்கள் எனும் உரமிட்டு ,பயிர் வளர்ப்பதுதான் நாம் தற்போது மேற்கொள்ள வேண்டிய சமுதாயப் பணி. அதனைச் சரிவரச் செய்தால்தான், விளைச்சல் வீண்போய்விடாமல் வெற்றியினை அறுவடை செய்திட முடியும். அரசியல் களத்தில் பெறுகின்ற வெற்றியை தமிழ்ச் சமுதாயத்தின் நலனுக்கும் உயர்வுக்கும் பயன்படுத்துவதே தலைவர் கலைஞர் அவர்கள் நமக்குக் காட்டியுள்ள பாதை. 
 

வாக்காளர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு வாக்கும் நெல்மணிகள். ஒரு நெல் வீணானாலும், தேவையற்ற பதர்கள் பெருகினாலும் அது வெற்றியினைப் பாதிக்கும். இளையான்குடி தொகுதியில் கழக வேட்பாளர் மலைக்கண்ணன் ஒரேயொரு வாக்கில் வெற்றி வாய்ப்பை இழந்ததனை தலைவர் கலைஞர் அவர்கள் பல முறை சுட்டிக்காட்டி நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். அந்த விழிப்புணர்வுடன் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் முகாமில் கவனம் செலுத்திட வேண்டும். 
 

இன்று நீங்கள் காட்டும் அக்கறை, நாளை நம்மை வெற்றிக் கரை சேர்க்கும். விழிப்புடன் செயல்பட்டு, வெற்றியினை உறுதி செய்வீர்!
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உரிமையோடு கேட்கிறேன். நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள்!. நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். இந்திய நாட்டின் இரண்டாவது விடுதலைப் போர் என்று அழைக்கப்படுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏப்ரல் 19-ஆம் நாள் நடைபெற இருக்கிறது. ஜனநாயகத்தையும் - மக்களாட்சி மாண்புகளையும் மதிக்கின்ற, கூட்டாட்சித் தத்துவத்தைப் போற்றி இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பத்தாண்டு கால இருள் சூழ்ந்த ஆட்சியை அகற்றி, புதிய இந்தியாவுக்கான விடியலுக்கு அச்சாரம் இடும் நாள்தான் - ஏப்ரல் 19.

யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது. குஜராத் மாடல், வளர்ச்சியின் நாயகன் என்ற முகமூடிகளுடன் இதுவரை தேர்தல் களத்தில் மோடி நின்றார். அவரது குஜராத் மாடல் என்பது போலியானது என்பதும், வளர்ச்சியின் நாயகன் என்பது பொய்யானது என்பதும் பத்தாண்டுகளில் தெரிந்து விட்டது. மக்கள் தெளிந்து விட்டார்கள். இப்போது அனைவருக்கும் தெரிவது, 'ஊழல் மோடி' தான். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பல்லாயிரம் கோடி பணத்தை பாஜக குவித்திருப்பதை தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்திவிட்டது. உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய முறைகேடு என்று வர்ணிக்கப்படுகிற தேர்தல் பத்திர ஊழல், பாரதிய ஜனதா கட்சியும், நரேந்திர மோடியும் ஊடகங்களின் துணையோடு உருவாக்கி வைத்திருந்த போலி பிம்பத்தைச் சுக்கு நூறாக்கி, முகத்திரையைக் கிழித்துவிட்டன. தேர்தல் பத்திர நடைமுறையே முறைகேடானது, சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், ஊழல் மலிந்த தேர்தல் பத்திரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நியாயப்படுத்தி பேசி வருவது, இதுவரை பாஜகவை ஆதரித்தவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலாவது இதுபோன்ற இமாலய ஊழல் அரங்கேறி இருந்தால், அந்த நாட்டின் பிரதமர் பதவி விலகி இருப்பார். 

If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

தனது சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் மோடி நாசப்படுத்தி விட்டார். கருப்புப் பணத்தை மீட்பது, ஊழலற்ற ஆட்சியைத் தருவது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் வளர்ச்சியை பெருக்குவது, வறுமையை ஒழித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தி சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது, பாதுகாப்பை உறுதிசெய்து மகளிர் வாழ்வை மேம்படுத்துவது என்ற எல்லா தளங்களிலும் படுதோல்வியை மோடியின் அரசு சந்தித்து இருக்கிறது. வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்து விட்டது. விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வு ஏழை மக்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்திவிட்டது. பெட்ரோல், டீசல், சுங்கக் கட்டணக் கொள்ளை நடுத்தர மக்களை வதைத்துவிட்டது. இரக்கமற்ற ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களை சிதைத்துவிட்டது. மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைத்து, எப்போதும் மதப் பகையை வளர்க்கும் வெறுப்புப் பேச்சின் மூலம் சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்திக் குளிர்காய நினைக்கிறார்கள்.

அண்ணல் அம்பேத்கர் இயற்றி அளித்த அரசியலமைப்புச் சட்டம், மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநிலங்களின் முதலமைச்சர் பதவியில் இருந்தாலும் கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுமையும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் முடக்கும் அநியாயம், மாநிலங்களுக்கு வரி மற்றும் நிதிப் பகிர்வில் பாரபட்சம் அரங்கேறாத நாளே இல்லை. இதுவரை இந்தியத் திருநாடு சந்திக்காத அளவு மாநில உரிமைப் பறிப்பு நடவடிக்கைகள் மோடி அரசால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. சுதந்திர இந்தியாவில், பெட்ரோல் – டீசல் மீது மிக அதிகமான வரியை செஸ், சர்சார்ஜ் என்ற பெயரில் வசூலித்து, மாநிலங்களுக்குப் பகிர்ந்து தராமல், மக்களிடம் சுரண்டி மாநிலங்களையும் வஞ்சித்த மோசமான ஆட்சி, மோடியின் ஆட்சி!.

வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், சட்ட மசோதாக்களுக்கு அனுமதி, அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, துணைவேந்தர்களை நியமனம் செய்வது போன்ற அன்றாட, இயல்பான நிர்வாக நடைமுறைகளுக்குக்கூட உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு மாநிலங்களுக்கு நிர்பந்தம் தருகிற கொடுங்கோல் ஆட்சியாக, மோடி தலைமையிலான ஆட்சி இருப்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். மாநிலங்களின் வயிற்றில் அடிப்பது, மாநில உரிமைகளை நசுக்குவதைப் பெருமையான செயல் என்று கருதிக்கொள்கிற அளவு அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்கான தேர்தல் இது.

இந்தியா போன்ற மகத்தான, மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமராக, தனது கடமையில் நரேந்திர மோடி தோற்றுவிட்டார். எனவே, அவர் அந்த நாற்காலியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதை நாடு தாங்காது. நாடாளுமன்ற ஜனநாயகத் தேர்தல் முறையே இல்லாமல் போய்விடும், சர்வாதிகார அதிபர் ஆட்சி முறை கொண்ட நாடாக ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சியாளர்கள் இந்தியா மாற்றிவிடுவார்கள். இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டி, மாநிலங்களின் எல்லைக் கோடுகளை மாற்றி, ஒற்றையாட்சி நாடாக மாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் நாடு முழுவதும் மக்கள் மனங்களில் இருக்கிறது. இந்தியாவைப் பாதுகாக்க மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு, தமிழர்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு தீட்டிய ஒரேயொரு சிறப்புத் திட்டத்தையாவது கூறுங்கள் என்று கடந்த ஒரு மாத காலமாகப் பரப்புரைக் கூட்டங்களில் ஒன்றிய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பி வந்தேன். தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசா கூட தராமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பது நியாயமா என்றும் கேட்டு வந்தேன். ஆனால், அதற்கு எந்த நேர்மையான பதிலையும் பிரதமர் மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ கூறவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மோடியும் பாஜகவும் எதிரிகள் என்பது இதில் இருந்தே உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் அமைய இருந்த மாபெரும் முதலீட்டை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முன்னேறுவதை அனுமதிக்கவே மாட்டார்கள்.  தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது. 

If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

இவர்கள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் அடிமை பழனிசாமியின் கட்சியானது பாஜக போட்டுத் தந்த திட்டப்படி கள்ளக் கூட்டணி அமைத்து தனியாக நிற்கிறது. தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, பாழ்படுத்திய அதிமுக ஆகிய இரண்டு கூட்டணியையும் புறக்கணிக்குமாறு தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல நாடகமாகிக் கொண்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு கைகோத்து விடுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை விமர்சிக்காதது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுக்குத் தேவையென்றால் நேரடியாக ஆதரிப்பார்கள். 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். அன்று முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளைக் குவித்த சிறப்பும் பெருமையும் திமுக கூட்டணிக்கு உண்டு.

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நண்பர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் நம் அணியில் இணைந்துள்ளது. திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சமுதாய இயக்கங்கள் நமது அணிக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன. இந்தத் தொண்டர்களின் சலிக்காத உழைப்பைத் தமிழ்நாடு முழுவதும் நான் பார்த்தேன். அவர்களது முகங்களில் தெரிந்த நம்பிக்கை, என்னை மேலும் மேலும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக நான் வெளியிட்ட அறிக்கையில், ‘புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் யார் வேட்பாளர், எந்தச் சின்னம் என்பதை மறந்து விட்டு, ‘வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி அனைத்து உடன்பிறப்புகளும் பணியாற்ற வேண்டும்’ என்று உரிமையோடு நான் கேட்டுக் கொண்டேன். அந்தச் சொல்லுக்கு கட்டுப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் தேர்தல் பணியாற்றி வரும் காட்சியை நான் பார்த்தேன். 'இவர்களைத் தொண்டர்களாகப் பெற என்ன தவம் செய்துவிட்டேன்' என்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன்.

If Modi comes back to power the country will not stand says CM MK Stalin

இதே ஆர்வமும், சுறுசுறுப்பும் தேர்தல் முடியும் வரை இருந்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களை வாக்குச்சாவடிக்கு வர விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல், வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது வரையிலும் கண்துஞ்சாது கண்காணிக்க வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். உங்களது உழைப்பின் பயன்தான் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். தமிழ்நாட்டில் தனக்கு பிடித்த ஊர்ப் பெயர்களில் ஒன்று 'எப்போதும் வென்றான்' என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகமும் எப்போதும், எல்லாத் தேர்தல்களிலும் வென்றான் என்பதை மெய்ப்பிக்கும் தேர்தல் இது.

ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைக் கண்டு நம் கவனம் துளியும் சிதறிவிடக்கூடாது. அவற்றைக் கடந்த காலங்களிலும் நாம் பொருட்படுத்தியது இல்லை. கடைசி வாக்கு பதிவாகி, வெற்றிக் கனி நம் கைகளில் வந்து சேரும் வரை, கண் துஞ்சாது – பசி நோக்காது – கருமமே கண்ணாயினர் என நாம் கவனத்தோடும் உற்சாகம் குன்றாமலும் உழைத்திட வேண்டுகிறேன். கருத்துக்கணிப்புகளை எல்லாம் விஞ்சுகிற, நாடே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கிற வெற்றியாக நம் வெற்றி இருக்க வேண்டும். தேர்தல் விதிகளை முறையாகப் பின்பற்றி, வாக்காளப் பெருமக்கள் ஒவ்வொரையும் மீண்டும் தேடிச் சென்று சந்தித்து, அவர்களிடம் மோடி ஆட்சியில் நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்துகளை விளக்கிச் சொல்லி, திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்ற மகத்தான மக்கள் நலத்திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துரைத்து, நம் அணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

இரண்டு முறை இருண்ட காலத்தைக் காட்டிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இந்தியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்திய நாட்டின் சிறப்பான எதிர்காலமும் தமிழ்நாட்டின் முன்னேற்றமும் இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையும், அதை வழிமொழிந்தும் வலு சேர்த்தும் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் திட்டங்களாக மாற வேண்டும். தமிழ்நாட்டின் வாக்காளப் பெருமக்களுக்கு பணிவான வேண்டுகோளை கரம் கூப்பி முன்வைக்கிறேன். இந்தியா என்றென்றும் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் சகோதரத்துவமும் கொண்ட நாடாகத் திகழ, தமிழ்நாட்டின் தனித்தன்மையை நிலைநாட்டுவதற்கு நம் முன் உள்ள ஒரே வாய்ப்பும் ஆயுதமும் உங்கள் வாக்குதான். உங்கள் பொன்னான வாக்குகள், இந்தியாவைக் காக்கட்டும், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை மீட்கட்டும். தமிழ்நாட்டின் தனித்தன்மையை உறுதி செய்யட்டும். 

தமிழ்நாட்டின் மக்கள் நலத் திட்டங்கள் தொய்வின்றித் தொடர, எங்கும் எதிலும் தமிழ்நாடு முன்னோடி என்ற பெருமை நிலைத்திட, தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற அரசு டெல்லியில் அமைந்தாக வேண்டும். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு. தமிழ்நாட்டின் பகைவர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம். ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில், நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தேடித் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பரபரப்பு கடிதம்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
letter of retired IAS, IPS officers to Election Commissioner
தலைமை தேர்தல் ஆணையர்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில், தேர்தல் நேரத்தில் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என 87 பேர் சார்பில் கூட்டாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், “எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசை கண்டு தேர்தல் ஆணையம் மவுனமாக இருக்கக்கூடாது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 ஆவது பிரிவின்படி வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மத்திய அரசை போல மாநில அரசும் தங்கள் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினால் இத்தககைய செயல் அராஜகத்தில் முடியும். இது தேர்தல் நேரத்தில் பெரும் குழப்பங்களை விளைவிக்கும்.

ஊழலை ஒழிப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயம் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரை மத்திய அரசு பழிவாங்குவது தவறு. இது குறித்து தேர்தல் ஆணையம் தங்கள் கடமையை மறந்து உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி எழுப்பிய சந்தேகங்களை போக்க தேர்தல் ஆணையம் எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. பாஜகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது” எனத் தெரிவித்துள்ளனர்.