Skip to main content

ஜனாதிபதி கையில் லகான்! 

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

 

தேர்தல் முடிவுகளை எதிர்கொள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளும் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகின்றன. எந்த கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் ? என்கிற புள்ளிவிபர கணக்குகள் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

 

parliament


 

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புது கூட்டணி உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தேர்தல் முடிவுகளைப் பொறுத்து  ஆட்சி அமைக்க யாரை அழைக்க வேண்டும் என்கிற அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களைப் பெற்றிருந்தால் அக்கூட்டணியைத்தான் ஆட்சி அமைக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைக்க வேண்டும். 


 

 

ஆனால், பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை பாஜகவோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளோ பெறாமல்  இருக்கும் சூழலில், தனிப்பெரும் கட்சியாக பாஜக அதிக இடங்களை கைப்பற்றியிருந்தால் அக்கட்சியை ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதாவது, பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை எதிர்க்கட்சிகள் கூட்டணி பெற்றிருந்தாலும், தனிப் பெரும் கட்சியாக பாஜக வெற்றிப்பெற்றால் ஆட்சி அமைக்க பாஜகவுக்கே முதல் வாய்ப்பை ஜனாதிபதி வழங்குவார் என தெரிகிறது. இதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. 
 

1989-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் அதிக இடங்களை பெற்றிருந்தது. ஆனால், பெரும்பான்மைக்கான இடங்கள் காங்கிரஸுக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் அப்போதைய, ஜனாதிபதி வெங்கட்ராமன், ஆட்சி அமைக்க ராஜீவ்காந்தியை அழைத்தார். ஆனால், பெரும்பான்மை இல்லாததால் ஜனாதிபதியின் முடிவை நிராகரித்தார் ராஜீவ்காந்தி. அதன் பிறகு, வி.பி.சிங் பிரதமரானர். 


 

 

அதேபோல, 1996-ல் தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களை கைப்பற்றியது வாஜ்பாய் தலைமையிலான பாஜக. அப்போதைய ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மா, ஆட்சி அமைக்க வாஜ்பாயை அழைக்க, மறுத்துவிட்டார் வாஜ்பாய். ஜனாதிபதிக்கு இப்படிப்பட்ட அதிகாரம் இருக்கிறது. அதனை ஏற்பதும் மறுப்பதும் சம்பந்தப்பட்ட தலைவர்களின் ஜனநாயக உணர்வுகளைப் பொருத்தது. ஆக, பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றிப்பெற்றால்  ஆட்சி அமைக்கும் முதல் வாய்ப்பை பாஜகவுக்கு கொடுக்க, தனது அதிகாரத்தை ஜனாதிபதி  பயன்படுத்துவார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆக, புதிய ஆட்சியின் லகான் ஜனாதிபதி கையில் இருக்கிறது !
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story

கமல் கறார் - லேட்டாகும் ம.நீ.ம, தி.மு.க கூட்டணி

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Kamal Strong-Late MNM DMK alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்த கூட்டணி நீடிப்பதால் திமுக தொகுதிப் பங்கீடு வரை சென்றுள்ளது. ஆனால், அதிமுக தற்போது வரை கூட்டணியை உறுதி செய்ய முடியாமல் பேச்சுவார்த்தையை நீட்டித்து வருகிறது. மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை இன்று திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இரண்டு கட்சிகளும் ஒரு இடத்தை கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யம் விரைவில் திமுகவிடம் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'திமுக கூட்டணி கட்சிகளின் கொள்கைகள் ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதால் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணைவது இயற்கையானது' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இரண்டு தொகுதிகளைக் கேட்பதாகவும், திமுக ஒரு தொகுதியை மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

கடந்த மூன்று வாரத்திற்கு மேலாக மக்கள் நீதி மய்யம் தரப்பினர் திமுகவிடம் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தாமதமாகி வரும் நிலையில், அந்த தாமதத்திற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. திமுக தரப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாகவும், ஆனால், தாங்கள் திமுக கூட்டணியில் போட்டியிட்டாலும் டார்ச் லைட் சின்னத்தில் மட்டும் தான் போட்டியிடுவோம் என கமல்ஹாசன் கறாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதமே தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் சின்னத்திற்காக விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தான் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் ஒதுக்கி ஒப்புதல் அளித்திருந்தது. எனவே போட்டியிட்டால் டார்ச் லைட் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இரண்டு தொகுதிகள் வேண்டும் என பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்டு பேச்சுவார்த்தையை முன் வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.