Skip to main content

டம்பி வேட்பாளர்கள்... அறிவாலயத்தில் குவியும் புகார்கள்... 

Published on 07/01/2020 | Edited on 07/01/2020

 

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து அறிவாலயத்தில் புகார்கள் குவிகின்றன. பல மாவட்டங்களில் திமுக மா.செ.க்களுக்கு எதிராகவே குற்றச்சாட்டுகள் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. அறிவாலயத்திற்கு சென்ற புகார்களில் அதிகப் பரபரப்புகளை எதிரொலிக்கச் செய்து கொண்டிருக்கிறது.

 

dmkதிருவள்ளூர் திமுக பஞ்சாயத்து. திருவள்ளுர் வடக்கு மாவட்ட திமுக  செயலாளராக இருப்பவர் கும்பிடிப்பூண்டி வேணு. கும்முடிப்பூண்டி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 26 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 17 இடங்களை அ.தி.மு.க.விடமும் சுயேட்சையிடமும் இழந்துள்ள திமுக, வெறும் 9 இடங்களை மட்டுமே கைப் பற்றியிருக்கிறது. மா.செ.வேணுவும் அவரது மகன் ஆனந்துமே இதற்கு முழு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர் மாவட்ட உடன்பிறப்புகள். 


 

இது குறித்து நம்மிடம் பேசிய ஒன்றியத்தின் முக்கிய நிர்வாகிகள்,  "கும்முடிப்பூண்டி ஒன்றியம் தி.மு.க. விற்கு எப்போதுமே வலிமையான வெற்றியை கொடுக்கக் கூடியது. 26 இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு 3 இடங்களை மட்டுமே ஒதுக்கி விட்டு, 23 இடங்களில்  போட்டியிட்டது திமுக. போட்டியிட்ட  இடங்களில்  கட்சிக்கு  சம்பந்தமில்லாத பல பேருக்கு வாய்ப்பு தரப்பட்டது. இதன் பின்னணியில் லகர கணக்கில் வைட்டமின்கள் விளையாடின.  


  

உதாரணத்திற்கு, சித்தராஜ கண்டிகை வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஊராட்சி செயலாளர் ஜெயச்சந்திரன் சீட் கேட்டிருந்தார்.  அந்த பகுதியில் மக்களிடம் செல்வாக்கு    மிக்கவர்.  ஆனால், இவருக்கு சீட் மறுக்கப்பட்டு, கட்சிக்கு அறிமுகமில்லாத பிரபாகரன் என்பவருக்கு சீட் கொடுத்தனர். சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த ஜெயச்சந்திரன், உடனே, ஊராட்சி செயலாளர் பதவியிலிருந்து விலகி,  சுயேட்சையாக களமிறங்கினார். தேர்தல் முடிவில்,1100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றுவிட்டார் ஜெயச்சந்திரன். தி.மு.க.விற்கு அங்கு மூன்றாவது இடமே கிடைத்திருக்கிறது. 
 

ஜெயச்சந்திரனுக்கு சீட் மறுக்கப்பட்டதைப் போலவே பல இடங்களில் மக்களிடம் செல்வாக்கு இல்லாதவர்களுக்கு சீட் வழங்கினர். அது மட்டுமல்லாமல், அ.தி.மு.க.வினரிடம் வைட்டமின் பெற்றுக்கொண்டு ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதும் நடந்திருக்கிறது. அதற்கு பிரதிபலனாக, அதிமுக போட்டியிடும் இடங்களில் டம்பி வேட்பாளர்களை நிறுத்தினர். ஆக, திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றியதன் பின்னணியில் அதிமுகவோடு ரகசிய ஒப்பந்தமும், அதற்காக சீட்டுகள் விற்கப்பட்டதும்தான் காரணங்களாக இருக்கின்றன. இது குறித்து அறிவாலயத்துக்கு புகார்களை அனுப்பியுள்ளோம் ‘’ என கொட்டித்தீர்த்தனர்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஜாஃபர் சாதிக் வழக்கு; துணை நடிகருக்கு இ.டி சம்மன்   

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
N

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஜாஃபர் சாதிக்கை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கைது செய்து மூன்று நாட்கள் காவல் கஸ்டடியில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து ஜாஃபர் சாதிக்கின் பினாமி என்று கூறப்பட்ட ஆவடியைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் எட்டு மணி நேரமாக சோதனை நடைபெற்றது. இந்நிலையில் ஜாஃபர் சாதிக்கின் சகோதரரும், துணை நடிகருமான மைதீன் என்பவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஜாஃபர் சாதிக் தயாரித்து அமீர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இறைவன் மிகப்பெரியவன்' படத்தில் மைதீன் துணை நடிகராக பணியாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. நேற்று ஜாஃபர் சாதிக்கின் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று ஜாஃபர் சாதிக்கின் சகோதரருக்கு சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.

Next Story

'சண்டாளர் சர்ச்சை' - அதிரடியாக வெளியான அறிவிப்பு

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
'Sandalar Dispute'-Recommendation by Tribal Commission to Tamil Govt

சண்டாளர் என்ற சமூக பெயரை இழிவுபடுத்தும் நோக்கில் பயன்படுத்தினால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய பரிந்துரை அளித்து தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'பட்டியல் சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பொதுவெளியில் பட்டியல் இனத்தவர்களின் பெயர்களை இழிவான முறையில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம். தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் 'சண்டாளர்' என்ற  வகுப்பைச் சேர்ந்த பெயரில் மக்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பட்டியல் சமூகத்தினர் அட்டவணையில் 48 வது இடத்தில் இந்தச் 'சண்டாளர்' என்ற சமூக பெயர் இடம் பெற்றுள்ளது.

இப்பெயரை பொதுவெளியில் நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ, ஒருவரை இழிவுபடுத்தும் நோக்கிலோ இனி அந்தச் சொல்லை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோர் மீது பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு ஆணையம் பரிந்துரைக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், முன்னாள் முதல்வர் கலைஞரை விமர்சித்து பாடல் ஒன்றைப் பாடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்த, கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தமிழக அரசுக்கு ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையம் இதனைப் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.