Skip to main content

“உயிர் காக்கும் தடுப்பூசி போடுவதை “திருவிழா” என்று பெயர் சூட்டி..” - மு.க. ஸ்டாலின் 

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

Life-saving vaccination is called a "festival". Stalin

 

கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மிக வேகமாக தமிழகத்திலும் இந்தியாவிலும் பரவி வருகிறது. அதனைத் தடுக்க அரசு பல கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் விதித்திருக்கிறது. இருந்தபோதில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மத்திய அரசு, சமீபத்தில் மேலும் ஒரு வெளிநாட்டு கரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்திருக்கிறது. மேலும், இந்தியாவில் மத்திய அரசு கரோனா தடுப்பூசி திருவிழா எனும் பெயரில் அதிகளவிலான கரோனா தடுப்பூசிகளைப் போடத் திட்டமிட்டு அதனைச் செயல்படுத்திவருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி திருவிழா இன்று (14.04.2021) துவங்கி 16.04.2021 வரை நடைபெறுகிறது. 

 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “கரோனா தொற்று தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் நிலையில், ‘அனைவருக்கும் தடுப்பூசி’ என்ற கொள்கை முடிவினை எடுத்து தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய பா.ஜ.க. அரசு தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 

மேலும் அந்த அறிக்கையில், “கரோனா பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் காட்டுத் தீ போல் அதிகரித்து வருகின்ற சூழலில் “அனைவருக்கும் தடுப்பூசி” எனக் கொள்கை முடிவு எடுக்க வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, “அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி” என்ற முடிவினை எடுத்திருப்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது. கரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,985 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 6,984 பேர் பாதிக்கப்பட்டு, சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் கரோனா தொற்று அதி வேகமாகப் பரவி வருவதாகத் தமிழக அரசின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன.

 

இரண்டாவது அலை தாக்குதல் இவ்வளவு படுமோசமாக நம் மாநிலத்திற்கு மட்டுமின்றி - நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படுத்தியிருப்பதற்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் அலட்சிய மனப்பான்மையும் - அஜாக்கிரதையான நிர்வாகமுமே காரணம். தடுப்பூசிகளை உரிய நேரத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டு வராதது, நம் மக்களுக்குப் பயன்பட வேண்டிய சுமார் 5.84 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது என “கரோனா முதல் அலை தாக்குதலில்” காட்டிய மெத்தனத்தை விட அதிக பொறுப்பின்மையை இந்த முறையும் மத்திய பா.ஜ.க. அரசு காட்டிக் கொண்டிருக்கிறது. உயிர் காக்கும் தடுப்பூசி போடுவதை “திருவிழா” என்று பெயர் சூட்டி தனது அரசின் நிர்வாக அலட்சியத்தைத் திசை திருப்புவதிலேயே பிரதமர் நரேந்திர மோடி அக்கறை காட்டுகிறாரே தவிர - அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிட வேண்டும் என்று முடிவு எடுக்க இதுவரை அவர் முன்வரவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்த பிறகும் கூட - அவர் இன்னும் பா.ஜ.க.விற்காக மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தில்தான் இருக்கிறார்!

 

தமிழ்நாட்டில் இதுவரை முதல் டோஸ் 35.67 லட்சம், இரண்டாவது டோஸ் 4.53 லட்சம் என்ற அளவில் மொத்தம் 40.21 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைய தளத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தடுப்பிற்கு இது எப்படி போதுமானதாக இருக்கும்? ஏன் அ.தி.மு.க. அரசு அதிக தடுப்பூசிகளை கேட்டுப் பெறவில்லை? தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ஒரு பேட்டியில், “தடுப்பூசி பயன்பாட்டின் அடிப்படையில்தான் மத்திய அரசு தடுப்பூசி சப்ளை செய்கிறது. குறைவாக ஊசி போட்டுக் கொண்டால் தமிழகத்திற்கு தடுப்பூசி ஒதுக்கீடு குறைவாகவே இருக்கும்” என்கிறார். “அனைவருக்கும் தடுப்பூசி போடும் நோக்கில் சப்ளை செய்வதற்குப் பதில் மாநிலத்தில் போடப்படும் தடுப்பூசியின் அடிப்படையில்தான் சப்ளை” என்று மத்திய பா.ஜ.க. அரசு முடிவு எடுத்திருந்தால் - அது எவ்வளவு மோசமான மக்கள் விரோத முடிவு? ஏன் இதை அ.தி.மு.க அரசு எதிர்க்கவில்லை?

 

உயிர்காக்கும்   தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள மக்கள் முன்வரவில்லை என்றால் - அதற்கு மத்திய அரசும், அ.தி.மு.க. அரசுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் தடுப்பூசியின் பாதுகாப்புப் பற்றி உரிய வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தத் தவறியது இரு அரசுகளும்தான். “தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” என்ற விழிப்புணர்வை உரிய காலத்தில் ஏற்படுத்தாமல் - தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கையை வைத்தே தடுப்பூசி சப்ளை செய்யப்படும் என்று மத்திய பா.ஜ.க. அரசு பிடிவாதம் காட்டுவது மிகவும் தவறான நடைமுறை. இது மாதிரி - தமிழ்நாட்டிற்குத் தடுப்பூசி சப்ளை செய்வதில் அறிவியல்பூர்வமற்ற கட்டுப்பாடுகளை விதிப்பது மக்களின் உயிரோடு நடத்தும் விபரீத விளையாட்டாகும். கடந்த 8-ஆம் தேதி தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி, “தடுப்பூசி குறித்து இன்னும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுமதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் விரைந்து தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார் எனத் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அ.தி.மு.க. அரசு மட்டுமல்ல - மத்திய பா.ஜ.க. அரசும் தோல்வியடைந்து விட்டது என்பதை இது காட்டுகிறது.

 

எனவே, கரோனா தொற்று தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி - மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழியும் சூழ்நிலை உருவாகியுள்ள இந்த நேரத்தில், “அனைவருக்கும் தடுப்பூசி” என்ற கொள்கை முடிவினை எடுத்து தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளைத் தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசை - குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசு அதிகாரிகளும் போதிய விழிப்புணர்வை இப்போதாவது ஏற்படுத்தி - அனைவருக்கும் தடுப்பூசி போடுவதில் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்கள் அனைவரும் - தவறாமல் முகக்கவசம் அணிந்து - கைகளை அடிக்கடி கழுவி - பொது இடங்களில் தனிமனித இடைவெளி விட்டு கரோனா தொற்றினை தடுப்பதற்கான தமிழக அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும், அனைவரும் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“கையில் புத்தகங்கள் தவழட்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Let the books creep in the hand says Chief Minister MK Stalin

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபையான யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்துச் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. அதனால் புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.