Skip to main content

“இனியும் அக்கா, தம்பியாக பயணிப்போம்...” - திருச்சி சூர்யா, டெய்சி பேட்டி

 

Let's travel as sister and brother'-Trichy Surya, Daisy interview

 

பா.ஜ.க.வின் திருச்சி சூர்யா இன்னொரு பா.ஜ.க. பெண் நிர்வாகியை மிகவும் ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது அக்காவிற்கும் தம்பிக்கும் இடையே நிகழ்ந்த தனிப்பட்ட உரையாடல் என இருவரும் ஒன்று சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தது பேசு பொருளாகியிருக்கிறது.

 

பா.ஜ.க.வின் ஓ.பி.சி. அணியின் மாநில பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு திருச்சி சூர்யா வந்ததிலிருந்தே சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ச்சியாகப் பேசியபடியே இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் பா.ஜ.க.வின் சிறுபான்மையினர் பிரிவின் தலைவர் டெய்சி சரணுக்கு போன் போட்டு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அவரை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். அந்த ஆடியோ லீக்கான விவகாரம் குறித்து ஏற்கெனவே நமது நக்கீரனில் வீடியோ வெளியிட்டிருந்தோம்.

 

அந்த வீடியோவில் திருச்சி சூர்யா, அந்தப் பெண் நிர்வாகியை மிகவும் தரக்குறைவான கெட்ட வார்த்தைகளால் தாக்கிப் பேசுகிறார். அந்தப் பெண் நிர்வாகி எவ்வளவு கேட்டுக்கொண்டும் அவரது நடத்தை குறித்தும் அவர் பா.ஜ.க.வில் பதவி பெற்றது குறித்தும் இழிவுபடுத்துவதோடு, பா.ஜ.க.வின் கேசவ விநாயகம் குறித்தும் மிகவும் மோசமாகப் பேசுகிறார். டெய்சியை அறுத்து விடுவேனென்றும், கொன்று விடுவேனென்றும், டெய்சி கொல்லப்பட்டால் அதற்குத் தான் தான் பொறுப்பென்றும் பகிரங்கமாகக் கொலைமிரட்டல் விடுத்துப் பேசியிருந்தார்.

 

டெய்சியும் பதிலுக்கு சூர்யாவின் குடும்பத்தைப் பற்றி இழிவாகப் பேசியிருந்தார். இந்த உரையாடல்கள் அனைத்துமே ஆடியோவாக வெளியே வர, சமூக வலைத்தளங்களில் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கும்படி பலரும் பதிவிட்டனர். அண்ணாமலையின் செயல்பாடு குறித்தும் அதிருப்தி தெரிவித்தனர்.

 

பா.ஜ.க. நிர்வாகியான காயத்ரி ரகுராம், ஏற்கெனவே அண்ணாமலை மீது முட்டல் மோதலிலிருந்த நிலையில் சூர்யா மீது நடவடிக்கை இல்லையா என்று கேள்வியெழுப்பியிருந்தார். இதையடுத்து, பிரச்சனைக்குரியவர்களை விட்டுவிட்டுக் கேள்வியெழுப்பிய காயத்ரி ரகுராமின் பதவிகளை அடுத்த 6 மாத காலத்துக்குப் பறித்துவிட்டார் அண்ணாமலை.

 

ஆடியோ விவகாரத்தில் பெண் நிர்வாகிக்கு எதிராக சூர்யாவின் மோசமான கொலை மிரட்டல் பேச்சுக்கள் அப்பட்டமாகத் தெரிந்தும் கூட அவர்மீது காவல்துறையில் புகாரளிக்காத முன்னாள் காவல்துறை அதிகாரியான அண்ணாமலை, விவகாரம் குறித்து விசாரிப்பதற்காகக் கமிட்டி அமைப்பதாகவும் ஒரு வாரக் காலத்தில் விசாரணை முடிவு வந்ததும் அதன்மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

 

bjp

 

என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை இன்று பிரச்னைக்குரிய திருச்சி சூர்யாவும்,டெய்சி சரணும் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்பொழுது பேசிய டெய்சி சரண், ''சமீபத்தில் நடந்த ஆடியோ கிளிப்பிங்ஸ் வலைத்தளத்தில் வைரலாகி எல்லா ஊடகங்களிலும் பரவி வருகிறது. பாஜக கட்சியில் இப்படி நடந்ததா? என்பது போல் பரவி வருகிறது. இந்தக் கட்சியில் எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள். சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு மிகப்பெரிய இடத்திற்குச் சென்றுள்ளனர். இதுவரைக்கும் அம்மா, அக்கா என்பதைத் தவிர பெண்களை வேறெப்படியும் கூப்பிடுவதில்லை. அப்படி ஒரு கட்சி பாஜக. ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தது என்றால் எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கெல்லாம் லட்டு கிடைத்த மாதிரி ரொம்ப நிறைய ட்ரோல் பண்ணிக் கொண்டு வருகிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட நாங்கள், குறிப்பாக கனக சபாபதி ஐயா கூப்பிட்டு பேசி என்னையும் சிவா அவர்களையும் பேச வைத்தார்கள். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பேசி இந்த விஷயத்தை விட்டு விடலாம் என்று முடிவுக்கு வந்து விட்டோம். இதில் யாருடைய வற்புறுத்தலும் இல்லை. என்னைப் பொருத்தவரை எனது இறப்புக்கு முன்பாக இந்தியா இப்படி ஒரு பிரதமரை பார்க்குமா என்று ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் இப்படி ஒரு பிரதமர் வந்து இந்தியாவின் வளர்ச்சியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார் .ஏதோ கண் பட்ட மாதிரி இப்படி ஒரு நிகழ்வு நடந்து விட்டது. உணர்ச்சி வசப்பட்டு எப்படியோ நிகழ்ந்து விட்டது. இதை நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். இதில் மனமொத்து அவர் ஆரம்பத்தில் அக்கா என்றுதான் கூப்பிட்டார். நானும் தம்பி என்றுதான் பேசினேன். திரும்பவும் தொடர்ந்து அக்கா தம்பியாக பயணிப்பதாக முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

 

அதன் பிறகு பேசிய திருச்சி சூர்யா, ''அக்கா சொன்ன மாதிரி தனிப்பட்ட இருவருக்குமான உரையாடல். அதில் எங்கள் மாநில தலைவர் சொன்ன மாதிரி தனிப்பட்ட முறையில் இருந்தாலும் சரி, பொதுத் தளத்தில் இருந்தாலும் சரி கட்சி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்று சொன்னார். இன்று ஒழுங்கு நடவடிக்கைக் குழுவைச் சந்திக்கச் சொன்னார்கள். சபாபதி அவர்கள் தலைமையில் நடந்த குழுவில் இருதரப்பும் பங்கு கொண்டு பேசினோம். எந்த மாதிரியான சூழ்நிலையில் வாக்குவாதம் நிகழ்ந்தது என்பதெல்லாம் பேசினோம். இதை எழுத்துப் பூர்வமாகவும் நேரடியாகவும் கொடுத்திருக்கிறோம். அக்காவுடைய தரப்பிலிருந்தும் இந்த ஆடியோ போகல. நானும் வெளியேயும் கொடுக்கல. இது வேறு வகையில் வெளியே சென்றுள்ளது. யார் என்பதைக் கட்சி கண்டுபிடிக்கட்டும். கட்சிக்கு கெட்ட பெயர் கிடைக்க வைப்பது என்னுடைய எண்ணம் இல்லை என அக்கா சொன்னாங்க. நானும் என்னுடைய விளக்கத்தைக் கொடுத்து இருக்கிறேன். கட்சி ஒருவேளை நான் பேசியது தவறு என்று சொல்லக்கூடிய சூழ்நிலையில் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுகிறேன்'' என்றார்.

 

இந்நிலையில் பாஜக ஓ.பி.சி. அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யாவை 6 மாதம் கட்சியின் அனைத்துப் பதவியிலிருந்தும் நீக்கி பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.