Skip to main content

“ஐந்து வருடத்திற்கு அமைச்சராக மாட்டேன் என உதயநிதி சொல்லட்டும்..” - சீமான்

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

"Let Udayanidhi say I will not be a minister for five years." - Seeman

 

அண்மையாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டது. கடந்த வாரம் கொய்யாத்தோப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் த.மோ.அன்பரசன், 'இன்னும் 18 மாதங்கள் பொறுத்திருந்தால் இப்பொழுது எம்.எல்.ஏவாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வந்து உங்களுக்கு வீடுகளை தருவார்' என பேசியிருந்தார். இதேபோல், சில இடங்களில் திமுகவினர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என தீர்மான நிறைவேற்றிவருகின்றனர்.  

 

இந்நிலையில் தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றி தலைமைக்கு யாரும் தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'எந்த சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை தலைமை நன்கறியும். எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு யாரும் தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம். கட்சியை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடலுடன் தயாராகி வருகிறேன். மக்கள்  பணியாற்றி கட்சிக்கும், அரசுக்கும் மகத்தான புகழை சேர்த்திடுவோம்' எனத் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் நேற்று சென்னையை அடுத்த பூந்தமல்லியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர், “உறுதியாக அவரை அமைச்சராக்குவார்கள். ஐந்து ஆண்டுகாலத்திற்கு அமைச்சராக மாட்டேன் என தம்பியை உறுதியாகச் சொல்ல சொல்லுங்கள். அனைவரையும் பேசவைப்பது என்பது, அனைவரிடத்திலும் அவருக்கு ஆதரவு இருக்கிறது எதிர்ப்பு இல்லை என்பதை காட்டுவதற்காக இப்படி பேசவைப்பார்கள்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.