Advertisment

சட்டமன்றத்தில் புளூ பிலிம் பார்த்தவர்களுக்கெல்லாம் பாஜகவில் சீட் கொடுத்துள்ளனர் : அமமுக புகழேந்தி பேட்டி

pugal

Advertisment

குட்கா ஊழலுக்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அமமுக மாநில செயலாளர் புகழேந்தி கூறினார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் புகழேந்தி இன்று (28/4/2018) சேலம் வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

‘’பதினெட்டு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் என்று நாடு முழுவதும் எதிர்பார்ப்பு நிலவியது. 18 எம்எல்ஏ க்களின் தொகுதிகள் காலியாக உள்ளன. அதனால் அதற்கு முன்னுரிமை கொடுத்து தீர்ப்பு அளித்து இருந்தால் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வந்திருக்கும்.

Advertisment

ஆனால், 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. சபாநாயகருக்கு மட்டும்தான் கட்டுப்பட வேண்டும். மூன்றில் ஒரு பங்கு என்ற விதியெல்லாம் தேவையில்லை என்ற நிலையை இந்த தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது. சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று தீர்ப்பு சொல்வதற்கு, இவ்வளவு மாதங்கள் காத்திருக்கத் தேவையில்லை. இந்தத் தீர்ப்பு அவர்களை மீண்டும் குளிர்காய வைத்துவிட்டது.

எந்த எம்எல்ஏவும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். சபாநாயகரை அட்ஜஸ்ட் செய்து கொண்டால் போதும் என்கிற ரீதியில் உயர்நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. இந்தத் தீர்ப்பே விசித்திரமாக இருக்கிறது. இதே பன்னீர்செல்வம் மனது வைத்து, எடப்பாடிக்கு எதிர்ப்பாக இந்த 11 பேரும் திருப்பியும் வாக்களிக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?.

குட்கா ஊழலில் டிஜிபி ராஜேந்திரன் ஈடுபட்டிருக்கிறார். இந்த வழக்கை, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் எப்போது தீர்ப்பு அளித்ததோ, அப்போதே அதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜிநாமா செய்திருக்க வேண்டும்.

தார்மீக அடிப்படையில் அவர் முதல்வராக தொடர்வதற்கு எந்த நியாயமும் இல்லை. முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் ராஜிநாமா செய்ய வேண்டும். இந்தியாவில் வெட்கங்கெட்ட அரசு என்றால் அது எடப்பாடி பழனிசாமி அரசுதான்.

திவாகரன்&டிடிவி தினகரன் மோதல் என்பது தேவையற்ற சர்ச்சை. இப்பிரச்னையில் திவாகரன் பொறுமை காத்து அவர் வழியில் செல்ல வேண்டும். சிறிய சர்ச்சைகள் என்பது சரியாகி விடும். அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை.

எங்கள் அணியில் உள்ள 18 எம்எல்ஏக்களில் ஒருவர்கூட எங்கேயும் செல்ல மாட்டார்கள். ஆளும் தரப்பில் 40 எம்எல்ஏக்கள் எங்களுடன் இப்போதும் தொடர்பில் இருக்கின்றனர். சில அமைச்சர்கள்கூட எங்களுடன் இணைய தயாராக இருக்கிறார்கள்.

சபாநாயகர் தவறு செய்யும்போது நீதிமன்றம் தலையிடலாம் என்று இருக்கிறது. இன்னும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் குறித்த வழக்கில் எங்களுக்கு நிச்சயமாக சாதகமான தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி அரசை இனிமேலும் யாரும் மிரட்ட முடியாது. இந்த அரசு எல்லாவற்றுக்கும் துணிந்துவிட்டது. கொள்ளை அடிப்பதில் வல்லமை படைத்தவர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஊடகங்களையும் மிரட்டுகின்றனர்.

ஜெயலலிதாவும், சசிகலாவும் சிறை செல்வதற்கு எங்களது தலைசிறந்த வக்கீல்கள்தான் காரணம். நவநீதகிருஷ்ணன் போன்ற 'வண்டுமுருகன்' மாதிரியான வக்கீல்களை வைத்திருந்தோம். அதுதான் அவர்கள் சிறைக்குச் செல்ல காரணம்.

கர்நாடகா தேர்தலில் பாஜக வெற்றி பெறாது. அங்கு மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. சட்டமன்றத்தில் புளூ பிலிம் பார்த்தவர்களுக்கெல்லாம் பாஜகவில் சீட் கொடுத்துள்ளனர். பாஜகவுக்கு எதிராக வாக்களியுங்கள் என்று நாங்களும் பிரச்சாரம் செய்வோம்.இவ்வாறு புகழேந்தி கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.கே.செல்வம், வெங்கடாசலம் உடனிருந்தனர்.

- சேலம் இளையராஜா

ammk karnataka puzhalenthi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe