Skip to main content

எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம்; சோனியா காந்தி பங்கேற்பு?

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

Leaders of Opposition meeting; Sonia Gandhi participation

 

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன. ஆறு மாத காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் திமுக சார்பில் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

 

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்க உள்ளார். இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்துகொள்ள உள்ளார் எனத் தகவல்கள் வருகின்றன.

 

அதே சமயம் இந்த கூட்டத்திற்குத் தமிழகத்தில் இருந்து திமுக, விசிக, மதிமுக, கொங்கு நாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று முஸ்லீம் லீக், கேரளா காங்கிரஸ், பார்வர்ட் பிளாக்  உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்