Advertisment

'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' அமைப்பினை உடனே கலைக்க வேண்டும்! வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்!

rama seyon

தமிழக காவல்துறையின் ஒரு அங்கமாகதிகழும் 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' அமைப்பினை பொதுமக்களின் நலன் கருதி உடனடியாகக் கலைக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Advertisment

இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் கூறுகையில், "காவல்துறைக்கு உதவும் வகையில், பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் ஒரு பாலமாக இருப்பதற்கு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்கிற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. எந்த நோக்கத்திற்காக அந்த அமைப்பு உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் தற்போது நாளுக்கு நாள் சிதைக்கப்பட்டு வருகிறது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த நபர்களுடைய அத்து மீறல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் கண்ணியமிக்க காவல்துறைக்குக் கடும் கெட்டபெயர் ஏற்படுகிறது. அவர்களின் எதேச்சை போக்கு, காவல்துறை அதிகாரிகளையே மிஞ்சும் அளவிற்கு மாறிவிட்டது.

Advertisment

வருடம் முழுவதும் குடும்பத்தை மறந்து, சுக துக்கங்களில் பங்கேற்க இயலாமல் மக்கள் பணியாற்றி வருகிற நேர்மையான காவல்துறையினருக்கும்கூட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒரு கறுப்பு மை.

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் நபர்களால் தனிநபர் வாழ்வு சிதைக்கப்படுகிறது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் நபர்கள் தங்களை காவலர்களாகவே மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்திக் கொண்டு பல்வேறு சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக காவல்துறைக்கு களங்கத்தை விளைவித்து வருகிறார்கள். இரவில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலருடன் இவர்கள் சென்று தூக்கம் இழந்து காவலர்கள் உரிய முறையான முழு பயிற்சியின்றி வலம் வந்து பகலில் உறங்கும் நிலை தவிர்க்க இயலாத ஒன்றாகி தனி மனித வாழ்வில் ஏற்றம் இன்றி வாழும் நிலை ஏற்படுகிறது. அவர்களுடைய குடும்பத்திற்கும் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. இந்த அமைப்பின் நபர்கள் தங்களை காவலர்களாக சித்தரித்துக்கொள்கிறார்கள். அவ்வாறு சித்தரித்துக் கொண்டு மக்களை அச்சுறுத்தும் அவதூறு நிலைக்கும் தங்களை உருவகப்படுத்திக் கொண்டுள்ளனர்.

காவல் துறைக்கான இடைத்தரகர்களாகவும் தங்களை மாற்றிக்கொண்டும், காவல்துறை பெயரைச் சொல்லி கையூட்டு பெற்றும் வருகிறார்கள். காவல் நிலைய செயல்பாடுகளில் அவர்களின் தலையீடு மிக மிக அதிகமாக இருக்கிறது. காவல் நிலைய விசாரணை செயல்பாடுகளில்கூட உடனிருந்து சட்டபூர்வமான அத்துமீறல்களைச் செய்கிறார்கள். காவல்துறையின் நடைமுறை மற்றும் ரகசியச் செயல்பாடுகளையும் வெளியில் கசிவதற்கு காரணமாக இருக்கிறார்கள்.

மேலும் காவல் நிலைய ஆவணங்களை கையாளும் சட்டவிரோத செயலையும் செய்கிறார்கள். காவலர்களின் மறு உருவமாகவே தங்களை நினைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். காவலர்களைப்போல் அங்கீகரிக்கப்பட்ட தடிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத தடிகளை கையில் வைத்துக்கொண்டு அத்துமீறி சட்டவிரோதமாக பயன்படுத்தி சமூகத்தை அச்சமூட்டி வருகிறார்கள். பல இடங்களில் அத்துமீறி வாக்கி டாக்கி தன்வசம் வைத்துக்கொண்டு அதனைப் பயன்படுத்துகிறார்கள்.

மேலும் பொதுமக்களை அவமதிப்பது, எடுத்தெறிந்து பேசுவது, மரியாதை குறைவாக நடத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டு வருகிறார்கள். பொதுவெளியில் கையில் தடியை வைத்துக்கொண்டு மக்களை தடியால் அடிப்பது, அவர்கள் கடும் சொற்களால் அழைப்பதும், திட்டுவதும் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை மாற்றி காவல்துறை பொதுமக்களின் எதிரியாக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் மாற்றிவருகிறார்கள்.

இந்த அமைப்பின் சட்ட விரோத செயல்பாடுகளால் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக வர்ணிக்கப்பட்ட தமிழக போலீஸ் தற்பொழுது தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் வில்லன்கள் ரேஞ்சுக்கு மக்கள் மனதிலே விதைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச்சார்ந்த நபர்களின் சட்டவிரோத செயல்களும் அடங்கும். அவர்கள் தங்களை காவல் அதிகாரிகளாக பாவித்துக்கொண்டு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் புரிந்து வரும் மனித உரிமை மீறல்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

http://onelink.to/nknapp

குறிப்பாக ஊரடங்கு காலத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செய்த அட்டூழியங்களை பட்டியலிட முடியாத அளவிற்குச் செய்திருக்கிறார்கள். வாகனங்களில் செல்வோரை தடியால் அடித்துநிறுத்துவதும், வாகனங்களில் செல்லும்போது தடியால் அடிப்பதும், தோப்புக்கரணம் போடச் சொல்வதும், வண்டிகளில் ஹெட்லைட்டை உடைப்பது போன்ற சட்ட விரோதச் செயல்களைத் தொடர்ந்து பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் செய்து வருகிறார்கள்.

ஆகவே தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைக் கலைத்து காவல்துறைக்கு கூடுதலான நபர்களை நியமனம் செய்து சட்டம் ஒழுங்கையும், மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்," என்கிறார் அவர்.

police Kumbakonam Association lawyers
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe