Skip to main content

புலம்பும் ரங்கசாமி; சுட்டிக்காட்டும் நாராயணசாமி

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

"Rangasamy who gave us trouble is now lamenting" Narayanasamy Open Talk

 

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டி பல்வேறு கோரிக்கைகள் நீண்டகாலமாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது. மத்திய ஆட்சியாளர்களின் தயவிலேயே புதுச்சேரி மாநில அரசு இருப்பதால் மாநில அந்தஸ்து வேண்டி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மாநில அந்தஸ்து வேண்டிப் போராடும் போராட்டக் குழுவினர் வெள்ளிக்கிழமை முதல்வர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினர்.

 

இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி, “உச்சநீதிமன்றம் தெளிவாகச் சொன்ன பிறகு நமக்கு மரியாதையே இல்லாத நிலை உருவாகியுள்ளது. அதிகாரம் இல்லாததால் அரசு ஊழியர்கள் சம்பந்தமாக நிறைவேற்றக்கூடிய திட்டங்களைக் கூட நிறைவேற்ற முடியவில்லை. இதனால் மன உளைச்சல் தான் ஏற்படுகிறது” என்று பேசியிருந்தார். 

 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “மத்திய நிதித்துறை அமைச்சர் புதுச்சேரிக்கு வந்தபோது புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும் எனச் சொன்னார். அதுவும் வழங்கப்படவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு கூறியுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி செய்கின்றனர். இந்தக் கூட்டணி அமைத்ததே மாநில அந்தஸ்து பெறத்தான் என முதல்வர் கூறியிருந்தார். ஆனால், இப்போது அதிகாரிகள் தொல்லை கொடுக்கின்றனர் எனப் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

 

அதே சமயத்தில், முதல்வரும் நானும் இணைந்து செயல்படுகிறோம் என ஆளுநர் தமிழிசை பகிரங்கமாகச் சொல்லி இருக்கிறார். முதல்வரோ அதிகாரிகளைக் குறை கூறுகிறார். கிரண்பேடி எங்கள் ஆட்சிக்குத் தொல்லை கொடுத்த போது வேடிக்கை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தவர்தான் ரங்கசாமி. கிரண்பேடியுடன் தொடர்பு கொண்டு எங்கள் திட்டங்கள் நிறைவேறாமல் தடுத்து நிறுத்தினார். உண்மையிலேயே தமிழிசை சூப்பர் முதலமைச்சராகவும் ரங்கசாமி பொம்மை முதலமைச்சராகவுமே செயல்படுகின்றனர்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'இந்த ஆட்சி குறைப் பிரசவ ஆட்சியாகத்தான் இருக்கும்' - நாராயணசாமி பேச்சு

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
 puducherry former cm Narayanasamy speech

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.

நாளை பிரதமர் பதவியேற்பு மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்தியில் பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது எனப் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், 'பிரதமர் நரேந்திர மோடி 400 இடங்களுக்கு மேல் பெறுவோம் என்று சொன்னவர் இப்பொழுது 240 இடங்களுக்கு பாஜக வந்த பிறகு, தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும். இந்த ஆட்சி குறைப் பிரசவமாகத்தான் இருக்கும். ஐந்து ஆண்டு காலம் இந்த ஆட்சி நடைபெறாது. சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் அனுபவம் மிக்க அரசியல்வாதிகள். நரேந்திர மோடியினுடைய சர்வாதிகாரப் போக்கிற்கும் அவர்களுக்கும் ஒத்து வராது. ஆகவே இந்த ஆட்சி வெகு விரைவில் கலைந்து விடும். நரேந்திர மோடியைக் கூட்டணிக் கட்சிகளே வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்'' என்றார்.

Next Story

“இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில்...” - கமல்ஹாசன் கண்டனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
kamal about pudhucherry child issue

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். அதனடிப்படையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றிப் பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர் என சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, சிறுமி மயங்கி விழுந்துள்ளதால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. 

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் நிறைய சம்பவங்களின் மேற்கோள்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.