Skip to main content

அமைதிப் புரட்சி செய்தார் லாலு பிரசாத்! ஆனால் இந்த ஆட்சியில் லாபம் வரவில்லை என... -கி.வீரமணி கண்டனம்

rr

 

பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமலேயே, சரக்குக் கட்டணத்தைக்கூட குறைவாக உயர்த்தி, ஏராளமான தடங்களில் புதுப்புது ரயில்களை விட்டும், வருவாயைப் பெருக்கியும், லாபம் குவித்தார் லாலு பிரசாத். சுமை தூக்கும் பணிபுரியும் போர்ட்டர்களைக்கூட ரயில்வே (அரசு) ஊழியர்களாக்கி அமைதிப் புரட்சி செய்தார். இந்த ஆட்சியில் லாபம் வரவில்லை என்று கூறியதோடு, தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டு தீவிர முயற்சியில் இறங்கிவிட்டனர் என கண்டனம் தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, ரயில்வே துறையை தனியாரிடம் விட ஆயத்தமாகி விட்டது. முதலில், ஒட்டகம் கூடாரத்திற்குள் தலையை நுழைப்பதுபோல, சில பயணிகள் ரயில்கள் தனியார் மயமாகும் வகையில் தனியார் ரயில்களை விடுவார்களாம்!

 

ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படியே....

நாட்டு மக்களின் எளிமையான குறைந்த கட்டணத்தில் பயணம் செய்திடவும்,  ஏராளமானவர்கள் எளிதில் எங்கும் செல்லவும் வாய்ப்பான ரயில்வேயை தனியார்களுக்கும் - கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் விடுவது என்பது திடீரென்று இவர்களுக்குத் தோன்றிய யோசனையோ, திட்டமோ அல்ல; அரசுத் துறை - பொதுத் துறையை அறவே ஒழிக்கவேண்டும் - சமதர்மச் சிந்தனையையும், செயலாக்கங்களையும் படிப்படியாக நீக்கவேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படியே, முதல்கட்டமாக இப்படிப்பட்ட முயற்சிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இந்த ஆட்சியில் - அதனிடம் உள்ள ஒரு மிருக பலத்தைப் பயன்படுத்தி திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்றே தோன்றுகிறது!

 

ரயில்வே பட்ஜெட்டை ஒழித்து -
பொது பட்ஜெட்!

முன்பே, பிரதமர் மோடி பதவியேற்றவுடன், ரயில்வே துறைக்கென, பொது பட்ஜெட்டுக்கு முன், தனி வரவு - செலவுத் திட்டங்கள், அதில் நாடு முழுவதற்கும் புதுப்புது ரயில்வே திட்டங்கள் - இவற்றை அறிவித்து, நாட்டில் பரவலாக போக்குவரத்து வசதி பெருக வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வந்த முறையை ஒழித்து, பொது பட்ஜெட் என்பதிலேயே ரயில்வே பட்ஜெட்டையும் இணைத்து முதற்கட்டமாக அதன் முக்கியத்துவமே குறைக்கப்பட்டது.

 

அமைதிப் புரட்சி செய்தார் லாலு பிரசாத்!

ரயில்வே துறை நட்டத்தில் இயங்குகிறது என்று ரயில்வே துறை அமைச்சர் கூறியது அதிர்ச்சிக்குரியதாக இருந்தது! ராஷ்டிரிய ஜனதா தள நிறுவனத் தலைவர், பீகாரின் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ் அவர்கள், ரயில்வே அமைச்சராக அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் (யு.பி.ஏ.) இடம் பெற்றிருந்தபோது, தனி வரலாறு படைத்துக் காட்டினார்! பல ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தை ஈட்டி, பொது பட்ஜெட்டிற்குக் கூடுதல் வருவாயாக அளித்தார்; பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமலேயே, சரக்குக் கட்டணத்தைக்கூட குறைவாக உயர்த்தி, ஏராளமான தடங்களில் புதுப்புது ரயில்களை விட்டும், வருவாயைப் பெருக்கி, லாபம் குவித்தார்; சுமை தூக்கும் பணிபுரியும் போர்ட்டர்களைக்கூட ரயில்வே (அரசு) ஊழியர்களாக்கி அமைதிப் புரட்சி செய்தார்!

இந்த ஆட்சியில் லாபம் வரவில்லை என்று கூறியதோடு, தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டு தீவிர முயற்சியில் இறங்கிவிட்டனர்; லாபம் ஈட்டும் பொதுத் துறை தொழில் நிறுவனங்கள் எல்லாம் தனியாருக்கு விற்கப்படுகின்றன. பொது சுரங்கங்கள்கூட இனி ஏலம் விடப்பட இருக்கின்றன. நாட்டின் பாதுகாப்புத் துறையில்கூட 100 சதவிகித தனியார் முதலீட்டை ஏற்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளது என்பது இறையாண்மையை எதிர்காலத்தில் கேள்விக்குறி ஆக்குவதல்லவா?

 

மக்கள் நலன்தான் ஓர் அரசின் முக்கிய குறிக்கோள்!

ரயில்கள்தான் ஏழைகளின் பயண வாகனம் - வசதிக்கான வாகனங்கள்! அதை தனியார் வசம் விட்டால், முதலில் கட்டணக் குறைப்பு போல காட்டி, பிறகு தங்கள் விருப்பம்போல் உயர்த்தி தனிக்காட்டு ராஜாவாகக் கொள்ளையடிக்க வாய்ப்பு ஏற்படும் - மக்கள் நலன்தான் ஓர் அரசின் முக்கிய குறிக்கோள்; சரியான நிர்வாகம் நடத்தினால், நட்டம் வர வாய்ப்பு இல்லை  என்பதற்கு, லாலு நிர்வாக சாதனையே சாட்சி!

 

K. Veeramani

 

அப்படியே இருந்தாலும், நட்டமே வந்தாலும், பொருளாதார தத்துவப்படி -Cost of Service;  value of Service என்ற இரண்டு விதிகளுக்கிடையே, அதாவது அரசுகள் மக்களின் நலம் கருதி நட்டத்தை ஏற்பதுகூட சில சேவைகளுக்கு முக்கியமாகும்; உதாரணம், அஞ்சல்துறை. (கார்டு அச்சிடுவதுகூட  அதிக செலவு என்றாலும், ஏழை, எளிய மக்களுக்கு உதவிட அதைக் குறைந்த விலையில் விற்பது ஓர் உதாரணம்).

 

எனவே, மக்கள் வரிப் பணத்தில், அரசுகள் மக்கள் நல அரசுகளாக நடப்பதே சரி!

ஆகும் செலவு - அடக்கம் தாண்டி, அதன் விழுமிய பயன் ஏழை, எளிய மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதை பொருளாதாரம் பயின்ற எவரும் அறிவர். இது பொது விதி. அதை ஏன் மத்திய அரசு புரிந்துகொள்ளாமல், தனியாருக்குக் கதவு திறந்துவிடவேண்டும்?

 

மறுபரிசீலனை தேவை!

தனியார் துறைக்கு ரயில்வே போனால்,  சமூகநீதி என்ற இட ஒதுக்கீடு தற்போது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு - பொதுத்துறை என்பதால் கிடைக்கும் வசதி அறவே ஒழிக்கப்பட்டுவிடும். இந்த ஆபத்தும் இதில் உள்அடக்க நோக்கமாகும்.

அண்மையில் மத்திய பா.ஜ.க. அரசு, இந்திய ரயில்வேயில் புதிய பணியிடங்களை நிரப்ப தடை விதித்துள்ளது என்பதே இதற்குப் போதிய ஆதாரமாகும். இதை ரயில்வே தொழிலாளர் சங்கங்களும் எதிர்த்திருப்பது வரவேற்கத்தக்கது.

எனவே, அனைத்துக் கட்சிகள், சமூக நல அமைப்புகள் இணைந்து இதனை எதிர்த்து, இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வற்புறுத்தி, மக்கள் கருத்தை உருவாக்க முன்வருதல் அவசரம், அவசியம்! மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும்!” இவ்வாறு கூறியுள்ளார். 

 

இதை படிக்காம போயிடாதீங்க !