Skip to main content

மக்களைக் காப்பாற்ற வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் குடியரசுத் தலைவருக்குக் கடிதம்...

Published on 29/07/2020 | Edited on 29/07/2020

 

vvvvv

 

நாட்டு மக்களைக் காப்பாற்றிட, மத்திய மாநில அரசுகளுக்குக் கட்டளையிடமாறு குடியரசுத் தலைவருக்கு, மத்தியத் தொழிற்சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளன.

 

நாட்டு மக்களைக் காப்பாற்றிட, அரசமைப்புச் சட்டத்தின் தலைவர் என்ற முறையில், மத்திய மாநில அரசுகளுக்கு உரிய கட்டளைகளைப் பிறப்பித்திட வேண்டும் என்று நாட்டின் குடியரசுத் தலைவர், ராம் நாத் கோவிந்துக்கு, மத்தியத் தொழிற்சங்கங்கள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச. உட்பட பத்து தொழிற்சங்கங்கள் சார்பில் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

 

1) கோவிட்-19 கரோனோ வைரஸ் தொற்று சம்பந்தமாக, திடீரென்று, திட்டமிடல் எதுவுமின்றி, மத்திய அரசாங்கத்தாலும் அதன் நிர்வாகத்தாலும் திணிக்கப்பட்ட தேசிய அளவிலான சமூக முடக்கம், தொழிலாளர் வர்க்கத்துக்கு, குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்களுக்கு, பேரழிவினை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

நாட்கள் செல்லச்செல்ல அவர்கள் உயிர்வாழ்வதற்கு எவ்விதமான ஆதரவுமின்றி தத்தளித்துக் கொண்டிருப்பது தெளிவாகவே தெரிகிறது. மிகவும் காலங்கடந்து தொழிலாளர்துறை அமைச்சகத்தாலும், உள்துறை அமைச்சகத்தாலும் வெளியிடப்பட்டிருக்கிற சில “ஆலோசனைகளும்” கூட அவர்களுக்கு எவ்விதத்திலும் உதவிடவில்லை. 

 

உண்மையில் அத்தகைய “ஆலோசனைகளும்” கூட அமல்படுத்தப்படாமலேயே, அரசாங்கத்தால் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன.

 

2. நாட்டில் சுகாதார அமைப்புமுறை போதுமானதாக இல்லை என்பது மிகவும் பரிதாபகரமான முறையில் தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனைகள் அதீக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்கிற அரசாங்கத்தின் ஆணைகளை அவை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. அவர்கள் கோரும் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு, சிகிச்சை அளிக்காமல், கதவுகளைச் சாத்திக்கொள்கின்றன. கோவிட்-19 சிகிச்சை செய்திடும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள், சுத்தம் செய்யும் கருவிகள் முதலானவை அவர்களுக்குப் போதிய அளவிற்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அரசாங்க மருத்துவமனைகளில் மருத்துவர்கள், ஊழியர்கள், ஒப்புதல் பெற்ற சமூக சுகாதார ஊழியர் (Accredited Social Health Activist) எனப்படும் “ஆஷா” ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மாநகராட்சி, நகராட்சி துப்புரவு ஊழியர்கள் ஓய்வேதுமின்றி இரவுபகலாகத் தங்கள் உயிர்க்கு ஆபத்து இருப்பதையும் பொருட்படுத்தாது பணிசெய்துகொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் இதன் காரணமாக தங்கள் இன்னுயிரையும் இழந்திருக்கிறார்கள். மக்களின் அன்புக்கும் போற்றுதலுக்கும் உரியவர்களாக மாறி இருக்கிறார்கள். ஆயினும் அரசாங்கத்தால் தூக்கிப்பிடிக்கப்படும் தனியார்துறை இதில் படுதோல்வி அடைந்திருக்கிறது.

 

3. அடுத்ததாக, பொருளாதாரச் சக்கரம் தடம்புரண்டு சென்றிருப்பதை மீண்டும் சரியான தடத்தில் நிலைநிறுத்தவதாகக் கூறிக்கொண்டு, அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. புகழ்பெற்ற பொருளாதார மேதைகளின் அறிவுரைகளைக் கேட்பதற்கோ அல்லது கடந்தகால அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதற்கோ அது மறுக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று நாட்டைப் பீடிப்பதற்கு முன்னமேயே நாட்டில் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கித் தள்ளப்பட்டுவிட்டது. இவற்றின் காரணமாக மக்களின் வாங்கும் சக்தி மிகவும் மோசமான முறையில் குறைந்துவிட்டது.

 

மக்களின் கைகளில் பணப்புழக்கம் இருப்பது அவசியம். திடீர் சமூக முடக்கம் மக்களின் பிரச்சனைகளை அதிகப்படுத்துவிட்டது. இப்பிரச்சனைகளைச் சரி செய்திட, அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும்? மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் என்ன செய்திருக்கிறது? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வை முடக்கி வைத்திருக்கிறது. தொழிலாளர்நலச் சட்டங்களையும், உச்சநீதிமன்றத்தின் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ தொடர்பான தீர்ப்புகளையும், “வர்த்தகம் செய்வதை எளிதாக்குகிறோம்” என்ற பெயரில் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.

 

மேலும் தற்போது மிகவும் பலவீனமான வடிவத்தில் இருந்துவரும் தொழிலாளர் நலச் சட்டங்களையும்கூட, ஆயிரம் நாட்களுக்கு அல்லது அதற்கும் மேலான நாட்களுக்கு பல மாநிலங்கள், தங்களுடைய நிர்வாக உத்தரவுகள்/அவசரச் சட்டங்கள்மூலமாக ‘சஸ்பெண்ட்’ செய்து வைத்திருக்கின்றன. (இது தொடர்பாக இந்திய தொழிலாளர் ஸ்தாபனம், பல்வேறு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் கன்வென்ஷன்களை அரசாங்கத்திற்கு நினைவுபடுத்திட வேண்டி இருந்தது). பொதுத்துறை நிறுவனங்களை நூறு சதவீத அளவிற்கு அந்நிய நேரடி முதலீட்டுக்கு அகலத்திறந்து விட்டிருக்கிறது. இவை அனைத்தையும் மத்திய அரசு, சமூக முடக்கக் காலத்திலேயே செய்திருக்கிறது.

 

பி.பி.சி.எல் (BPCL), எல்.ஐ.சி., கோல் இந்தியா, மின்சாரத் துறை, துப்பாக்கித் தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகள் (ordnance factories), ரயில்வே, ரயில்வே போக்குவரத்து மார்க்கங்கள், மற்றும் ரயில்வேயின் உற்பத்தி/பராமரிப்பு பட்டறைகள், விமான நிலையங்கள் என அனைத்தையும் தனியாருக்குத் தாரை வார்த்திட முன்வந்திருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எவ்விதமான உதவியும் செய்யாத அதே சமயத்தில் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதைக்கூட தடுக்கும் வேலைகளில் தனியார் துறையில் உள்ள பிற்போக்கு சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன.

 

கையறுநிலையில் அவர்கள் கூட்டம் கூட்டமாக ரயில்நிலையங்களில் திரண்டிருப்பது கூட சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாக மத்திய, மாநில அரசுகளால் பார்க்கப்படுகின்றன. இத்தகு பிரச்சனைகளை மனிதாபிமான முறையிலும், உச்சபட்ச முன்னுரிமை அளித்துக் கையாள அரசாங்கங்களுக்கு அறிவுறுத்திட, உச்சநீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது. வேளாண் தொழில் அவசரச்சட்டங்கள் மூலமாக கார்ப்பரேட்மயமாக்கப் பட்டிருக்கிறது. மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்குப் பதிலாக, அவர்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது, (அதாவது demand side எவ்வித உதவியும் செய்யாமல்) உற்பத்தியிலும் விநியோகத்திலும் ஈடுபடும் பகுதியினருக்கு மட்டும் (supply sideக்கு மட்டும்) மீளவும் 20 லட்சம் கோடி ரூபாய் நிதித்தொகுப்பை அரசாங்கம் அளித்திருக்கிறது.

 

ஏழைகள் அனைவருக்கும், வருமானவரி செலுத்தாத குடும்பத்தினர் அனைவருக்கும் நேரடி வருமானத்திற்கான ஆதரவை அளிக்கவும், போதுமான அளவு உணவுப் பொருள்களை அளிக்கவும் ஒட்டுமொத்த தொழிற்சங்கங்களும் விடுத்த அறைகூவலை, அரசாங்கம் அரக்கத்தனமான முறையில் ஒதுக்கித்தள்ளியிருக்கிறது.

 

4. இப்போது, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் ‘ஒப்புதல் பெற்ற சமூக சுகாதார ஊழியர்கள்’ (‘ஆஷா’ ஊழியர்கள்) ஊதியம் அளிக்கப்படாதிருக்கிறார்கள் என்ற செய்தி வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

 

மாநில அரசாங்கங்களுக்கு, அவற்றுக்குத்தரவேண்டிய ஜிஎஸ்டி பங்குத்தொகை அளிக்கப்படவில்லை. வருமான வரி செலுத்துவோருக்கு இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் சுமையைப் பகிர்ந்துகொள்ள எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக வருமானவரி செலுத்தாத பகுதியினருக்கு மட்டும் நாளும் உயரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக சுமைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகரித்திருப்பதாகவும் அது “நாட்டின் முன்னேற்றத்தைக்” (“national progress”) காட்டுவதாகவும் தம்பட்டம் அடிக்கப்படும் அதே சமயத்தில், சமூக முடக்கக் காலத்தில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து, அவர்களின் சமமான விநியோகம் (equitable distribution) குறைந்துள்ளதை அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை.

 

5. இப்பிரச்சனைகள் அனைத்தையும், ஒட்டுமொத்தத் தொழிற்சங்கங்களும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிடம் முறையீடுகள், ஆர்ப்பாட்டங்கள் மூலமாக அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்தபோதிலும், அவை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கம் ஒட்டுமொத்தமாக அசமந்தமாக இருந்துவருகிறது. 2015இல் இருந்து பலமுறை கோரியும்கூட நாட்டின் உச்சபட்ச முத்தரப்பு அமைப்பாக விளங்கும் இந்தியத் தொழிலாளர் மாநாட்டை (Indian Labour Conference)க் கூட்டிடய அரசாங்கம் தயாராயில்லை.

 

மேற்கண்ட பிரச்சனைகள் காரணமாக, இதில் கையொப்பமிட்டிருக்கிற நாங்கள், நாட்டின் அரசமைப்புச்சட்டத்தின் தலைவர் என்ற முறையில் தாங்கள் கீழ்க்கண்டமுறையில் நடவடிக்கைகள் எடுத்திட, மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

 

6. 2020 மார்ச் 25 நள்ளிரவிலிருந்து, திடீர் சமூக முடக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பவர்களுக்குப் போதுமான இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். • நாட்டில் உள்ள மக்களில் வருமான வரி செலுத்தாத குடும்பங்கள் அனைத்திற்கும், அவர்களிடம் ரேஷன் கார்டுகள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அனைத்துக் குடும்பத்தினருக்கும் அடுத்த ஆறு மாதங்களுக்கு இலவச ரேஷன் அளித்திட வேண்டும். • வருமான வரி செலுத்தாத குடும்பத்தினர் அனைவருக்கும் அடுத்த ஆறுமாத காலத்திற்கு நபர் ஒருவருக்கு 7500 ரூபாய் வீதம் ரொக்க மாற்று அளித்திட வேண்டும். 60 வயதுக்கும் மேலானவர்களுக்கு வாழ்க்கைச் செலவுடன் இணைத்து 3000 ரூபாய் மாதந்தோறும் அளித்திட வேண்டும். • ஆதார் அட்டை வைத்திருக்கிற அனைத்துத் தொழிலாளர்களுக்கும் திறன் அடையாள அட்டை (Smart Id Card) அளித்து, அவர்கள் அனைவருக்கும் அது அவர்களின் சமூகப் பாதுகாப்புப் பயன்பாடுகளுக்குப் பயன்படுமாறு செய்திட வேண்டும்.

 

7. முறைசாராத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் ஷரத்துக்களின் கிழ் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்துவதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் தொகுப்புடன் ஒவ்வோராண்டும் சுழலும் விதித்தில் (a revolving annual FUND) ஒரு நிதியத்தை உருவாக்கிட வேண்டும். • நாட்டிலுள்ள 41 துப்பாக்கித் தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகளை (ordnance factories), தனியாரிடம் தாரைவார்த்திடும் முடிவை ரத்து செய்திட வேண்டும். அதேபோன்று ராணுவத்தின் கீழ் இயங்கிவரும் பல்வேறு தொழில்பட்டறைகளையும் தனியாரிடம் தாரை வார்க்கும் முடிவுகளை ரத்து செய்திட வேண்டும்.

 

ரயில்வே உற்பத்திப் பிரிவுகள் பலவற்றை முதலில் கார்ப்பரேட்மயமாக்கி, பின்னர் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவையும் 109 ரயில் போக்குவரத்து மார்க்கங்களைத் தனியாரிடம் தாரைவார்த்திடும் முடிவையும் ரத்து செய்திட வேண்டும்.

 

8. மாநிலப் போக்குவரத்து, எல்ஐசி, வங்கிகள், நிலக்கரி, பிபிசிஎல், ஏர் இந்தியா, விமான நிலையங்கள், டெலிகாம், துறைமுகங்கள் மற்றும் நகர்மன்ற சேவைகள் முதலானவற்றையும் தனியாரிடம் தாரை வார்த்திடும் முடிவுகளை ரத்து செய்திட வேண்டும்.

 

9. தொழிலாளர் நலச் சட்டங்களை, தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றும் விதத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்களை நிறுத்தி வைத்திட வேண்டும். தொழிலாளர்நலச் சட்டங்கள் அனைத்தையும் நான்கு தொழிலாளர் சட்டங்களாக மாற்றும் முயற்சியை நிறுத்தி வைத்திட வேண்டும்.

 

இவை தொடர்பாக இந்தியத் தொழிலாளர் மாநாட்டை உடனடியாகக் கூட்டி அதன்பின்னரே இவற்றின்மீது நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

 

10. சுகாதாரம், கல்வி மற்றும் வேளாண்மையை விரிவாக்கும் விதத்தில் முதலீடு செய்யப்பட வேண்டும். இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தைத் திருத்துவது உட்பட வேளாண்மை தொடர்பாகக்கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்திட வேண்டும்.

 

http://onelink.to/nknapp

 

11. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் அமலாக்கத்தை வலுவாகச் செய்யக்கூடிய விதத்தில் பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 200 நாட்களுக்கு வேலை அளிக்கும் விதத்திலும், நாள் ஊதியத்தை 202 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தும் விதத்திலும் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். இதேபோன்று நகர்ப்புறப் பகுதிகளிலும் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய விதத்தில் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும்.

 

12. வங்கிகளில் கடன்பெற்றுவிட்டு, வேண்டுமென்றே தவறியிருக்கும் பேர்வழிகளிடம் கடன்களை வசூல் செய்திட, கிரிமினல் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

 

இவ்வாறு மத்தியத் தொழிற்சங்கங்கள் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பணி நிரந்தரம் செய்யக் கோரி அனல் மின் நிலைய தொழிலாளர்கள் பேரணி (படங்கள்)

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

பணி நிரந்தரம் கோரி வல்லூர் அனல் மின் நிலைய தொழிலாளர்கள் சென்னை எழும்பூரில் பேரணி நடத்தினர். சி.ஐ.டி.யு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சங்கத்தின் தலைவர் கே.விஜயன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story

ஒன்றிய அமைச்சரை கைது செய்ய வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூரில் 2021ஆம் ஆண்டு விவசாயிகள் மீது காரை ஏற்றி 9 பேரை படுகொலை செய்த ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.