Skip to main content

கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்துகொள்ளலாமா? கி.வீரமணி

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

 

வரலாறு காணாத குடிநீர்ப் பற்றாக் குறையால் மக்கள் சொல்லொணா அவதிக்கு ஆளாகியுள்ளனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி உரிய வகையில்  தீர்வு காணாமல் பி.ஜே.பி. பாதையில் பக்திப் போதையை ஊட்டி, திசை திருப்பலாம் என்று தமிழக அரசு கனவு கண்டால், அது கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்துகொள்வதற்குச் சமம் - வரலாறு பாடம் கற்பிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:- 
 

தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் குடி தண்ணீர்ப் பஞ்சத்தால் ஏழை, எளிய, நடுத்தர குடிமக்கள் பெரும்பாலோரும், நகரின் புறநகர் பகுதிவாழ் மக்களும் நாளும் அவுதியுறுகிறார்கள்.
 

இது திடீரென்று ஏற்பட்டதல்ல. பருவ மழை பொய்த்தது; பெய்த அளவும் வெகுவாகக் குறைந்தது என்பது தெளிவாக மத்திய - மாநில அரசுகளுக்குத் தெரிந்த ஒன்றே!


தமிழ்நாட்டில் ஏற்கெனவே பலமுறை சில ஆண்டுகளுக்குமுன் பெய்த மழை வெள்ளப் பெருக்கின்போது, போதிய நீர் மோலண்மைத் திட்டம் கைக்கொள்ளப்படாததால், பெய்த மழை வெள்ளமாகக் கடலுக்குச் சென்று வீணானது. இதை நீர்வளத் துறை மேலாண்மை நிபுணர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் அப்போதே சுட்டிக்காட்டியும் இருக்கின்றனர்!

 

k.veeramani dk


 

இந்து அறநிலையத் துறையின் சட்ட விரோத ஆணை
 

வறட்சி - ஏரி, குளங்கள் எல்லாம் வற்றி விட்ட பிறகு, தமிழக அரசு குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண சரியான அணுகுமுறை மேற்கொள்ள முயற்சிக்காதது மட்டுமல்ல, மதச்சார்பின்மை கொள்கைக்கே முற்றிலும் விரோதமாக ‘‘மழைக்காக யாகம் செய்யுங்கள்’’ என்று  இந்து அறநிலையத் துறை ஆணையிட்டுள்ளது. அறநிலையத் துறையின் அடிப்படை வேலை தணிக்கையே தவிர, பக்தி, மூடநம்பிக்கையைப் பரப்புவதோ, திராவிடக் கலாச்சாரம் மீறிய ஒரு ‘‘யாகக் கலாச்சாரத்தைப்’’ புதுப்பிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதோ அல்ல - இது மகாவெட்கக்கேடு!
 

இந்திய அரசமைப்புச் சட்ட விரோதம் (51ஏ-எச்)  - அறிவியல் மனப்பான்மையை ஒவ்வொரு குடிமகனிடத்தும் பரப்பவேண்டும் என்ற அடிப்படை சட்டத்திற்கே இது விரோதப் போக்கு என்பதைப் பலமுறை இதற்கு முன்பே சுட்டிக்காட்டினோம்.


 

யாகம் செய்து என்ன பயன்? 100 நாள்களுக்குமேல் மழை பெய்யவில்லையே!
 

காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை!
 

இப்போது தென்மேற்கு பருவக் காற்று வீசி, மழை வரும் என்று வானிலை ஆய்வாளர்கள் சொன்ன பிறகு, அமைச்சர்கள் யாகம் செய்ய மாலை போட்டுக்கொண்டு, வித்தைக் காட்டியுள்ளனர்! சில இடங்களில் மழை பெய்ததை வைத்து - பா.ஜ.க. தலைவர் ஒரு அம்மையார், ‘‘யாகம் செய்தார்கள் மழை வந்தது’’ என்கிறார்!
 

‘‘காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது’’ என்ற பழமொழி, ‘‘சேவல் கூவியதால்தான் பொழுது விடிந்தது’’ என்பதுபோன்ற ஏமாற்று வித்தைகளில் இதுவும் ஒன்றே தவிர, மக்களை இப்படி பக்திப் போதைமூலம் ஏமாற்ற முடியாது; கூடாது.

யாகம் செய்தால்தான் வருண பகவான் மழையை கொடுப்பானா? கருணையே உருவானவன் கடவுள் என்றது என்னாயிற்று? பொய்தானா?


அது ஒருபுறம் இருக்கட்டும்; எதிர்க்கட்சியினர் தி.மு.க. தலைமையில் போராட்டம் நடத்துகிறார்களே என்று குறை கூறுவோரைக் கேட்கிறோம்!
 

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாதது ஏன்?
 

அ.தி.மு.க. அரசு இப்பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, இப்பிரச்சினைக்கு அனைவரும் சேர்ந்து தீர்வு காணவேண்டும்; விநியோகிக்கப்படும் குடிநீர் சரியான அளவில் மக்களுக்குக் கிடைத்திட அனைத்துத் தரப்பினரும் ஆங்காங்கே கண்காணிப்புக் குழு போட்டு, போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு பிரச்சினையைத் தீர்ப்போம் என்று நடவடிக்கை எடுத்ததா?
 

ஒதுக்கப்படும் நிதியைச் செலவழித்து, ஏற்கெனவே என்னென்ன திட்டங்கள்மூலம் பிரச்சினையை சமாளிக்கலாம் என்பதையெல்லாம் உள்ளடக்கிய ஒரு வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்த நடவடிக்கைகள் உண்டா?


தமிழ்நாட்டு (ஓய்வு பெற்ற) நீர்வளத் துறை மேலாண்மையர்களை அழைத்து ஒரு திட்டம் தீட்டப்பட்டதா?
 

அமைச்சர்களின் உண்மைக்கு மாறான பிரச்சாரம்

எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முன்னால், பாதிக்கப்பட்ட மக்கள், தாய்மார்கள் வெகுண்டெழுந்து துயரத்தை வெளிப்படுத்தினார்களே, அப்போதே அ.தி.மு.க. அரசின் அமைச்சர்கள் எப்படி இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டார்கள்?
 

‘‘குடிநீர்ப் பஞ்சமே இல்லை; இது வெறும் வதந்தி, ஊடகங்கள் இதை ஊதிப் பெரிதுபடுத்துகின்றன’’ என்று கூறியதால்தானே எதிர்க்கட்சிகள் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள் - தேவைப்படுகிறது.
 

பல மாதங்களுக்கு முன்பே, தமிழக அரசு இதை ஒரு பொதுப் பிரச்சினையாகப் பார்த்து, அனைவரையும் ஒருங்கிணைத்துத் தீர்வு காணவேண்டும் என்று எழுதினோம். பேட்டிகளில் கூறினோம். அரசின் செவிகளில் விழுந்ததாகத் தெரியவில்லை.
 

கேரள முதலமைச்சர் 20 லட்சம் கனஅடி தண்ணீர் தர தாமே முன்வந்து அறிவித்ததை சரியாகப் பெற முயற்சிக்காமல், வேறு நிபந்தனைகளைக் கூற இதுவா சரியான நேரம்?

 

admk ops-eps


 

கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்துகொள்ளலாமா?
 

தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். காவிகள் - பக்தி என்ற மயக்க பிஸ்கெட், புஷ்கரணிகள், சாமியார்கள், யாகங்கள் மூலம் பாமர மக்களை ஏமாற்றி, அரசியல் ஆதாயமாக அதைப் பயன்படுத்தலாம் என்றால், அவர்களது திட்டத்தை நிறைவேற்றும் முகவர்கள் போல அ.தி.மு.க.  அமைச்சர்கள், ஆட்சியின் நடவடிக்கைகள் அமைவது கொள்ளிக்கட்டையை எடுத்து, தலையைச் சொறிந்துகொள்வது; தங்களுக்குத் தாங்களே குழிவெட்டிக் கொள்வது என்பது - இப்போது புரியாவிட்டால் பிறகாவது புரியும்!
 

வரலாறு கற்றுத் தரும்!
 

தமிழ்நாட்டில் பக்திப் போதையின் பக்கம் அரசியலைத் திருப்பிவிடத் திட்டமிடுவதன்மூலம் தமிழ்நாட்டை வயப்படுத்தும் பா.ஜ.க. முயற்சி  வெறும் கானல் நீர் வேட்டையாகவே முடியும் என்பதை வரலாறு இனிமேலும் கற்றுத்தரும்!
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.