Kushboo Tweet about Uttar Pradesh farmers issue

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாவட்டத்தில் இணையச் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்தச் சம்பவத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் அவர், “உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி 8 பேரைக் கொன்றது கடுமையான குற்றம். எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் வழக்குப் பதிவுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உயிரைவிட வேறெதுவும் முக்கியமில்லை. மனிதாபிமானம் இந்த நாட்டின் சாராம்சம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment