Advertisment

மாஃபா பண்டியராஜனை கடுமையாக விமர்சித்த கே.டி. ராஜேந்திர பாலாஜி!

Advertisment

 Kt Rajendra Balaji strongly criticized Mafa Pandiarajan

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (06.03.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி .ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எனப் பலரும் கலந்து கொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக மேடையில் அமர்ந்திருந்தவர்களுக்குப் பொன்னாடை அணிவிக்க அதிமுக நிர்வாகிகள் வந்தனர். அந்த வகையில் விருதுநகர் கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் என்பவர் (வயது 52), பொன்னாடை அணிவிக்க வந்தார்.

அதன்படி நந்தகுமார் கே.டி. ராஜேந்திர பாலாஜிக்குப் பொன்னாடை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு அருகே இருந்த மாஃபா பாண்டியராஜனுக்கும் பொன்னாடை அணிவிக்கச் சென்றார். அப்போது திடீரென எழுந்த கே.டி. ராஜேந்திர பாலாஜி,நந்தகுமாரை நோக்கி “யார் மாவட்டச் செயலாளர் எனத் தெரியாதா?”எனக் கேட்டு கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்குச் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நந்தகுமாரை மேடையிலிருந்து இறக்கிய கட்சி நிர்வாகிகள் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அதே சமயம் மாஃபா பாண்டியராஜனும் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து மாஃபா பாண்டியராஜன், “விருதுநகர் மாவட்ட அதிமுகவில் ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர் போலச் செயல்படுகிறார்” எனத் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராஜேந்திர பாலாஜி கட்சி நிகழ்ச்சி ஒன்றில்பேசுகையில், “நீ (மாஃபா பாண்டியராஜன் பெயரைக் குறிப்பிடாமல்) செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் கிறுக்கனோ பைத்தியக்காரனோ இல்லை. தொலைத்துவிடுவேன். அதிமுகவைக் காட்டிக் கொடுத்தவர் நீ. எனக்கு வரலாறு இருக்கிறது. உனக்கு என்ன வரலாறு இருக்கிறது?. அதிமுகவில் நான் ஒரு குறுநில மன்னர்தான். எனக்குப் பின்னால் உள்ள தொண்டர்கள் வாள் ஏந்திய படைவீரர்கள். என்னைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் விருதுநகரில் வைத்துப் பேச வேண்டும். சென்னையில் சென்று ஏன் பேசுகிறார்? வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் அதிமுகவில்தான் இருப்பேன்.

அதிமுகவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து எடப்பாடிக்குக் குழி பறிக்கும் வேலை நடந்து வருகிறது.விருதுநகர் அதிமுகவில் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. அதிமுகவை வாழ வைக்க எந்த நிலைக்கும் நான் செல்வேன். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக யார் வந்தாலும் அரிவாள், துப்பாக்கி ஏந்தி நிற்பேன். உன்னால் முடியுமா?. மாவட்டச் செயலாளராக நான் இருக்கும் போது மாஃபா பண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தால் விட்டுவிடுவேனா?. பல கட்சிக்குச் சென்றுவிட்டு வந்த மாஃபா பாண்டிய ராஜனுக்குச் சால்வை அணிவித்ததால்தான் கன்னத்திலே அறைந்தேன். உன் மீது ஏதாவது வழக்கு இருந்தால் உடனே வேறு கட்சிக்குச் சென்றுவிடுவாய். ஆனால் நான் அப்படி இல்லை. போராடுவேன். நான் சி.பி.ஐ.க்கே பயப்பட மாட்டேன். காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக, தேமுதிக, அதிமுக, ஓ.பி.எஸ். அணி, மீண்டும் அதிமுக எனக் கட்சி மாறியவர்” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். கே.டி. ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

admk Sivakasi
இதையும் படியுங்கள்
Subscribe