Skip to main content

மனநோயாளியின் உளறலாகவே ராஜேந்திர பாலாஜி பேச்சு இருந்து வருகிறது: கே.எஸ்.அழகிரி

Published on 04/02/2020 | Edited on 04/02/2020



 

ஒரு மனநோயாளியின் உளறலாகவே ராஜேந்திர பாலாஜி பேச்சு இருந்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் கவலைப்பட்டதாக தெரியவில்லை என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைகிறவரை வாய்மூடி மௌனிகளாகவும், கொத்தடிமைகளாகவும் இருந்த அமைச்சர்கள் இன்றைக்கு வரம்பு மீறி அநாகரீகமாகப் பலகுரல்களில் பேசுகிற சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இவர்களை கட்டுப்படுத்துகிற அதிகாரம் இல்லாதவராக இருக்கிறாரா? இத்தகைய அநாகரீகப் பேச்சுகள் நடைபெறுவதற்கு மறைமுகமாக ஊக்கம் தருகிறாரா? இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பத்திரிகையாளர்களிடம் வாய்க்கு வந்தபடி கீழ்த்தரமான அநாகரீகமான வார்த்தைகளை சமீபத்தில் அள்ளி வீசியிருக்கிறார். 
 

ks alagiri



 

தமிழக அரசு கேட்பதையெல்லாம் நரேந்திர மோடி அரசு வாரி வழங்குவதாக கூறிய ராஜேந்திர பாலாஜி, மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கியிருப்பதை குறிப்பிடுகிறார். மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களை நிரப்புவது யார்? தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் தேர்வு காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வெளி மாநில மாணவர்கள்தான் அந்த இடத்தை நிரப்பி வருகிறார்கள் என்பதை ராஜேந்திர பாலாஜி அறிவாரா? தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவிற்கு மோடி அரசிடமிருந்து இதுவரை ஒப்புதல் பெற முடியாத அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பா.ஜ.க. விற்கு பல்லக்கு தூக்குவது ஏன்? தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழடித்து வருகிற நீட் தேர்வு திணிக்கப்படுவதை தடுக்கமுடியாத நிலையில் இருக்கிற அ.தி.மு.க. அமைச்சர்கள் இப்படி பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? 
 

திருச்சியில் பா.ஜ.க. நிர்வாகி கொல்லப்பட்டதற்கு தனிப்பட்ட பகைதான் காரணமே தவிர மதமோ, அரசியலோ காரணமல்ல என்பதை காவல்துறையினர் தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள். கொலையாளிகளை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஆனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ இந்தக் கொலைக்குக் காரணம் இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று பேசியிருப்பது அப்பட்டமான சட்டவிரோதப் பேச்சாகும். அவரது பேச்சுக்கு என்ன ஆதாரம்? ஒரு அமைச்சரே, ஒரு கொலை குறித்து ஆதாரமற்ற கருத்துக்களை பொறுப்பற்ற முறையில் கூறினால் காவல்துறையினரின் விசாரணையை பாதிக்காதா? சமீபகாலமாக பா.ஜ.க. வின் ஊதுகுழலாக ராஜேந்திர பாலாஜி மாறியது ஏன்? 


 

ராஜேந்திர பாலாஜியின் பேட்டியைப் பார்க்கின்ற எவரும் இவரை ஒரு மனநோயாளியாகத்தான் பார்ப்பார்கள். எதைப் பேசுவது, எதைப் பேசக்கூடாது என்கிற அடிப்படை நாகரீகம் கூட அறியாத வகையில் அனைத்துக் கட்சிகளின் மீதும் சேற்றை வாரி இறைத்திருக்கிறார். இவரது பேச்சை ஆய்வு செய்கிற எவரும் இனி ஒரு நிமிடம் கூட இவர் அமைச்சரவையில் நீடிப்பதற்கு தகுதியற்றவர் என்ற முடிவுக்குத்தான் வருவார்கள். ஏனெனில், இவரது பேச்சு மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற வகையிலும், மதங்களிடையே வன்மத்தை வளர்த்து கலவரத்தை உருவாக்குகிற வகையிலும் இருப்பதை எவரும் மறுக்கமுடியாது. 
 

ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதால் ஊடக வெளிச்சமும் கூடுதலாக கிடைக்கிறது. இதில் மயக்கமுற்று கிடக்கிற அவர், ஆக்கப்பூர்வமாக பேசுவதற்கு அருகதை இல்லாத காரணத்தால் ஒரு மனநோயாளியின் உளறலாகவே அவரது பேச்சு இருந்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. 


 

மதநல்லிணக்கத்தை குலைத்து, வன்முறையைத் தூண்டுகிற முறையில்; இவரது பேச்சு இருப்பதால் உடனடியாக ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும். இப்பேச்சு அரசமைப்புச் சட்டப்படி எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு எதிரானதாகும். எனவே, முதலமைச்சர் இவரை பதவியை விட்டு நீக்க வேண்டும். இல்லையென்றால், ஆளுநர் தலையிட்டு இவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில், இவரது பேச்சு அப்பட்டமான சட்டவிரோதமாக அமைந்திருப்பதால் அமைச்சரவையில் இவர் தொடர்ந்து நீடிப்பாரேயானால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மதக்கலவரங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உருவாகிவிடுமென எச்சரிக்க விரும்புகிறேன். தமிழகத்தில் ரத்தக்களறியை உருவாக்குவதுதான் ராஜேந்திர பாலாஜியின் நோக்கம் என்றால் அதை முறியடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஜனநாயக மதச்சார்ப்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“எடப்பாடி பழனிசாமியின் பாதகச் செயல்களை மக்கள் மறக்க மாட்டார்கள்” - திமுக காட்டம்! 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டம், உதய்மின் திட்டம் போன்ற பா.ஜ.க. அரசின் எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த பழனிசாமியின் பாதகச் செயல்களை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிகையில், “எடப்பாடி பழனிசாமி ஏறத்தாழ நான்கு ஆண்டு காலம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தார். தமிழ்நாட்டு மக்களுக்கோ, தமிழ் மொழிக்கோ அவரால் சிறு பயனும் இல்லை. அவரால் பயன் கூட வேண்டாம். அவர் பாதகம் செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லவா. பதவி சுகத்தை அனுபவித்தார். ஆனால், தமிழர்களுக்குப் பாதகங்கள் பல செய்தார். எந்த ஒரு அரசியல் கட்சியின் பின்னணியும் இல்லாமல், தன்னெழுச்சியாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் திரண்டு பல மாதங்கள் போராடினார்கள். ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் அப்பகுதியில் வசிக்கின்ற மக்களுக்குப் புற்றுநோய் முதலான கொடிய நோய்கள் ஏற்பட்டு, அவர்கள் கொடுமைகளுக்கு ஆளானார்கள்.

அப்படி பாதிக்கப்பட்ட மக்கள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி திரண்டு எழுந்து போராடினார்கள். அந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொன்றது பழனிச்சாமியின் காவல்துறை. ஒரு பெண்ணின் வாய்க்குள் துப்பாக்கியை வைத்துச் சுட்டுக் கொன்றார்கள். ஒரு தந்தை கண் எதிரே அவர் மகன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தக் காட்சிகளை எல்லாம் கண்ட மக்கள் பதறினார்கள். இந்தக் கொடுமைகள் குறித்து அப்போதைய முதலமைச்சர் பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, தொலைக்காட்சியில் பார்த்துத்தான் நான் தெரிந்து கொண்டேன் என்றார் நிதானமாக. ஒரு முதலமைச்சர் இப்படிக் கூறியது நியாயமா?. அந்தக் கொடிய துப்பாக்கிச் சூடு பற்றி விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா தலைமையிலான ஆணையம் அந்தச் சம்பவம் குறித்து ஏற்கெனவே அவருக்குத் தெரியும் என்று கூறி, பழனிசாமியின் பொய்முகத்தை வெளிப்படுத்தியது.

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைகள் :

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

பொள்ளாச்சியில் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள், 200க்கும் மேற்பட்ட மகளிரை மிரட்டி, கற்பழித்து கொடுமைகளுக்கு ஆளாக்கினர். மகளிர் சங்கங்கள் போராடின. பாதிக்கப்பட்ட மகளிர் கூறியும் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் பழனிசாமி.

நீட் தேர்வை அனுமதித்த பழனிசாமி : 

அரியலூர் அனிதா முதல் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களும் மகளிரும் தற்கொலை செய்து கொண்ட கொடுமைகளுக்குக் காரணமானவர் பழனிசாமி. அவர் தான் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தவர். ஜெயலலிதா இருந்தவரை நீட்தேர்வை தமிழ்நாட்டில் அனுமதிக்கவில்லை. ஆனால் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தவரும் பழனிசாமிதானே.

உதய் மின் திட்டத்தை அனுமதித்தவரும் பழனிசாமியே :

உதய் மின் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு நன்மை இல்லை. தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாநிலங்கள் வாங்க வேண்டும். தனியார் மின் நிறுவனங்கள் மின்சாரத்தை மாநிலங்களில் விற்பனை செய்து, வங்கியில் வாங்கிய கடன்களைச் செலுத்தி அவை லாபம் சம்பாதிக்கும். இத்திட்டத்தை ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாடு ஏற்கவில்லை. அவர் மறைந்த பின் உதய மின் திட்டத்தை ஏற்றார் பழனிசாமி. இதனால், மின்வாரியத்தின் கடன் 40 ஆயிரம் கோடியை தமிழ்நாடு அரசு ஏற்று அதன் நிதிச்சுமை தமிழ்நாடு அரசின் மேல் விழுந்தது. இதனால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழனிசாமியை பாதம் தாங்கிப் பழனிசாமி என்று கூறுகிறார்.

இன்னும் ஒரு வேடிக்கை :

பழனிசாமி சொல்கிறார் நான் என் உழைப்பால்தான் முதலமைச்சர் பதவிக்கு உழைத்து முன்னுக்கு வந்தேன் என்று. பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பதை ஊரும், உலகமும் தொலைக்காட்சியில் பார்த்துக் கைகொட்டி சிரித்ததே. அவர் மண்புழு போல தரையில் ஊர்ந்து சென்று முதலமைச்சர் ஆனதுடன், யாரால் முதலமைச்சர் ஆனாரோ அவருக்கே துரோகம் செய்தவர் அல்லவா பழனிசாமி. அது மட்டும் அல்ல கொடநாடு கோட்டைக்குள் புகுந்து காவலரைக் கொன்று அங்கிருந்த ஊழல் பண மூட்டைகளைக் கொள்ளையடித்த கும்பல், எங்களை ஏவியது பழனிசாமிதான் என்று காவல்துறையிடம் கூறி பழனிசாமியின் பொய்முகத்தைத் தோலுரித்துக் காட்டியதை மறக்க முடியுமா? உறவினர்களுக்கு அரசு டெண்டர் எதுவும் வழங்கக்கூடாது எனும் விதிகளுக்கு மாறாக, தன்னுடைய சம்பந்திக்கு அரசுப் பணிகளை டெண்டர் மூலம் வாரி வழங்கி ஊழல் செய்தவர் பழனிச்சாமி என்பதை அவர் மறுக்க முடியுமா?.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த பழனிச்சாமி : 

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

பா.ஜ.க.அரசின் பாதகச் செயல்களில் ஒன்று சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம். அச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது அ.தி.மு.க. எம்.பி.க்கள் 11 பேர் வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டம் நிறைவேறி இருக்காது. ஆனால், அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து கொண்டது பழனிசாமியின் அ.தி.மு.க.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் பழனிசாமி :

எங்கு சென்றாலும், தான் ஒரு விவசாயி என்று கூறிவரும் பழனிசாமி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் என்பதை யாரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

தொழில் வளர்ச்சியில் கடைசி இடம் :

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டைக் கடைசி இடத்திற்குத் தள்ளியது இந்த பழனிசாமி ஆட்சிதானே.

ஒரே நாடு ஒரே தேர்தல் : 

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே உணவு என்பதை மட்டுமல்லாமல், பாஜக ஆட்சி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறியதைக் கேட்டு உடனே டெல்லிக்கு ஓடிச்சென்று பா.ஜ.க. அரசிடம் ஆதரவு தெரிவித்தவர் பழனிசாமி தானே. இப்படித் தமிழ்நாட்டை பா.ஜ.க.விடம் அடகு வைத்து பிரதமரின் பாதம் தாங்கிய பழனிசாமி இப்பொழுது பா.ஜ.கவிடம் கூட்டணி இல்லை என்று கூறி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகள் முழுவதும் தி.மு.க கூட்டணிக்கு சென்று விடக்கூடாது என வஞ்சக நோக்கத்துடன் பிதற்றுகிறார். பாஜ.க.வுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ள பழனிசாமியின் செயலை இனியும் தமிழ்நாட்டு மக்கள் நம்புவதற்கு ஏமாளிகள் அல்ல” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார்; இறுதிக்கட்டத்தில் போலீஸ் விசாரணை!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
complaint against Rajendra Balaji Police investigation in the final stage

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இத்தகைய சூழலில் அவர் தலைமறைவானார். அதன்பின்னர் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தற்போது ஜாமீனில் உள்ளார். அதே சமயம் நல்லதம்பி என்பவர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடப்பதாகவும், அதனால் இதனை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று (11.04.2024) நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் முகிலன், “இந்த வழக்கின் புலன்விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி நல்லதம்பியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.