Skip to main content

மத்திய பா.ஜ.க. அரசின் அலட்சிய போக்கு தான் காரணம்... கே.எஸ். அழகிரி

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

 

காவிரி பிரச்சனையில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் கவனிப்பதில்லை. இதற்கு மத்திய பா.ஜ.க. அரசின் அலட்சிய போக்கு தான் காரணமாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்றும், இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு  கர்நாடக அரசு கடிதம் எழுதியிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவிற்கு அருகில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட தண்ணீரை தேக்கி வைக்கவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் ரூபாய் 5912 கோடி செலவில் அணை கட்டுவதற்கான தீவிர முயற்சியில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது 2018 பிப்ரவரி 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிரானதாகும். கடந்த 1991 இல் நடுவர்மன்றம் அமைக்கப்பட்டு 2007-இல் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டு, உச்சநீதிமன்றம் 177.25 டி.எம்.சி.  நீரை தமிழ்நாட்டிற்கு வழங்க உத்தரவிட்டது. ஆனால், அந்த நீரைக் கூட உறுதியாக பெற முடியாத நிலையில் தமிழக அரசு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தீர்ப்பின் அடிப்படையில் மாதாமாதம் வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு வழங்குவதில்லை. எப்பொழுதுமே தென்மேற்கு பருவமழை தொடங்குவதை எதிர்பார்த்து செப்டம்பர் வரை நிலைமையை ஆய்வு செய்த பிறகே தமிழகத்திற்கு கர்நாடகம் நீரை வழங்கி வருகிறது. இத்தகைய நிச்சயமற்ற அணுகுமுறையின் காரணமாக தமிழக விவசாயிகள் தங்கள் சாகுபடியை திட்டமிட முடியாத நிலையில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். 

 

k s alagiri



இரு மாநிலம் சம்மந்தப்பட்ட இத்தகைய நதிநீர் பங்கீடுகளில் அனைத்து மாநிலங்களுக்கும் நீரை பெறுகிற சமஉரிமை கோட்பாட்டை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதில் ஒரு மாநிலத்தை விட இன்னொரு மாநிலம் உயர்ந்தது என்றோ, அதிக உரிமை கொண்டது என்றோ கருதுவதற்கு வாய்ப்பில்லாத வகையில் தான் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருந்தது. ஆனால், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் மீது ஏகபோக உரிமை கொண்டாடுகிற வகையில் நீண்டகாலமாக புதிய அணைகளை கட்டுவதும், நீர்ப்பாசன பரப்புகளை விரிவுபடுத்துவதுமே அதனுடைய செயல்பாடுகளாக இருக்கிறது. இதனால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. 


1950-இல் நிர்வாக வசதிக்காக மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதே தவிர, ஒவ்வொரு மாநிலமும் தனி நாடு என்கிற மனோபாவத்தில் செயல்படுவது கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும். இதைவிட இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வேறு எதுவும் இருக்க முடியாது. தற்போது கர்நாடக அரசு கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்குக் கீழே மேகதாதுவில் அணை கட்டுவது, இரண்டு மாநிலங்களும் நீரைப் பகிர்ந்து கொள்கிற பிலிகுண்டுலுவிற்கு வருகிற நீரின் போக்கை அப்பட்டமாக தடுத்து நிறுத்தக் கூடிய செயலாகும். இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலமாக தமிழகத்தின் உரிமையைப் பறிக்கின்ற முயற்சியாகவே கர்நாடக அரசின் நடவடிக்கை அமைந்திருக்கிறது. தற்போது, மேகதாதுவில் அணை கட்டப்படுமேயானால் காவிரிப் படுகை வறண்ட பாலைவனமாக மாறுவதற்கு வழிகோலும் என எச்சரிக்க விரும்புகிறேன்.


 

கடந்த 2019 நவம்பர் 22-ஆம் தேதி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்து அதற்குரிய அனுமதியையும் பெற்றிருக்கிறது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றின்படி, காவிரி ஆற்றில் எத்தகைய நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதாக இருந்தாலும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது என்று அறுதியிட்டுக் கூறியிருக்கிறது. அப்படி கூறப்பட்ட தீர்ப்புகளை மீறுகிற வகையில், தற்போது தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று மேகதாதுவில் அணை கட்டுகிற பணிக்கு அனுமதி வழங்க வேண்டுமென கர்நாடக அரசு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரியிருக்கிறது. 
 

கடந்த ஜூன் 2018 இல் உச்சநீதிமன்ற ஆணையின்படி காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் பங்கீட்டுக் குழுவும் அமைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவரும், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரும்  ஒருவராகவே இருப்பதை எதிர்த்து தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால், தொடர்ந்து அதே நிலை தான் நீடித்து வருகிறது. இதன் காரணமாக காவிரி பிரச்சினையில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் கவனிப்பதில்லை. இதற்கு மத்திய பா.ஜ.க. அரசின் அலட்சிய போக்கு தான் காரணமாகும்.


 

ஏற்கனவே, மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. ஆனால், உச்சநீதிமன்றம் மேகதாதுவில் அணை கட்ட தடை விதிக்க மறுத்து விட்டது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்து தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும். ஏற்கனவே, தமிழ்நாட்டின் உரிமைகளை பா.ஜ.க. அரசு பறிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த முடியாத அவலநிலையில் இருக்கிறது. இத்தகைய நிலை தொடர்ந்து நீடிக்காமல் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க, சமீபகாலமாக மிகமிக நெருக்கமான உறவு கொண்டிருக்கிற பிரதமர் நரேந்திர மோடியின் மூலமாகவும், உச்சநீதிமன்றத்தை அணுகுவதன் மூலமாகவும் உரிய தீர்வு காண வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாஜகவினர் 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள்” - பிரியங்கா காந்தி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
"BJP won't win more than 180 seats" - Priyanka Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ரோட்ஷோ நடத்தினார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மலர்களைத் தூவி பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பிரியங்கா காந்தி பேசுகையில், “பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள் மற்றும் பெண்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசவில்லை. உண்மையான பிரச்னைகளில் இருந்து நம்மைத் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.

இது குறித்து ஏன் பேசவில்லை என ஊடகங்கள் அவரிடம் கேட்க வேண்டும். அவரது கட்சித் தலைவர்கள் அனைவரும் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று கூறுகிறார்கள். அரசியலமைப்பை மாற்றினால் இட ஒதுக்கீடு மற்றும் மக்களின் உரிமைகள் என்னவாகும்?. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்கவில்லை என்றால் பாஜகவினர் 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“திமுகதான் எதிர்க்கட்சி என்பதுபோல் மோடி பிரச்சாரம் செய்கிறார் - திருமாவளவன் குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Thirumavalavan alleges Modi is campaigning as if the DMK is the opposition

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செவ்வாய்க் கிழமை(16.4.2024) சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பு.முட்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கி 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்களிடம் திருமாவளவன் பேசுகையில், “இந்தத் தேர்தலில், நரேந்திர மோடியின் நாசகரமான ஆட்சியை வீழ்த்த தளபதி மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்தியும் வியூகம் அமைத்து களமாடி வருகின்றனர். பாஜக விற்கு எதிரான வியூகம் அமைத்து, பல்வேறு கட்சிகளை  ஒருங்கிணைத்து  இன்று வலுவான தேர்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார். காங்கிரஸுக்கு பதிலாக திமுகதான் தனது எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயே டேரா போட்டு தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். கேஸ் விலை உயர்வு மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல்  சாதிய மோதல்கள் அதிகரிக்கவும் மோடி தான் காரணம். மோடி  மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  ரேசன் கடை இருக்காது. 100-நாள் வேலைத்திட்டம் இருக்காது” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன்,  திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் கதிரவன், திமுக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் விஜய் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.