Advertisment

“பெரியாரை இழிவுபடுத்துகிற அண்ணாமலையை தமிழ்ச் சமுதாயம் மன்னிக்காது” - கே.எஸ். அழகிரி

 K.S. Alagiri says Tamil community will not forgive Annamalai who insults Periyar

Advertisment

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அவரது ‘என் மண், என் மக்கள் நடைப்பயணத்தை திருச்சி மாவட்டத்தில் மேற்கொண்டார். அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில்பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் திமுக ஆட்சி அனைத்து மக்களுக்கும் எதிரான ஆட்சியாக இருக்கிறது. கடந்த 1967 ஆம் ஆண்டு திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்ரீரங்கம் கோவிலின் வெளியே ஒரு பலகையை வைத்துள்ளார்கள். அதில் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று ஒரு கம்பத்தை வைத்து பலகைகளை வைத்துள்ளார்கள். ஆனால், இந்துக்கள் நாம் அறவழி வாழ்க்கை வாழ்கிறோம்.

இந்த ஸ்ரீரங்கம் மண்ணில் பா.ஜ.க கட்சி ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக அந்த கம்பமும், பலகையும் அப்புறப்படுத்தப்படும். அவை அகற்றி தமிழ் புலவர்களின் சிலைகளும், சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளும் வைக்கப்படும். மேலும், கடவுளை வழிபடுபவன் முட்டாள் என்று சொல்லக்கூடிய அந்த சிலையை பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் நொடியிலே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கு முன்பும் அகற்றி காட்டுவோம். சனாதனம் ஒழிய தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் காரணமாக இருப்பதை கடந்த 70 ஆண்டு காலமாக பார்த்து வருகிறோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைச்சகமே இருக்காது” என்று கூறினார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோர் குறித்து மிக மிக இழிவான ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளிப்படுத்துகிறார். ஸ்ரீரங்கம் கோவில் முன்பு இருக்கிற பெரியார் சிலையை நீக்குவதுதான் அவருடைய நோக்கம் என்று கூறுகிறார். சமூகநீதியை பாதுகாத்த பெரியாரையும், காமராஜரையும் இழிவுபடுத்துகிற அண்ணாமலையை தமிழ் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது. இத்தகைய அருவருக்கத்தக்க அநாகரீக பேச்சுக்களால் தமிழகத்தில் பா.ஜ.க குழி தோண்டி புதைக்கப்படுவது உறுதி.

Advertisment

தமிழக அரசியல் வரலாற்றில் இவர்களின் பங்களிப்பை வரலாற்று நூல்கள் மூலம் தெரிந்துகொண்டு பேசுவது நல்லது. இத்தகைய பேச்சுக்களினால் கடுமையாக பாதிக்கப்படுவது அண்ணாமலை மட்டுமல்ல பா.ஜ.க.வும் தான். வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவே அண்ணாமலை பேச்சுக்கள் உதவப் போகிறது. எனவே, தமிழக மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் அண்ணாமலை ஆளாவதை யாராலும் தடுக்க முடியாது” என்று கூறினார்.

Annamalai periyar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe