Skip to main content

“பெரியாரை இழிவுபடுத்துகிற அண்ணாமலையை தமிழ்ச் சமுதாயம் மன்னிக்காது” - கே.எஸ். அழகிரி

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

 K.S. Alagiri says Tamil community will not forgive Annamalai who insults Periyar

 

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அவரது ‘என் மண், என் மக்கள் நடைப்பயணத்தை திருச்சி மாவட்டத்தில் மேற்கொண்டார். அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் திமுக ஆட்சி அனைத்து மக்களுக்கும் எதிரான ஆட்சியாக இருக்கிறது. கடந்த 1967 ஆம் ஆண்டு திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்ரீரங்கம் கோவிலின் வெளியே ஒரு பலகையை வைத்துள்ளார்கள். அதில் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று ஒரு கம்பத்தை வைத்து பலகைகளை வைத்துள்ளார்கள். ஆனால், இந்துக்கள் நாம் அறவழி வாழ்க்கை வாழ்கிறோம். 

 

இந்த ஸ்ரீரங்கம் மண்ணில் பா.ஜ.க கட்சி ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக அந்த கம்பமும், பலகையும் அப்புறப்படுத்தப்படும். அவை அகற்றி தமிழ் புலவர்களின் சிலைகளும், சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளும் வைக்கப்படும். மேலும், கடவுளை வழிபடுபவன் முட்டாள் என்று சொல்லக்கூடிய அந்த சிலையை பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் நொடியிலே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கு முன்பும் அகற்றி காட்டுவோம். சனாதனம் ஒழிய தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் காரணமாக இருப்பதை கடந்த 70 ஆண்டு காலமாக பார்த்து வருகிறோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைச்சகமே இருக்காது” என்று கூறினார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோர் குறித்து மிக மிக இழிவான ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளிப்படுத்துகிறார். ஸ்ரீரங்கம் கோவில் முன்பு இருக்கிற பெரியார் சிலையை நீக்குவதுதான் அவருடைய நோக்கம் என்று கூறுகிறார். சமூகநீதியை பாதுகாத்த பெரியாரையும், காமராஜரையும் இழிவுபடுத்துகிற அண்ணாமலையை தமிழ் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது. இத்தகைய அருவருக்கத்தக்க அநாகரீக பேச்சுக்களால் தமிழகத்தில் பா.ஜ.க குழி தோண்டி புதைக்கப்படுவது உறுதி. 

 

தமிழக அரசியல் வரலாற்றில் இவர்களின் பங்களிப்பை வரலாற்று நூல்கள் மூலம் தெரிந்துகொண்டு பேசுவது நல்லது. இத்தகைய பேச்சுக்களினால் கடுமையாக பாதிக்கப்படுவது அண்ணாமலை மட்டுமல்ல பா.ஜ.க.வும் தான். வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவே அண்ணாமலை பேச்சுக்கள் உதவப் போகிறது. எனவே, தமிழக மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் அண்ணாமலை ஆளாவதை யாராலும் தடுக்க முடியாது” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசை உலகில் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 98 வது மார்கழி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இசை சகோதரிகளான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், தவறான ஒருவருக்கு கர்நாடக இசை உலகின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் டி.எம்.கிருஷ்ணாவையும் அவருடைய கொள்கைகளையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் ரஞ்சனி - காயத்ரி இசை சகோதரிகள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர். தியாகராஜ சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். ஆன்மீகத்தை தொடர்ந்து அவர் இழிவுபடுத்தியுள்ளார் என கடுமையாக சாடி வந்தனர்.

அதேநேரம் டி.எம்.கிருஷ்ணாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், 'ஒரு மதத்திற்காக மட்டும் இருந்த கர்நாடக இசையை கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா மதங்களுக்கும் பாடி இசையில் சமூக நல்லிணக்கம்  கொண்டுவந்தவர் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். 

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'சிறந்த பாடகர் டி.ம்.கிருஷ்ணா 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தல் நடத்தை விதி; மூடப்பட்ட பெரியார் சிலை அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் திறப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 closed Periyar statue will reopen in the next half hour

இந்தியாவில் நடைபெற இருக்கின்ற லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் எனவும், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அனைத்து கட்சிகளுமே அதனதன் கூட்டணிகளை உறுதி செய்வதிலும், தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதிலும் மிக தீவிரம் காட்டி வந்தனர். அதன்படி, தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும், கூட்டணி பலத்தோடு இருக்கும் திமுக அதன் கூட்டணி கட்சிகளையும், தொகுதிப் பங்கீடுகளையும் உறுதி செய்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு கூட்டணியை உறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. அதன் பின்னர், முந்தைய தேர்தல்களில் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளாக இருந்த பாமக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியாக கூட்டணி அமைத்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே தேர்தல் தொடர்பான பல்வேறு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியாக நடத்தை விதிகள் செயல்பாட்டில் உள்ளன. பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிக் கம்பங்கள், வளைவுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளும் மூடப்படுவது வழக்கம். இவ்வாறு மூடப்படும் சிலைகளில் பெரியார் சிலைகள் அடங்காது. இது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில், தேர்தலை காரணம் காட்டி பெரியார் சிலையை மூடக்கூடாது என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து நடந்த இந்த வழக்கில், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி, நீதிபதி வி.பார்த்திபன் “மறைந்த தேசத் தலைவர் மற்றும் பெரியார் சிலைகளை தேர்தலுக்காக மூடக்கூடாது” என தீர்ப்பளித்து இந்த வழக்கை முடித்து வைத்தார்.

அதன் பின்னர், பெரியார் சிலைகள் தமிழகத்தில் மூடப்படுவதில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தலைக் காரணம் காட்டி, திண்டுக்கல்லில் உள்ள பெரியார் சிலையை போலீசார் மூடியுள்ளனர். உடனே இது குறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதியில் உள்ள பெரியார் அமைப்பினர், நீதிமன்றமே பெரியார் சிலைகளை மூடக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கும் போது, நீங்கள் எப்படி மூடலாம் எனக் கொந்தளித்துள்ளனர். உடனே இது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, தலைமைக் கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை உள்ளிட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் முயற்சியில் உடனடியாக மூடப்பட்ட பெரியார் சிலை உடனடியாகத் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி எனக் கூறி திண்டுக்கல்லில் மூடப்பட்ட பெரியார் சிலை, மூடிய அரை மணி நேரத்திலேயே மறுபடியும் திறக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.