/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/k.s-ni_0.jpg)
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.
டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். அடைவார்'' என்று கூறினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் பிறந்த நாளான நேற்று திருநெல்வேலியில் உள்ள மணிமண்டபத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு கே.எஸ். அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது உதயநிதியின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் தரப்பில் இருந்து கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், “சுதந்திர போராட்டத்தின் போது பா.ஜ.கவில் உள்ளவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அவர்கள் சுதந்திர போராட்ட வீரர்களை ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்தவர்கள். காங்கிரஸ், பொதுவுடைமை கட்சிகள், திராவிட இயக்கங்கள் உள்ளிட்ட கட்சிகள் தான் நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு பெரிதும் பங்கெடுத்தன.
சனாதனத்தை பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து பா.ஜ.க.வை அலற வைத்துள்ளது. உத்தரப் பிரதேச சாமியார், உதயநிதி ஸ்டாலின் பற்றி வெளியிட்ட வீடியோ சனாதனத்தின் கொடூரத்தை காட்டுகிறது.ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்தைக் கூற உரிமை இருக்கிறது. அந்த வகையில் சனாதனத்தை பற்றி கருத்து கூற உதயநிதி ஸ்டாலினுக்குஉரிமை உண்டு. கருத்து சொன்னாலே, தலையை வெட்டி விடுவேன் என்று சொல்லும் அவர்களை விட வன்முறைவாதிகள் நாட்டில் யாரும் இல்லை.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எந்த விதமான தவறான கருத்தையும்கூறவில்லை. அவர், சனாதனத்தை பற்றி புதிதாக ஒன்றும் கூறவில்லை. 100 ஆண்டுகளுக்கு முன்பு, பெரியார் கூறிய கருத்தை தான் தற்போது உதயநிதி கூறியிருக்கிறார். அந்த வகையில் பார்த்தால் உதயநிதி ஸ்டாலின் இளம் பெரியார் என்றே கூறலாம். அவர் எந்தவித தவறான வாதத்தையும் முன்வைக்கவில்லை. சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்து இந்து மதத்துக்கு எதிரான கருத்து இல்லை. அதனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. உதயநிதி ஸ்டாலின் கருத்தை ஏற்றுக்கொண்டு இந்து சமய அறநிலையத்துறையை மூடநம்பிக்கையில்லாத் துறை அமைச்சராகத்தான் சேகர் பாபுவை மாற்ற வேண்டும். சனாதன ஒழிப்பு மாநாட்டில், அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டதில் எந்தவித தவறும் இல்லை” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)