Kolathur MK Stalin propaganda

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இதனையொட்டி திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து நேற்று (15.04.2024) தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வடசென்னையில் வாக்கு சேகரித்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியுடன் சென்னை கொளத்தூரில் இன்று (16.04.2024) காலை வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது பொதுமக்களை சந்தித்து வடசென்னை கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். மேலும் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது அவருடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து திறந்த வாகனத்தில் சென்று ஆதரவு திரட்டினார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக நிர்வாகிகள் எனப் பலரும் உடன் இருந்தனர். மேலும் இன்று மாலை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வது குறிப்பிடத்தக்கது.