Skip to main content

"குரைப்பதை நிறுத்தி வாலைச் சுருட்டிக் கொள்ளுங்கள் ராஜேந்திர பாலாஜி!" -கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதில் அறிக்கை!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

kkssr ramachandran - K. T. Rajenthra Bhalaji

 

"கொலைகார அரசுக்காகக் குரைப்பதை நிறுத்தி, வாலைச் சுருட்டிக் கொள்ளுங்கள்!" என - அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். ‘

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எலும்புத்துண்டு போல மாவட்டச் செயலாளர் பதவி மீண்டும் கிடைத்திருக்கும் நிலையில், பதவி கொடுத்தவர்களுக்கு ராஜேந்திர பாலாஜி நன்றி காட்டி வாலாட்டிக் கொள்ளட்டும். தேவையின்றி, எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்துக் குரைப்பது, எதைக் குளிப்பாட்டி எங்கே வைத்தாலும் அதன் குணம் மாறாது என்பதையே காட்டுகிறது.

 

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற இரட்டை உயிர்ப்பறிப்பு கொடூரத்துக்குத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுவதுமிருந்து கண்டனம் வெளிப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் சமூக வலைத்தளங்களில் காணொலியாகத் தங்களின் எதிர்ப்புக் குரலை அழுத்தமாகப் பதிவு செய்து வருகிறார்கள். காவல்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகளேகூட, இந்தக் கொடூரத்தை அனுமதிக்க முடியாது எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

 

‘கரோனா பரப்பி’ எடப்பாடி பழனிசாமி அரசு, இந்த ஊரடங்கு காலத்திலும் டாஸ்மாக் கடையைத் திறந்து வைப்பது தங்களின் ‘கொள்கை முடிவு’ என உச்சநீதிமன்றம்வரை சென்று, அந்தக் கொள்கையின் காரணமாக, 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழக மக்களுக்கு கரோனாவைப் பரப்பி, ஆயிரத்திற்கும் அதிகமானோரின் உயிரைப் பறித்திருக்கிற நிலையில், தங்களின் வாழ்வாதாரத்திற்காகக் கடை திறந்து வைத்த அப்பாவையும் மகனையும் காவல் நிலையத்தில் சித்திரவதைச் செய்து மரணத்தில் தள்ளிய காவல் துறையினரைக் காப்பாற்றுவதற்கு இன்றளவும் மறைமுகமாகத் துணை போய்க் கொண்டிருக்கிறது.

 

அதனைத் திசைதிருப்புவதற்காக, தற்காலிகமாக மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் பெற்றிருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அ.தி.மு.க. அரசு 'அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருந்துகொண்டு ஆட்சி செய்வதுபோல', நீதிமன்றம் பாராட்டிவிட்டது, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது, சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கையில் காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் புண்ணுக்குப் புனுகு தடவும் வேலையை மேற்கொண்டிருக்கிறார்.

 

நீதி, இந்த ஆட்சியின் முகத்தில் காறித் துப்பியது. அப்போதும் சுரணையின்றி அதனைத் துடைத்துக் கொண்டு, இப்போதுதான் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறீர்கள். அதுவும், எத்தனை நாட்கள் கழித்து? ஒரு வழக்கின் ஆரம்பத்தில் முழு உண்மையும் தெரிந்துவிடாது என்று முதலமைச்சருக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை விட்டிருக்கும் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது அறிக்கையிலேயே தன்னையும் அறியாமல் உண்மைகளை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

 

முழு உண்மையும் தெரியாத நிலையில், அப்பா - மகன் இருவரில் ஒருவர் நெஞ்சுவலியால் இறந்தார் என்றும், இன்னொருவர் மூச்சுத்திணறி இறந்தார் என்றும் முதலமைச்சரே முடிவு செய்து அறிக்கை வெளியிட்டது எப்படி?

 

காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரின் லட்சணம் இதுதானா?

 

முதலமைச்சரின் லட்சணமே இதுதான் என்றால், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் லட்சணம் எப்படி இருக்கும்?

 

நெஞ்சுவலியாலும், மூச்சுத்திணறி இறந்தவர்களுக்கும் மக்கள் வரிப்பணத்திலான முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்ச ரூபாய் வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது?

 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் மூச்சுத்திணறியும் நெஞ்சுவலியாலும் இறக்கின்றவர்களுக்கு முதலமைச்சர் இதுவரை எவ்வளவு நிதி வழங்கியிருக்கிறார்?

 

வழக்கின் ஆரம்பக் கட்டத்தில் முழு உண்மை தெரியாது என்கிறபோது, உங்களைப் போலவே உளறிக்கொட்டும் இன்னொரு அமைச்சரான கடம்பூர் ராஜூ, “இது லாக்கப் மரணமில்லை” என்று தன் ‘முடிவை’ அறிவித்தது எப்படி? ஆணவமா? அல்லது அமைச்சரவையில் உள்ள அத்தனை பேருமே உங்களைப் போன்ற அரைவேக்காடுகளா?

 

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தன்னிச்சையாக விசாரித்து உத்தரவிட்டதன் பேரிலேயே தற்போதைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய விசாரணை நடைபெற்று, குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், வணிகர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் எல்லாரும் குரல் கொடுப்பது உங்களுக்கு அரசியலாகத் தெரிகிறது என்றால், உங்கள் அரசியல் என்பது மக்களின் நியாயத்திற்கானதாக இல்லை. நாளும் பொழுதும் ‘கல்லா’ கட்டி, அரசு நிர்வாகத்திற்கு ‘பால்’ ஊற்றுவதுதான் உங்களின் முழு நேர அரசியலா?

 

தூத்துக்குடியில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானால், காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் டி.வி.,யைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்கிறார்.

 

நீரோ மன்னனுக்கும் இந்த 'மண்புழு முதல்வருக்கும்' என்ன வித்தியாசம்?

 

முதலமைச்சர் வழியிலேயே மற்ற அமைச்சர்களும் மமதையுடன் இருப்பதால் மக்களின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்படுகிறது.

 

இதை எடுத்துச் சொல்ல வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. மக்கள் செல்வாக்கு மிக்கவரும் - தேர்தல் களத்தில் தி.மு.க.,வுக்கு மகத்தான வெற்றியை ஈட்டித்தந்தவருமான எங்கள் தலைவரும் ஆதாரப்பூர்வமாக விடுக்கும் அறிக்கைக்குப் பதில் சொல்ல வக்கின்றி வகையின்றி அவதூறுகளை அள்ளி வீசுவது கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி, அவருடன் மாவட்ட அரசியலில் மல்லுக்கட்டுகின்ற மாஃபா பாண்டியராஜன் வரை எல்லோருக்கும் வழக்கமாக இருக்கிறது.

 

சேற்றில் ஊறிய பன்றிகள் தெருவில் வந்தால், மக்கள் ஒதுங்கிச் செல்வார்கள். அதுபோலத்தான் இந்த அவதூறுச் சேற்றில் ஊறியவர்களின் அறிக்கைகளை நாங்கள் பார்க்கிறோம்.

 

அதிகம் பேசிக் கொண்டிருந்தால் ஜெயலலிதாவிடம் ஆடிட்டர் வாங்கிய செருப்படியிலிருந்து, போயஸ் கார்டனில் இன்றைய முதல்வர் - துணை முதல்வருக்குக் கிடைத்த சிறப்புப் பூசைகள் வரை பட்டியலிட வேண்டியிருக்கும். முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து, ஜெயலலிதாவின் மர்ம மரணம் வரை கல்லறையைத் தோண்ட வேண்டியிருக்கும். தாங்கமாட்டீர்கள்!

 

தி.மு.கழகம் நீதியை நம்புகிற - எதிர்கொள்கிற இயக்கம். வாய்தா வாங்கி காலத்தை ஓட்டிய வரலாறு எங்களுக்குக் கிடையாது. நேருக்கு நேராக எதிர்கொண்டு, பொய் வழக்குகளைப் பொடிப்பொடியாக்கியவர்கள்.

 

ஆனால், அ.தி.மு.க. என்பது ஊழலுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, முதல்வர் பதவி பறிக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கே அகில இந்திய அளவில் அவமானத்தைத் தேடித்தந்த இயக்கம்.

 

அப்போது நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக, ஆளுங்கட்சியினர் வரிந்துகட்டி நின்று, அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, போக்குவரத்தை முடக்கி, கடையடைப்பு - கலவரங்களை உருவாக்கி, தீர்ப்பளித்த நீதிபதியின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் இழிவு ஏற்படுத்திய கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் முதலமைச்சரில் தொடங்கி அவருக்கு வாலாட்டும் ராஜேந்திர பாலாஜி வரையிலான அத்தனை பேரும்.

 

http://onelink.to/nknapp

 

அதன்வழியில்தான், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விசாரித்த மாஜிஸ்ட்ரேட்டை எடப்பாடி அரசின் ஏவல்துறையான காவல் துறையினர் மிரட்டியிருக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

 

நீதித்துறை நடுவரிடம் உண்மையைச் சொன்ன பெண் தலைமைக் காவலர் உயிர் பயத்தில் இருப்பதையும், ஒரு காவலருக்கே போலீஸ்காரர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டிய அளவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதையும் தமிழகம் இதுவரை கண்டதில்லை.

 

அந்த அளவுக்கு கொலைகார அரசாங்கத்தின் ஆட்சியில் தமிழகம் சிக்கியிருக்கிறது.

 

மக்களின் கோபத்திற்கும் கொந்தளிப்புக்கும் அவர்கள் கேட்கும் நியாயத்திற்கும் பதில் சொல்லத் திராணியின்றி, எங்கள் தலைவரை நோக்கிக் குரைக்க வேண்டாம். வாலைச் சுருட்டிக் கொள்ளுங்கள் ராஜேந்திர பாலாஜி. நறுக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வெயில்ல தலைச்சூடா ஆயிப்போச்சுப்பா!”-சுடச்சுட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பிரச்சாரம்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 "Don't get too hot!"- Minister K.K.S.S.R. Propaganda

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இந்தியா கூட்டணியின்  காங்கிரஸ்  வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பரப்புரை செய்தார்.  

அப்போது பேசிய அவர், “உங்களைப் பார்க்கிறதுக்காக வந்திருக்கோம். நீங்க யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? எங்களுக்குத்தான் ஓட்டுப் போடப் போறீங்க. நாங்க உங்கள பார்க்காம இருந்தோம்னு வச்சிக்கங்க.. வைவீக. இந்தப் பயலுகளுக்கு எவ்வளவு மப்பு இருந்தா ஓட்டு கேட்க கூட வரலைன்னு வைவீக. அதுக்காகத்தான்.. மாணிக்கம்.. கொஞ்சம் வெயிலா இருந்தாலும் பரவாயில்லன்னு கூட்டிட்டு வந்திருக்கேன்.  தலைச்சூடா ஆயிப்போச்சுப்பா. எல்லாரும் பார்த்தீங்கன்னா நம்ம சொந்தங்கதான். பார்க்காதவங்க கிடையாது. சாத்தூர்ல இருக்கிற அத்தனை பேரும் எனக்கு சொந்தக்காரங்கதான். சொந்தங்கள் என்ற உரிமையில்தான் உங்ககிட்ட ஓட்டு கேட்க வந்திருக்கோம். உங்களுக்கு வேண்டியது எல்லாத்தையும் செஞ்சு கொடுக்கிறோம். எல்லாரும் கை சின்னத்துக்கு ஓட்டு போடுங்க” என்று வாக்கு சேகரித்தார். 

Next Story

துரை வைகோ சொன்ன குட்டி ஸ்டோரி; விருதுநகர் நிகழ்ச்சியில் நடந்த சுவாரசியம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 The short story told by Durai Vaiko; the minister answered on the stage!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அமைந்துள்ளது விஸ்வநத்தம் கிராமம். இப்பகுதியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் குப்பை மேடாகப் பயனற்று நில மாசுபாட்டை ஏற்படுத்தி வந்தது. இதையறிந்த விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், குப்பை மேடாகப் பயனற்றுக் கிடந்த அரசு நிலத்தை மீட்டு குறுங்காடு அமைக்கத் திட்டமிட்டனர். விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அன்றாடம் வேலை செய்யும் எளிமையான பின்னணியைச் சேர்ந்தவர்கள். ஆனால், அந்த அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கு எப்படி அரசிடம் அனுமதி கேட்டு பணிகளைத் துவங்க வேண்டும் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்துள்ளது. 

இந்த நிலையில் தான், விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் பணியைப் பார்த்து பாராட்டிவிட்டு தனிப்பட்ட செல்போன் எண்ணை கொடுத்துவிட்டுச் சென்ற மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோவின் ஞாபகம் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கு வந்துள்ளது. உடனே அவர்கள் செல்போனில் தகவல் தெரிவித்து குறுங்காடுகள் அமைக்க உதவி கேட்க, பணிகள் தொடங்க அனைத்து உதவிகளையும் துரை வைகோ ஃபோன் மூலமே செய்து கொடுத்துள்ளார். செல்போனில் குறுங்காடு அமைக்கும் குழுவினரிடம் நம்பிக்கை தெரிவித்த துரை வைகோ, உடனே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு தகவல் கொடுக்க அமைச்சரும் தமிழக அரசு சார்பில் தேவையான நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து, குறுங்காடு அமைக்கும் இடத்தை பார்வையிட்டு ஊராட்சி தலைவரிடம் பேசி குப்பைகள், சீமைக்கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்தார். 

இந்த கூட்டு முயற்சியால் முதற்கட்டமாக விஸ்வநத்தம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் துரை வைகோ ஏற்பாட்டின் பேரில் குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக மரக் கன்றுகளை நட்டு நிகழ்வினை சிறப்பு விருந்தினர்கள் தொடங்கி வைத்தனர். நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையினை அமைச்சர்களிடம் பெற்று விஸ்வவனம் அறக்கட்டளையிடம் துரை வைகோ ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து, இந்த திட்டச் செயலாக்கத்திற்காக துரை வைகோவையும் தொடர்புடைய நிர்வாகிகளையும் அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினர். நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக குறுங்காட்டிற்கு 14 மாதங்களாக துரை வைகோ மேற்கொண்ட  முயற்சிகள் 7 நிமிட குறும்படமாக LED திரையில் திரையிடப்பட்டது.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய  துரை வைகோ, 'விதைப்பது ஒரு முறை வாழட்டும் தலைமுறை' குறுங்காடு திட்டத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, குறுங்காட்டில் 30க்கும் மேற்பட்ட நாட்டு மரங்கள் நட இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 14 மாதங்களில் தான் கொடுத்த வாக்கை செய்து காட்டிய பின்னணியை தனது கட்சியின் தலைவரும் தந்தையுமான வைகோவை முன்னிறுத்தி திருக்குறளுடன் ஒப்பிட்டுப் பேசினார். மேடையில், அண்ணன் தங்கம் தென்னரசு என அழைத்து, இருவருக்கும் 2 தலைமுறையாக இருக்கும் உறவு பந்தத்தை எடுத்துக்காட்டி பேசினார். தொடர்ந்து பேசியவர், ''நான் நல்லா இருக்கணும் என எப்போதும் நினைக்கிறது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், அமைச்சர் தங்கம் தென்னரசு..'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தொடர்ந்து உணர்வுப்பூர்வமாக பேசிய  துரை வைகோ, குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார். அதில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் நிகழ்ச்சிக்கு நேரம் வாங்க சென்றதாகவும், அப்போது அன்புடன் பேசிய அமைச்சர், ''உங்க அப்பா தான் புலி புலினு இருந்தார்னா.. நீ மரம் செடி கொடின்னு இருக்கியே.. சீட்டு வாங்கி அரசியல் வேலை பாரு..'' என அன்புடன் கடிந்துகொண்டதாகவும், அதற்கு ''நான் இல்லாத காலத்திலும் இதை அமைத்துத் தந்தவன் வைகோ மகன். அவனது கட்சி என்பார்கள். அதுவே போதும். இந்த 32 ஏக்கர் குறுங்காடு எனது சின்ன உதவி..'' என சொல்லியதாக எல்லோர் மத்தியிலும் இருவருக்குள் நடந்த நிகழ்வை கூறினார். 

நிகழ்வில் இருந்த பத்திரிகையாளர்களை குறிப்பிட்டு பேசியவர், ''தான் அரசியலில் போட்டியிட இங்கு வரவில்லை..'' எனத் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து தனது உரையின் முடிவில் பேசியவர், தமிழக அரசின் பசுமைத் திட்டம் பற்றியும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் விஸ்வ வனம் அமைப்பை பற்றியும் பெருமிதத்துடன் பேசினார். இறுதி வரியாக, ''உங்களுக்கு ஊர் பிடிக்கலன்னா வேற ஊர் போய்டலாம். மாநிலம், நாடு புடிக்கலன்னா வேற இடம் போயிடலாம். ஆனா நம்ம பூமித்தாய விட்டு நம்ம எங்கேயும் போக முடியாது. ஒன்று சேர்ந்து பூமியை பாதுகாப்போம்..'' என சூளுரைத்து தனது உரையை துரை வைகோ முடித்துக்கொண்டார்.

இதையடுத்து, பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "துரை வைகோவை அரசியலுக்கு கொண்டு வந்து கெடுத்தது நான் தான். அவர் தற்போது அரசியல் முழு நேர ஊழியர் ஆகிவிட்டார். வைகோவிடம், `உங்களுக்கு பின்பு இந்தக் கட்சியை வழி நடத்த ஒரு ஆள் தேவை. அதற்கு துரை வைகோ பொருத்தமானவர். அவரை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்..’ எனக் கூறி அரசியலுக்கு சம்மதம் தெரிவிக்க வைத்ததாக நெகிழ்ச்சியுடன் பேசினார். தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பாராட்டி பேசினார். இதில் மதிமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ ஏற்பாட்டின் பேரில் குறுங்காடுகள் அமைப்பதற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.