Skip to main content

“படிப்பறிவற்ற பிரதமர்” - கெஜ்ரிவாலின் கருத்துக்கு வெகுண்டெழுந்த குஷ்பு

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

Khushboo lashed out at Kejriwal's comment as an "illiterate prime minister"

 

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 

 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, கடந்த 2016 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. மேலும் நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என பாஜக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் அக்டோபர் முதல் 2000 ரூபாய் நோட்டும் செல்லாது என்ற அறிவிப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இது குறித்து கருத்து தெரிவித்து இருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியை கடுமையாகச் சாடி இருந்தார். அவர் கூறுகையில், “பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளின் போது ஊழலை ஒழிக்க ரூ.2000 அறிமுகம் செய்யப்படுவதாக கூறினர். தற்போது ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதன் மூலமும் திரும்பப் பெறுவதன் மூலமும் ஊழல் ஒழியும் என்கின்றனர். இதன் காரணமாகவே பிரதமருக்கு கல்வி அறிவு வேண்டும் என கூறுகிறோம். படிப்பறிவு அற்ற பிரதமரிடம் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அது பிரதமருக்கு புரியப் போவதில்லை. இதனால் மக்கள் தான் அவதிப்படுகிறார்கள்” என்று கூறியிருந்தார்.

 

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கருத்துக்கு பதில் அளித்துள்ள பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, “ஆணவத்தின் முழு உருவம். அரசியல் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், ஒரு தன்மை இருக்க வேண்டும். நமது பிரதமரின் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதுபோன்ற மொழி ஏற்கத்தக்கது அல்ல” எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன்” - வெளிப்படையாகப் பேசிய குஷ்பு

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
kushbu sundar about aranmanai 4

2024 ஆம் ஆண்டு நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான பா.ஜ.க.வை சார்ந்த குஷ்பு, வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இயக்குநர் சி.சுந்தர் இயக்கத்தில் வெளியாகவுள்ள அரண்மனை 4 திரைப்படத்தை பற்றிப் பேசினார். அவர் பேசியதாவது, “நாங்கள் அரண்மனை 4 பார்த்து விட்டோம். படம் பிரமாதமாக வந்துள்ளது. இதுவரையில் வந்த அரண்மனை படங்களை விட இது வித்தியாசமானதாக இருக்கும். நிறைய உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் கமர்சியல் வேல்யூ முழுவதும் ஆக உள்ளது. யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் இடம் சிறப்பாக நடித்துள்ளனர்” என்றார்.  

அவரிடம், அரண்மனை திரைப்படம் சீரிஸ் இன்னும் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்குமா, எப்போதுதான் அது முடியும் என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “அதை நான் முடிவு செய்ய முடியாது. இயக்குநர், எழுத்தாளர் தான் முடிவு செய்வார்கள். இது தான் கதை. கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன் அவ்வளவுதான், எல்லாமே இயக்குநர் தான் முடிவு செய்வார் நான் அல்ல” என பதிலளித்தார். 

அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்துள்ள படம் அரண்மனை 4. இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அரண்மனை பட வரிசையில் நான்காவது படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் ட்ரைலர் வெளியாகியிருந்தது. 

Next Story

குஷ்பு மீது போலீசில் புகார்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Police complaint against Khushbu

மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும், கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் ,சேலம், ஈரோடு, எடப்பாடி என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் 'குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் அவரது உருவப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.