விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசரில் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக காட்சி இடம்பெற்றது. மத வெறுப்பை தூண்டும் வகையில் படம் இருப்பதாக பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

Advertisment

இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி கேரளா மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து பெரும் சர்ச்சைக்கு மத்தியில் நேற்று (05.05.2023) இப்படம் வெளியானது. தமிழ்நாட்டில் இப்படம் வெளியான திரையரங்குகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் தீவிர சோதனைக்கு பிறகு தான் பார்வையாளர்கள் உள்ளே அனுப்பப்படுகின்றனர். நேற்று முதல் நாளில் இந்தியா முழுவதும் இப்படம் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

மஜக சார்பில் நேற்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கட்டிமேட்டில் போராட்டம் நடத்தினர். இன்றும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்யக்கோரி சென்னை விஆர்மால் திரையரங்கத்தை மனிதநேய ஜனநாயக கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.