Keelpennathur constituency dmk and pmk

தொகுதி சீரமைப்பில் 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் தொகுதி. 2011, 2016 என இரண்டு சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்த தொகுதி, தற்போது 2021 மூன்றாவது தேர்தலை சந்திக்கிறது. வன்னியர்கள், பட்டியலின மக்கள், பிறசாதியினர், பிற மதத்தினர் கணிசமாக உள்ள தொகுதி இது. வெற்றியை வன்னியர்களும், பட்டியலின மக்களுமே தீர்மானிப்பர்.

Advertisment

2011 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி என்பவரும், அதிமுகவில் அரங்கநாதன் என்பவரும் நின்றனர். தொகுதியில் அறிமுகமே இல்லாத அரங்கநாதன் வெற்றிபெற்றார். எளிமையானவர் எனப் பிரச்சாரம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரான திமுக வேட்பாளர் பிச்சாண்டி தோல்வியைச் சந்தித்தார். வன்னியர்களின், ஓட்டுக்களின் ஆதரவால் அதிமுக அரங்காநதன் வெற்றிபெற்றார். 2016ல் நடைபெற்ற தேர்தலில் திமுகவின்பிச்சாண்டி வெற்றிபெற்றார். இந்த தொகுதியில் மூன்றாவது முறையாகப் பிச்சாண்டி போட்டியிடுகிறார்.

Advertisment

Keelpennathur constituency dmk and pmk

தொகுதி மக்கள் யார் வந்து அழைப்பிதழ் தந்தாலும் அதிமுக உட்பட பிற கட்சியினராக இருந்தாலும் நிகழ்ச்சிக்குப் போய் வாழ்த்திவிட்டு வருவார். இதுவே அவருக்குப் பெரிய பலம். யாரும் எளிதில் சந்திக்கும் நபராக இருப்பதே அவருக்குப் பெரிய பலம். அதேநேரத்தில் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் சுணக்கமாக இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு. கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு சம்மந்தமில்லாதவராக இருந்தாலும் தங்கள் வீட்டுப்பிள்ளை என அத்தொகுதியினர் பிச்சாண்டியை பார்ப்பது அவரது பலம். கீழ்பென்னாத்தூரை தனி தாலுக்காவாக்கினேன் என்பதில் தொடங்கி கடந்த 5 ஆண்டுகளில் தான் செய்த பணிகள் குறித்து பேசி வாக்கு கேட்கிறார்.

தங்களுக்குப் பெரிய பலம் உள்ள தொகுதி என்பதால் பாமக இந்த தொகுதியை அதிமுகவிடம் முரண்டு பிடித்துக் கேட்டு வாங்கியது. வேட்பாளராக அமைப்புச் செயலாளரும், தைலாபுரத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கப் பள்ளியின் பேராசிரியருமான கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமாரை வேட்பாளராக்கியது பாமக தலைமை. இது உள்ளுர் பாமக நிர்வாகிகளை அதிருப்தியடையச் செய்துவிட்டது. அது கீழ்மட்டம் வரை எதிரொலித்தது, சமூக வலைதளங்களிலும் பாமக நிர்வாகிகள் வெளிப்படையாக வேட்பாளரை மாற்ற வேண்டும் எனக் கருத்திட்டனர். பாமக தலைமை, செல்வகுமாருக்கு யாராவது உள்ளடி செய்ய நினைத்தாலும், வேலை செய்ய முடியவில்லை என்றாலும், கட்சியை விட்டுப் போய்டுங்க எனும்ராமதாஸின்எச்சரிக்கைக்குப் பின்னரே, களத்தில் இறங்கி வேலை செய்யத் தொடங்கினர். அதிமுக, பாமக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வேட்பாளர் செல்வகுமார், இளமையில் இருந்தே கட்சிக்காக உழைக்கிறேன், இதனால் திருமணம் தள்ளிப்போக 36 வயதில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருப்பெண்ணை எனக்குத் திருமணம் செய்து வைத்து குடும்பஸ்தானாக்கினார்கள். உங்கள் மாவட்ட மருமகனான நான் உங்களை நம்பி தேர்தலில் நின்றுள்ளேன், என்னை வெற்றி பெறவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என சென்டிமென்டாகப் பேசுகிறார்.

அமமுக சார்பில் கார்த்திகேயன் நின்றுள்ளார், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் சுகானந்தமும் நின்றுள்ளனர். இவர்களெல்லாம் தொகுதியில் எங்குள்ளார்கள் என்பதே தெரியவில்லை. களத்தில் திமுக, பாமக தான் முட்டி மோதுகிறது. பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாமக வேட்பாளருக்கு சரியான வரவேற்பு இல்லை என்பதால் நொந்து போயுள்ளார். அதிமுகவும் இங்கு அடக்கி வாசிக்கிறது. அதேபோல் பிறசாதிகள் 10.5 இடஒதுக்கீடு பாமக பெற்றதில் அதிருப்தியில் உள்ளது. பட்டியலின மக்கள், பிறசாதி மக்கள், வன்னியர்கள் என கலந்துகட்டி ஆதரவு வருவதால் திமுக வேட்பாளர் பிச்சாண்டி தெம்பில் உள்ளார்.