Skip to main content

கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கரோனா ட்வீட்டு! -மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு வேட்டு!

Published on 22/03/2020 | Edited on 22/03/2020

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தேசமே கடைப்பிடித்த ஊரடங்கின் போது, அமைச்சராக இருக்கும் ஒருவர் மீது, ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தது ஏன்?

 

KD Rajendrapalaji's Corona tweet!

 

தென்மாவட்டத்தில் 10 வருடங்களாக தொடர்ந்து ஒருவர் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்தார் என்றால், அது ராஜேந்திரபாலாஜி மட்டுமே. கே.கே.எஸ்.எஸ்.ஆர். கூட, இத்தனை வருடங்கள் அதிமுகவில் தொடர்ந்து மாவட்ட செயலாளராக இருந்ததில்லை. விருதுநகர் மாவட்டத்தில், இதற்குமுன் இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்களைக் காட்டிலும், கட்சிப் பணியில் ஈடுபாடும் வேகமும் காட்டியவர் என்றே, அக்கட்சியினரால் ராஜேந்திரபாலாஜி சிலாகிக்கப்படுகிறார். கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில்,  எத்தனையோ மாவட்ட செயலாளர்களைப் பந்தாடிய ஜெயலலிதா கூட, ராஜேந்திரபாலாஜியிடமிருந்து பொறுப்பினை பறித்ததில்லை. விஸ்வகர்மா என்னும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ராஜேந்திரபாலாஜியே மா.செ.வாக நீடிக்கட்டும் என்ற மனநிலையிலேயே அவர் இருந்தார். அப்படிப்பட்ட ராஜேந்திரபாலாஜி  கட்சிப் பொறுப்பிலிருந்து இப்போது நீக்கப்பட்டிருக்கிறார் என்றால், காரணம் இல்லாமலா இருக்கும்?

இந்து மத நம்பிக்கையும். ஆன்மிக ஈடுபாடும் உள்ள ராஜேந்திரபாலாஜி, சர்ச்சையை ஏற்படுத்தும் பேட்டிகள் மூலம்,  தொடர்ந்து இஸ்லாமிய சமுதாயத்தவரின் கோபத்துக்கு ஆளாகி வந்தார். பா.ஜ.க. ஆதரவு நிலை எடுத்திருப்பதால்,  இஸ்லாமியர்களின் வாக்குகள் இனி அதிமுகவுக்கு கிடைக்கவே கிடைக்காது என்பதையும், அந்த வாக்குகள் திமுகவுக்கே போய்ச் சேரும் என்பதையும்,  அனுபவ ரீதியாக உணர்ந்திருந்தார். அதனால், பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகள் மொத்தமாக அதிமுக பக்கம் திரும்ப வேண்டும் என்ற கணக்கோடு,  இந்துக்களுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே  பேசி வந்தார்.  

 

KD Rajendrapalaji's Corona tweet!

 

ராஜேந்திரபாலாஜியின் இந்தப் போக்கினைப் பிடிக்காத அந்தத் தரப்பினர், அமைச்சர் பொறுப்பிலிருந்தும், மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்தும் அவரை  நீக்க வேண்டும் என்று அதிமுக மேல்மட்டத் தலைவர்களுக்கு, தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். ராஜேந்திரபாலாஜியோ, இந்து ஆதரவு நிலையில் மிகவும் உறுதியாக இருந்தார். இது, அதிமுக மேலிடத்தை, ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக சிந்திக்க வைத்தது.

 

bbbb


இந்த நிலையில்தான்,  ‘கொரோனாவிடமிருந்து இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்று’ என ட்வீட் செய்தார், ராஜேந்திரபாலாஜி. அதில், இந்துக்களின் மத வழிபாட்டு நம்பிக்கைகளையும், இயற்கையான வழிபாடுகளையும் கிண்டல் செய்த போலி போராளிகளுக்கு இன்று நாட்டில் நடக்கக்கூடிய சம்பவம், ஒரு பாடம்; ஒரு படிப்பினை! இறைவா! ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே! கொரோனாவிடமிருந்து காப்பாற்று!’ என்று குறிப்பிட்டிருந்தார்.  ஏற்கனவே அதிருப்தியில் இருந்த அதிமுக மேல்மட்டத் தலைவர்களுக்கு இந்த ட்வீட் மேலும் எரிச்சலை ஏற்படுத்த, ராஜேந்திரபாலாஜியிடமிருந்த மா.செ. பொறுப்பினை பறித்துவிட்டனர்.
 

 

KD Rajendrapalaji's Corona tweet!

 

அமைச்சரின் விசுவாசிகளோ, “அந்த ட்வீட்டில் ஒரு தவறும் இல்லையே! வேப்பிலை, மஞ்சள் போன்ற கிருமி நாசினியை, வழிபாட்டுடன் பயன்படுத்தும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார்கள், நம் முன்னோர்கள். அம்மை போன்ற கடும் நோய்களில் இருந்தெல்லாம், மக்கள் தங்களைக் காத்துக்கொள்வதற்கு, இந்து மதம் வழிகாட்டியது. இந்துக்களின் ஒவ்வொரு செயல்பாடும் விஞ்ஞானபூர்வமானது என்று அர்த்தமுள்ள இந்து மதத்தில் நிறையவே விளக்கியிருக்கிறார், கவிஞர் கண்ணதாசன். இந்த நம்பிக்கை, தொடர்ந்து கேலி பேசப்பட்டதால், பலரும் முன்னோர் காட்டிய வழியை மறந்துபோனார்கள். ஒருகாலத்தில், கிருமியை விரட்டும் ஆயுதமாக நமது வழிபாட்டு முறை இருந்தது. இன்றோ, கொரோனா வைரஸால், உயிருக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறோம். இதனைச் சொல்ல வேண்டிய நேரம் இதுதான் என்பதால்,  சுட்டிக்காட்டியிருக்கிறார் அமைச்சர்.  அதற்காக, வேப்பிலையும் மஞ்சளும் கொரோனாவை விரட்டிவிடும் என்று சொல்வதற்கில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்காகவாவது, நமது வழிபாட்டு முறையினை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் மீதான அக்கறையில்தான், இப்படி ஒரு ட்வீட் போட்டார், ராஜேந்திரபாலாஜி. அதற்காகவா இந்த நடவடிக்கை? கொடுமை!” என்றனர்.
 

ஊரடங்கு நாளில், கே.டி.ராஜேந்திரபாலாஜி விஷயத்தில் முற்றிலும் புதிய பாணியில் தாக்குதல் நடத்தியிருக்கிறது, கரோனா! 

 

 

சார்ந்த செய்திகள்