Skip to main content

மோடி, எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தங்களுக்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்து விடக்கூடாது: சிபிஐ(எம்) வலியுறுத்தல்

Published on 11/02/2019 | Edited on 11/02/2019
k.balakrishnan



மோடி, எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தங்களுக்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்து விடக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

தமிழகத்தின் பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து துவக்கி வைத்திருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானமாகும். தமிழகத்திற்கு  கடந்த நான்கரை ஆண்டுகளாக  நரேந்திர மோடி அரசு  தொடர்ந்து துரோகமிழைத்து  வருகிறது. ஏற்கெனவே நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு கோரும் இரண்டு சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மறுப்பு, தமிழக அரசு கோரிய வறட்சி, வெள்ளம், கஜா புயல் நிவாரண நிதி வழங்க மறுப்பு, காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு ஒப்புதல் போன்ற பல செயல்களைக் குறிப்பிட முடியும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்குக் கூட வர மறுத்தவர்தான் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி என்பது மறக்க முடியாததாகும். 
 

2018 -2019ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் மத்திய அரசின் தமிழக விரோதப்போக்கை பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். குறிப்பாக மாநிலங்களுக்கிடையிலான பொருட்கள், மற்றும் சேவை வரி  ஐழுளுகூ  2017-2018ம்  ஆண்டில் தமிழகத்திற்கு தர வேண்டிய ரூபாய் 5454 கோடி, பொருட்கள் மற்றும் சேவை வரிகள் தமிழகத்திற்கான பங்கில் ரூ.455.16 கோடி மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைப்படி வழங்க வேண்டிய ரூ.560.15 கோடி, உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.3852.17 கோடி, மாணவர்களுக்கு வழங்க வேண்டிய போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்   பாக்கித்தொகை ரூ.985.08 கோடி ஆகிய தொகைகளை மத்திய அரசு வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டுள்ளது. மேலும், மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய பல திட்டங்களுக்கான நிதிஒதுக்கீட்டை குறைத்து மாநிலத்தின் தலையில் சுமையை ஏற்றியுள்ளது. இத்தகைய வரலாற்று அநீதிகளை மத்திய மோடி அரசு இழைத்து வருவதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டு விட்டு, அவரை அழைத்து தமிழகத்தில் விழா எடுப்பதானது எட்டி உதைக்கும் காலுக்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதற்கு சமமாகும். 
தங்களது ஊழல் முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் அவைகளுக்கு துணை போகும் மோடி அரசிடம் தமிழக நலன்களை காவு கொடுத்து அதிமுக அரசு சரணாகதி அடைந்துள்ளது மட்டுமன்றி, பாஜகவுடன் தேர்தல் உறவு கொள்ளவும் முனைந்துள்ளது.
 

நாடு முழுவதும் மக்கள் விரோத கொள்கைகளாலும், இமாலய ஊழல்களாலும் தோல்வி பயத்தில் மூழ்கியுள்ள பாஜகவுடன் கூட்டு சேர்வதற்கு பிரதமர் மோடியிடம் அதிமுக சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலோடு கடந்த 15 மாதங்களாக காலியாக உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்களை நடத்தாமல் ஒத்தி வைக்க வேண்டுமென கோரியுள்ளதாகவும், அதை பிரதமர் பரிசீலிப்பதாகவும் அதிர்ச்சியான செய்திகள் தெரிவிக்கின்றன. 
தேர்தல் என்றாலே அதிமுக பயந்து நடுங்கி வருகிறது. தேர்தல்கள் நடந்தால் தங்களது வண்டவாளம் பகிரங்கமாகி விடும் என்பதால், உள்ளாட்சி மன்றத்தேர்தல்களை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சொத்தையான காரணங்களைக் கூறி தள்ளிப்போட்டு வருகிறது. இதனால் உள்ளாட்சி நிர்வாகங்கள் சீரழிந்து மக்கள் அடிப்படை தேவைகளுக்கு ஆலாய் பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 

தற்போது 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடந்தால் அனைத்திலும் படுதோல்வி அடைவதுடன், அதன் மூலம் பதவி இழக்க நேரிடும் என்பதாலும், தொடர்ந்து பதவியைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்பதாலும் தேர்தலை ஒத்திப்போட எடப்பாடி அரசு முயற்சித்து வருகிறது என்பது தெளிவாகும். இதற்காகவே, மோடியை தமிழகத்திற்கு அழைத்து வந்து அதிமுக அரசு விழா எடுத்துள்ளது போலும்.
 

தமிழகத்தில் 21 சட்டமன்றத் தொகுதிகளை காலியாக வைத்துக் கொண்டு அரசு நிர்வாகம் நடத்துவது வரலாற்றிலேயே முதன் முறை என்பது மட்டுமன்றி அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாகும். இத்தொகுதிகளில் உள்ள மக்களது பிரச்சனைகளை கவனிப்பதற்கு சட்டமன்றப்பிரதிநிதிகள் இல்லாமல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் கட்டாயம் நடத்த வேண்டுமென அனைத்து எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும், சம்பந்தப்பட்ட தொகுதி வாக்காளப்பெருமக்களும் கோரி வருகின்றனர். ஆனால், எடப்பாடி அரசின் வற்புறுத்தல் காரணமாக மோடி அரசும் தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்த மறுத்து வருகின்றன. 
 

நாடாளுமன்றத் தேர்தலோடு 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களையும் நடத்துவதற்கு தாங்கள் தயாராக உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற இடைத்தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தலோடு இணைத்து கட்டாயம் நடத்திட வேண்டும். மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து இடைத்தேர்தல்களை தள்ளி வைப்பதாக முடிவெடுத்தால் அது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது மட்டுமன்றி தேர்தல் ஆணையத்தின் மீதான வரலாற்றுக்கரும்புள்ளியாக பதிவாகும் என்பது திண்ணம். 
 

ஆளும் கட்சிகளது விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு சட்டம் வகுத்துத் தந்துள்ள விதிப்படி தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். அரசியல் காரணங்களுக்காக இதை நிறைவேற்றத் தவறுவது  இந்திய ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைப்பதாக அமைந்து விடும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சியின் தமிழ்நாடு  மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
 

அரசியல் நெறிமுறைகளை தொடர்ந்து காலில் போட்டு மிதித்து வரும் மோடி அரசு, அரசியல் கூட்டணி லாபத்திற்காக இடைத்தேர்தல்களை தள்ளி வைக்க முயலுமானால் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுக்க தமிழக மக்களும், ஜனநாயக சக்திகளும், அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டுமென   மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.