ADVERTISEMENT

காவல்துறையால் தாக்கப்பட்ட காயல்பட்டினம் இளைஞருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் -மு.தமிமுன் அன்சாரி

08:57 AM Jun 30, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

காவல்துறையால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காயல்பட்டினம் இளைஞரின் முழுச் செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் எனவும் கொலை வெறித் தாக்குதலை நடத்திய காவலர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹபீப் முஹம்மது (31) என்பவர் கடந்த ஜூன் 9 அன்று முகக்கவசம் அணியாமல் வந்ததாகவும், அப்போது காவலர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து ஹபீப் முஹம்மது ஆறுமுகநேரி காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவர் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரின் இரண்டு சிறுநீரகமும் மிகவும் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், தற்போது டயாலிஸஸ் கிசிச்சை பெற்று வருகிறார். அவர் மரணத்தை எதிர்நோக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.

அவர் குற்றம் செய்திருப்பின் வழக்குப்பதிவு செய்வது தான் காவல் துறையின் கடமையாகும். அவர் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தும் உரிமையைக் காவல்துறைக்கு சட்டம் வழங்கிடவில்லை.

எனவே சட்டத்துக்குப் புறம்பாக இவர் மீது கொலை வெறித் தாக்குதலை நடத்திய காவலர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, பணி இடை நீக்கம் செய்வதோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது முழுச் செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ஊரடங்கை முன்னிட்டு காவல்துறையினர் பல இடங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் செய்திகள் கவலையளிக்கிறது. இவ்விவகாரங்களில் தமிழக காவல் துறை இயக்குனரகம் உரிய கவனம் செலுத்தி சட்டத்தின் வழி செயல்பட்டு, மனித உரிமைகளைக் காத்திட முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT