வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக அவர், அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்நந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி உள்ளிட்ட2000க்கும்மேற்பட்ட இந்தியா கூட்டணிக் கட்சித்தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மாவட்டத்தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதற்கு முன்னதாக வேலூர் அண்ணா சாலையில் உள்ள வேலூர் மாநகர் திமுக அலுவலகத்தில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தொடர்ச்சியாக ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலை, பெரியார் சிலை, காந்தி சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்துவிட்டு சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவைத்தாக்கல் செய்தார்.
அதற்கு முன்னதாக இந்தியா கூட்டணி தொண்டர்கள் ஆரவாரத்துடன் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகபட்டாசுகள் வெடித்து கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் எனப் பல்வேறு மேளதளங்கள் இசைத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனுவைத்தாக்கல் செய்தார்.