Skip to main content

பாஜக ஜனநாயக நேர்மை பேசலாமா? நிர்மலா சீதாராமனுக்கு கவிஞர் காசிமுத்து மாணிக்கம் கண்டனம்

kasi muthu manickam dmk

 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து திமுக வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், “பாரத நாட்டின் நிதி அமைச்சர் எங்கள் பெருமைக்குரிய மண்ணின் மகள் தமிழச்சி நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பரென்ஸ் மூலம் பேசியுள்ளார். அதில் அவர் கரோனா ஒழிப்பிற்கான ஒத்துழைப்பையோ, சீனாவின் எல்லை ஆசை வெறியையோ எடுத்துச் சொன்னால் பரவாயில்லை. ஆனால் 45 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க. ஆட்சியை கலைத்த காங்கிரசுடன் இணைந்து தி.மு.க. ஜனநாயகம் பேசுவது வியப்பாக உள்ளது என்கிறார். எமர்ஜென்சி கொண்டு வந்து பல தலைவர்களை சிறையில் அடைத்த காங்கிரஸ் என்றும் பொங்கி உள்ளார்.

 

செட்டி கெட்டால் பட்டு வேட்டி என்பது போல பேச ஒன்றும் கிடைக்காமல் பழைய, பழைய நிகழ்வை நினைவூட்டுகிறார். ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அந்த நிகழ்வுக்காக அன்னை இந்திரா மன்னிப்பு கேட்ட பிறகுதான் இணைந்தோம். ஆனால் 1998ல் கூட்டணியாக போட்டியிட்ட அதிமுக நீண்ட இழுப்புக்கு பின், மதிமுக, பாமக ஆதரவு கடிதம் கொடுத்த பிறகுதானே, கடிதம் தந்தது, அதுகூட பரவாயில்லை. 13 மாதத்திலேயே பாஜக ஆட்சியை ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோற்கடித்ததே. 

 

இரும்பு மனிதர் அத்வானிஜியை செலக்டிவ் அம்னீஷியா உள்ளவர் என்று ஜெயலலிதா கூறினாரே. அதன்பின் எந்தக் கட்டத்திலாவது தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டதா அதிமுக. மன்னிப்பு கேட்காத சூழலில் எந்த அதிமுக வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்ததோ அதே அதிமுகவுடன் வாஜ்பாய்யே 2004ல் கூட்டணி வைத்தது ஏன்?

 

ஆனால் திமுக, அன்னை இந்திராவின் மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்ல, தேசத்திற்காக அன்னை இந்திரா - தியாகி இராஜீவ்காந்தியின் மரணத்திற்குப் பின் இன்று அவர்களின் வாரிசை ஆதரிக்கிறோம். 

 

ஒன்றிரெண்டு பெற்றால்கூட ஆட்சி என அலையும் பாஜக, மாற்று கட்சி உறுப்பினரை தாவ வைத்து, இராஜினாமா செய்யச் செய்து ஆட்சியையும், இராஜ்யசாப உறுப்பினர்களையும் பெற்றிடும் பாஜக ஜனநாயகத்தை பேசுகிறது.

 

காஷ்மீரில் பரூக் அப்துல்லா போன்ற சிங்கங்களை கூண்டில் வைப்பதுபோல வீட்டில் சிறை வைத்து கொடுமை செய்து வரும் பாஜக ஜனநாயகம் பேசுகிறது. வாஜ்பாய், அத்வானியை அவமானப்படுத்திய அதிமுக ஆட்சியினை காப்பாற்ற, செல்லாத நோட்டை எல்லாம் குழுவில் சேர்த்து மோசடிக்கு உடந்தை போடும் பாஜக ஜனநாயக நேர்மை பேசலாமா?

 

பெண்ணை மணக்காமல் மண்ணை மனந்த மகாராஜன்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் வீட்டிலே. 10 ஆண்டுகளுக்குள் பாஜகவுக்கு வந்த நீங்களும், ஸ்ருதி இராணியும் கேபினெட் அமைச்சர்கள். இதையே பாஜக தொண்டன் தாங்கும்போது, காங்கிரசினை திமுக தொண்டன் தாங்க மாட்டானா?

 

சித்தாந்தம் பேசுவதெல்லாம் எதிர்கட்சிகளுக்குதான் உங்களுக்கு இல்லை. அம்மா, உங்களுக்கு தெரியுமா? காவி - சிவப்புடன் (கம்னியூஸ்டுடன்) கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தது தெரியுமா? மெகபூபாவின் முஸ்லீம் லீக்குடன் பாஜக சேர்ந்து காஷ்மீரில் ஆட்சி அமைத்தது தெரியுமா?

 

பாலை காப்பதற்கு யாரை காவல் வைக்கலாம் என பால்காரனுக்கு தெரியும் - பூனை ஆலோசனை கூற வேண்டாம். எங்களை வழி நடத்திட, வாழ்வு தந்திட எங்கள் இளைய கலைஞர் தலைவர் தளபதிக்கு தெரியும்.” இவ்வாறு கூறியுள்ளார்.