ADVERTISEMENT

"அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை" - கார்த்திக் சிதம்பரம் எம்பி 

11:24 AM Feb 13, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அதிமுக, திமுக, நாம் தமிழர், தேமுதிக, சுயேச்சைகள் என தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் ஈரோட்டில் 11ம் தேதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிக்க வந்துள்ளேன். சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி பெறுவார். ஈவிகேஎஸ். இளங்கோவன் இந்த ஊரைச் சேர்ந்தவர். நன்கு பிரபலமானவர் அவருக்கு அறிமுகம் தேவையில்லை. திமுக தலைமையில் நடைபெறும் ஆட்சிக்கு மக்கள் வாக்கு அளிப்பார்கள். தமிழ்நாட்டில் நச்சு அரசியல் வந்துவிடக் கூடாது. அதற்காக இளங்கோவனை வெற்றி பெற வைக்க வேண்டும். 77 வேட்பாளர்கள் 5 பெட்டி வைக்கும் நிலை உள்ளது. ப.சிதம்பரம் பிப்ரவரி 18 மற்றும் 19 தேதிகளில் பரப்புரைக்கு வருவார்.

எங்களை விட பலமான கட்சி திமுக என்பதை ஒப்புக் கொள்கிறேன். எங்களுக்கும் ஒரு வாக்கு வங்கி உள்ளது. செயற்கையாக ஒன்று சேர்க்கப்பட்ட கட்சி தான் அதிமுக. அதிமுக வைக்கும் விமர்சனங்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். திமுகவிற்கு வாக்குறுதி நிறைவேற்ற இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. நிச்சயம் நிறைவேற்றுவார்கள். கூட்டணியில் கருத்து வேறுபாடு இருக்க தான் செய்யும். நாங்களும் திராவிட கட்சிகளும் எல்லா விதத்திலும் ஒன்றுபடுவதில்லை. மத்திய பட்ஜெட்டில் வருமான வரி குறைப்பை வரவேற்று நான் கருத்து கூறினேன். எனது தந்தை அவரது கருத்தை கூறினார். இருவரும் ஒரே கருத்தை பிரதிபலிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது தந்தைக்கும், எனக்கும் பல்வேறு விஷயங்களில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. நான் எனது சிந்தனையை கூறுகிறேன்.

இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகளில் 75 சதவீதம் பேர் விசாரணை கைதிகளாக பல ஆண்டுகளாக உள்ளனர். அவர்களை சிறப்பு நீதிபதிகளை நியமித்து தகுதியானவர்களை உடனே விடுவிக்க வேண்டும். பொதுவாக சந்தேகத்திற்கிடமாக கைது செய்யப்படுபவர்கள் 15 நாட்கள் காவலில் வைக்கப்படுவர். குற்றச்சாட்டு உறுதியானால் மட்டுமே தொடர்ந்து சிறையில் வைப்பார்கள். ஆனால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் உட்பட 75 சதவீத சிறைக் கைதிகள் விசாரணை என்ற பெயரில் பல ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் பங்கு சந்தை ஊழல் நடைபெற்றது குறித்து கூட்டு பாராளுமன்ற குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். அதேபோன்று தற்போது அதானி நிறுவன குற்றச்சாட்டின் மீது விசாரணை நடத்த வேண்டும். ஏனென்றால் பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் வங்கி, எல் ஐ சி போன்றவை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன. பிரதமர் மோடி காங்கிரஸ் பற்றி கருத்து கூறும்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்யும் என்கிறார். கேம்பிரிட்ஜ் ஹார்வர்டு போன்றவையும் ஆராய்ச்சி செய்யட்டும். இது நடைமுறைதான். தமிழக முதல்வர், அமைச்சர்களின் செயல்பாடு குறித்து வருத்தம் தெரிவித்து பேசி உள்ளார். அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. ஏனென்றால் நான் திமுக செய்தி தொடர்பாளர் அல்ல. முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல். எனவே ஏராளமான அமைச்சர்கள் ஆர்வம் காரணமாக இங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குறித்து எந்த கருத்து வேற்றுமையும் இல்லை" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT