Skip to main content

கர்நாடகத்தின் கருத்து விஷமத்தனமானது! அன்புமணி இராமதாஸ்

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. இரு மாநில உறவுகளை பாதிக்கும் வகையிலான கர்நாடக அரசின் இந்த நிலைப்பாடு விஷமத்தனமானது: கண்டிக்கத்தக்கது.

 

anbumani ramadoss


 

காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளின்படி காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை வழங்காமல் ஏமாற்றி வரும் கர்நாடக அரசு, அடுத்தக்கட்டமாக மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை ஒன்றை கட்ட முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய அணை கட்டுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்த அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு கடந்த ஜூன் மாதம் விண்ணப்பித்தது. ஆனால், இந்த ஆய்வுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்திருந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.அதனடிப்படையில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி நடைபெற்ற சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுனர் குழு கூட்டத்தில் கர்நாடக கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.
 

இத்தகைய சூழலில் தான் மேகதாது அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்றும்,  தமிழகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. கர்நாடகத்தின் இந்த வாதம் தவறானது ஆகும். தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணைகளை கட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை ஆணையிட்டுள்ளது.


 

மத்திய அரசும் இதை பல்வேறு தருணங்களில் உறுதி செய்துள்ளது. முந்தைய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி 09.06.2015 அன்று எனக்கு எழுதியக் கடிதத்தில்,‘‘மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடகம் எப்போது தாக்கல் செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது’’ என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த நிலைப்பாடு மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பதற்கும் பொருந்தும். 2008-09 காலத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நலனுக்காக ஓகனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த முயன்ற போது, கர்நாடகத்தின் ஒப்புதலைப் பெறாமல் அத்திட்டத்தை செயல்படுத்த  அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி எடியூரப்பா பல போராட்டங்களை நடத்தினார்.
 

தமிழகத்தின் தண்ணீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்வதற்கே கர்நாடகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று அப்போது வலியுறுத்திய எடியூரப்பா, இப்போது தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரை தடுத்து நிறுத்துவதற்காக அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறுவது விசித்திரம் ஆகும். கர்நாடகத்தின் இந்த கருத்து இரு மாநில உறவுகளுக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது ஆகும். கர்நாடகத்தின் வாதத்தை மத்திய அரசு ஒருபோதும் ஏற்கக்கூடாது.


 

அதுமட்டுமின்றி, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க புதிய அணை கட்ட வேண்டியது அவசியம் என்று கர்நாடகம் கூறியிருப்பது மிகவும் அபத்தமானது ஆகும். கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே இப்போது 104.59 டி.எம்.சி கொள்ளளவுள்ள 4 அணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு கர்நாடகம் மனமுவந்து தண்ணீர் திறந்து விடுவதில்லை. மாறாக 4 அணைகளும் நிரம்பிய பிறகு வடியும் வெள்ள நீர் மட்டுமே தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சுமார் 70 டி.எம்.சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் காவிரியில் தமிழ்நாட்டிற்கு சொட்டு தண்ணீர் கூட திறக்கப்படாது.
 

எனவே, மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை கர்நாடக அரசுக்கு மத்திய அரசு வழங்கக்கூடாது. இது தொடர்பான கர்நாடக அரசின் கடிதத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மேகதாது அணை கட்டுவது தொடர்பான அடிப்படை ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடகத்துக்கு கொடுக்கப்பட்ட அனுமதியையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“எனது இறுதிச்சடங்கிற்காவது வாருங்கள்” - கார்கே பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Karke emotional speech at karnataka for lok sabha election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதில் கர்நாடகா மாநிலம், கலபுர்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார்.

அதன்படி, காங்கிரஸ் சார்பில் அப்சல்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ண தொட்டாமணியை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்றால், கலபுர்கியில் தனக்கு இடமில்லை என்று அவர் கருதுவார். இந்த முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், எனக்கு இங்கு இடமில்லை, உங்கள் இதயத்தை என்னால் வெல்ல முடியாது என்று நினைப்பேன். 

காங்கிரஸுக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காவிட்டாலும், என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதிச் சடங்கிற்கு வாருங்கள். தகனம் செய்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும் அல்லது புதைக்கப்பட்டால் மண்ணை வழங்கவும். எனது இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்கள் வாக்கு வீண் போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

கலபுர்கி மக்கள் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியை சந்தித்தேன். எம்.பி., அமைச்சராக இருந்து நான் செய்த வளர்ச்சிப் பணிகள் உங்களுக்குத் தெரியும். மீண்டும் காங்கிரஸ் கட்சி தோற்றால் உங்கள் இதயத்தில் எனக்கென்று இடமில்லை என்று கருதுகிறேன். நான் அரசியலுக்காக பிறந்தவன். நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ, இல்லையோ, இந்த நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்” என்று கூறினார்.