Skip to main content

கர்நாடகத் தேர்தல் இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல்; பரபரப்பாக வேலை பார்க்கும் பன்னீர்செல்வம் அணி!

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

Karnataka election EPS OPS clash; The Panneerselvam team is busy working!

 

அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின் அதிமுக தலைமை பொறுப்புகளுக்கு வருவதற்கான போட்டிகள் அதிகரித்தன. இபிஎஸ் தரப்பினர் பொதுக்குழு கூட்டி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க, அன்றில் இருந்து ஓபிஎஸ் அணியினர் சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டப்போராட்டத்தில் பல வழக்குகளில் இபிஎஸ் தரப்பிற்கு சாதகமாகவே தீர்ப்புகள் வந்தாலும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் ஓபிஎஸ் தரப்பினர் போராடி வருகின்றனர். 

 

இது ஒருபுறமிருக்க, கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சியினராலும் பிரச்சாரம் மிக மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலையில் மும்முரமாக இருக்க தமிழகத்தில் உள்ள கட்சியினரும் கர்நாடகத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளனர்.

 

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவிற்கு கர்நாடகத்தில் செல்வாக்கு உண்டு. புகழேந்தியை கர்நாடக மாநில அதிமுகவின் பொறுப்பாளராக ஜெயலலிதா நியமித்திருந்தார். தற்போது புகழேந்தி ஓபிஎஸ் ஆதரவாளராக இருப்பதால் கர்நாடகத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. 

 

இந்நிலையில், கர்நாடகத்தில் ஓபிஎஸ் தரப்பினர் போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. கர்நாடகத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பினர் போட்டியிடுவதற்கு பின்னால் புகழேந்தியின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மைசூர், பெங்களூர், கோலார் தங்கவயல் போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஓபிஎஸ் தரப்பில் நிர்வாகிகளை நியமனம் செய்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அறிவித்துள்ள நிர்வாகிகளில் பலர் முன்பிருந்தே கர்நாடக அதிமுகவின் நிர்வாகிகளாக இருப்பவர்கள். கர்நாடக மாநில அதிமுக நிர்வாகிகளாக 63 பேர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில கழக அவைத் தலைவராக ஆனந்த்ராஜ் என்பவரும், மாநில கழகச் செயலாளராக கே.குமார் என்பவரும் மாநில கழக பொருளாளராக மனோகர் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

கர்நாடகத்தில் ஓபிஎஸ் அணி போட்டியிடுவது குறித்து நாம் விசாரித்த போது, ஜெயலலிதாவால் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட புகழேந்தியே முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை விட என் மனைவி மற்றும் தாய் பல மடங்கு உயர்ந்தவர்கள் எனக் கூறிய விவகாரத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, கர்நாடகத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கு குறித்தும் அம்மாநிலத்தில் உள்ள தலைவர்களுடன் தனக்கு இருக்கும் பழக்கவழக்கங்கள் குறித்தும் படங்களைக் காட்டி பேசி இருந்தார். ஜெயலலிதாவை தவறாகப் பேசியது குறித்து கர்நாடகத்தில் செய்தி சென்றால் கர்நாடகத்தில் பாஜக தோற்றுவிடும் எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். 

 

இந்நிலையில் தமிழகத்தில் இபிஎஸ் தரப்பு மற்றும் அவரது ஆதவாளரகளுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இரு தரப்பு தலைவர்களும் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் என்றே கூறி வந்தாலும், அண்ணாமலை வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட விரும்புவதாகவே செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. எனவே, கர்நாடகத்தில் ஓபிஎஸ் அணியினர் பாஜகவிற்கு ஆதரவு கொடுத்து பாஜகவுடனான தங்கள் உறவை பலப்படுத்திக்கொள்ள விரும்புவதாகக் கூறப்படுகிறது.  

 

அதேவேளையில், கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் இபிஎஸ் தரப்பினரும் போட்டியிட ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 3 தொகுதிகளில் இபிஎஸ் அணியினர் போட்டியிட பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினர் கர்நாடகத் தேர்தலிலும் தங்கள் பலத்தை நிரூபிக்க போராட இருக்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்