கர்நாடகாவில் மே மாதம் 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியானகாங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில்ஈடுபட்டுள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் 224தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து கர்நாடக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும்இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 28ம் தேதி பிரதமர் மோடி, கர்நாடகாவில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் பாஜகவை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொளி வாயிலாக உரையாடினார். அப்போது அவர், “இலவசமாகப் பொருட்கள் வழங்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்த நிலையில்,நேற்று பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
அதில், பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால்,கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம் (5 கிலோ அரிசி + 5 கிலோ தினை) இலவசமாக வழங்கப்படும்.தீபாவளி, உகாதி மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகிய பண்டிகைக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.தினமும் 1/2 லிட்டர் நந்தினி பால் இலவசமாக வழங்கப்படும்.காசி மற்றும் கேதார்நாத் புனித யாத்திரைக்காக ஏழை மக்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.கர்நாடகா முழுவதும் உள்ள முக்கிய கோவில்களின்பராமரிப்புக்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்.வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.வேலையில்லா பட்டதாரிகளுக்கு இரண்டு வருடத்திற்கு மாதம் 3000 ரூபாய் நிதியுதவி,டிப்ளமோ முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு இரண்டு வருடத்திற்கு மாதம் 1500 ரூபாய் நிதியுதவி,கர்நாடக மாநில முழுவதும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளது.