கர்நாடக தேர்தல்: போர்க்கொடி தூக்கிய தொண்டர்கள்; சிக்கலில் பாஜக!

karnataka election bjp candidate list release related issue

கர்நாடக மாநில சட்டப்பேரவைத்தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை வகுத்து கர்நாடகா மாநில பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய அம்மாநிலத்தின் பிரதான கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன. அதே நேரம் கூட்டணி குறித்த பேச்சுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 189 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் புதியவர்கள் 52 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் 8 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகாவன் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

இந்நிலையில் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ராம்துர்க் தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக உள்ள மகாதேவப்பா யாதவுக்கு நேற்று வெளியான பாஜகவின்முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறாததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாஜகவிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், முழக்கங்களையும் எழுப்பினர். மேலும் சமீபத்தில் பாஜகவில் இணைந்த சிக்க ரேவனாவுக்கு ராம்துர்க் தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பெலகாவி வடக்கு தொகுதி பாஜக எம்எல்ஏ அனில் பெனகேவுக்கு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

karnataka MLA
இதையும் படியுங்கள்
Subscribe