Advertisment

விமர்சித்த கராத்தே தியாகராஜன்; நயினார் நாகேந்திரன் விளக்கம்!

 Karate Thiyagarajan critic Nainar Nagendran explains

திருநெல்வேலியில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “2023ஆம் ஆண்டு டிசம்பரில் எப்படிப்பட்ட கனமழை பெய்தது என்று அனைவருக்கும் தெரியும். அதனால், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் எப்படியெல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டது என்றும் நன்றாக தெரியும். அந்த பாதிப்புகளிலிருந்து மீள, மத்திய அரசிடம் நாங்கள் நிதி கேட்டோம். இரண்டு மத்திய அமைச்சர்கள் வந்தார்கள். ஆனால், அவர்கள் உடனடியாக இடைக்கால நிதி உதவியைக் கூட செய்யவில்லை. நயினார் நாகேந்திரன் கோபித்துக்கொள்ளக் கூடாது. அவருக்கும் உண்மை தெரியும். ஆனால், அவர் பேசமாட்டார். நீங்கள் பேசுங்கள் என்றுதான் எனக்கு அனுமதி கொடுப்பார்.

Advertisment

இருந்தாலும், மாநில அரசின் நிதியை வைத்து நிவாரண பணிகளை செய்தோம். தொடர்ந்து மத்திய அரசிடம் நிதி கேட்டு வலியுறுத்தினோம். கொடுக்காத அவர்களை கண்டித்தோம். அப்போதும் வரவில்லை. நாடாளுமன்றத்திலும் பேசினோம். அப்போதும் வரவில்லை. ஏன், நீதிமன்றம் சென்றோம். அதன்பிறகுதான் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியை அறிவித்தார்கள். அதுவும் எவ்வளவு?. கேட்டது, 37 ஆயிரத்து 907 கோடி ரூபாய். வேறு வழியில்லாமல் மத்திய அரசு கொடுத்தது, வெறும் 276 கோடி ரூபாய். கேட்டதில் ஒரு விழுக்காட்டைக் கூட கொடுக்கவில்லை. இந்த பட்ஜெட்டிலாவது கேட்ட நிதிகளை ஒதுக்கித் தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை. தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது. நீதியும் கிடையாது என்று ஒதுக்கிவிட்டார்கள். மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது மத்திய பாஜக அரசு. அவர்களை பொருத்தவரைக்கும், கூட்டணியில் இருக்கும் மாநிலங்களுக்கும், தேர்தல் வரும் மாநிலங்களுக்கும் மட்டும்தான் அறிவிப்புகளையும் நிதியையும் கொடுப்பார்கள்.

Advertisment

இந்தியாவின் வரைபடத்தில் மட்டும், தமிழ்நாடு இருந்தால் போதுமா? அரசாங்கம் வெளியிடும் நிதிநிலை அறிக்கையில் இருக்க வேண்டாமா?. மத்திய அரசின் திட்டங்களில் தமிழ்நாட்டின் பெயர் இருக்க வேண்டாமா?. தமிழ்நாட்டிற்கு சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டாமா?. தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்க மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தால் போதும் என்று நினைக்கிறார்களா?. இப்படி நாங்கள் கேட்கும் கேள்விகள் எதற்கும், பா.ஜ.க.விடம் இருந்து எந்த பதிலும் வராது. திருநெல்வேலி அல்வா என்றால் உலக அளவில் புகழ்பெற்றது. ஆனால், இப்போது, மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் அதைவிட புகழ்பெற்றதாக இருக்கிறது. திராவிட மாடல் அரசை பொருத்தவரைக்கும் மத்திய அரசை பொருட்படுத்தாமல், நமக்கு நாமே என்று தமிழ்நாட்டை மேம்படுத்தி வருகிறோம். அதனால்தான், மத்திய அரசு வெளியிடும் எல்லா புள்ளிவிவரங்களிலும் முன்னணியில் இருக்கிறோம்” எனப் பேசியிருந்தார்.

இத்தகைய சூழலில் தான் சென்னை திருவான்மியூரில் மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டம் நேற்று முன்தினம் (12.02.2025) பாஜக மாநிலச்செயலாளர் கராத்தே தியாகராஜன் ஏற்பாட்டில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், “திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியையும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரனும் கலந்து கொண்டார். மேடையில் நயினார் நாகேந்திரனை வைத்துக்கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார். ஆனால் அதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை” எனப் பேசியிருந்தார். இது குறித்து தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “இது பற்றி கருத்து கிடையாது. சபை நாகரிகம் என்று ஒன்று இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Tirunelveli
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe