Skip to main content

எந்த சொத்தையும் நான் அபகரித்தது இல்லை: கோபண்ணா பேட்டி

Published on 29/06/2019 | Edited on 29/06/2019

 

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன், அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையில் இன்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்த அவர், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.


  karate thiagarajan


இதுகுறித்து டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கோபண்ணா, சென்னையில் ராகுல்காந்தி பத்திரிகையாளர் சந்திப்பில், அதன் பாஸ்களை 50 ஆயிரம், லட்சத்துக்கு விற்றதாக சொல்கிறார். அந்த மாதிரியே விற்றால் யார் அதனை வாங்க முன்வந்தார்கள் என்று தெரியவில்லை. அதனை கராத்தே தியாகராஜன்தான் விளக்க வேண்டும். 
 

அதேபோல் அறக்கட்டளை சொத்துக்களை நான் அபகரித்தாக சொல்கிறார். அறக்கட்டளையில் உள்ள இடத்தில் நான் நடத்துகிற தொழிலுக்கு ரெண்டல் அக்கிரிமெண்ட் போடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் நான் தொழில் செய்கிறேன். எந்த சொத்தையும், எந்த காலத்திலும் நான் அபகரித்தது இல்லை. என் நேர்மைக்கு சான்றாக காமராஜ் ஒரு சகாப்தம் என்கிற ஒரு நூலை, ஒரு அரிய பொக்கிஷத்தை பெருந்தலைவர் காமராஜருக்காக வெளியிட்டேன். ஐந்து பதிப்புகளை நான் வெளியிட்டு விற்றிருக்கிறேன். அந்த அடிப்படையில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் ஆட்சி காலத்தில் காமராஜ் என்ற விருதினை எனக்கு வழங்கியிருக்கிறார். இதைவிட நேர்மைக்கு வேறு சான்று தேவையில்லை. 
 

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறிய அவதூறு குற்றச்சாட்டுக்கள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் அவர்களை சந்தித்து விவரமாக நான் கூறுவேன். இவ்வாறு கூறினார். 


 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“திமுகதான் எதிர்க்கட்சி என்பதுபோல் மோடி பிரச்சாரம் செய்கிறார் - திருமாவளவன் குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Thirumavalavan alleges Modi is campaigning as if the DMK is the opposition

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செவ்வாய்க் கிழமை(16.4.2024) சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பு.முட்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கி 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்களிடம் திருமாவளவன் பேசுகையில், “இந்தத் தேர்தலில், நரேந்திர மோடியின் நாசகரமான ஆட்சியை வீழ்த்த தளபதி மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்தியும் வியூகம் அமைத்து களமாடி வருகின்றனர். பாஜக விற்கு எதிரான வியூகம் அமைத்து, பல்வேறு கட்சிகளை  ஒருங்கிணைத்து  இன்று வலுவான தேர்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார். காங்கிரஸுக்கு பதிலாக திமுகதான் தனது எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயே டேரா போட்டு தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். கேஸ் விலை உயர்வு மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல்  சாதிய மோதல்கள் அதிகரிக்கவும் மோடி தான் காரணம். மோடி  மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  ரேசன் கடை இருக்காது. 100-நாள் வேலைத்திட்டம் இருக்காது” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன்,  திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் கதிரவன், திமுக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் விஜய் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர். 

Next Story

தேர்தல் அறிக்கை; திமுக - காங்கிரஸ், இரட்டைக்குழல் துப்பாக்கிகள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK-Congress twin at Election report

தேர்தல் என்று வந்து விட்டாலே ஆளாளுக்கு கருத்து சொல்லும் கருத்து கந்தசாமிகள் முளைத்து விடுவார்கள். வாட்ஸ் அப் வாத்தியார்களுக்கும் ஒரே கொண்டாட்டம் தான்.  தங்களது சார்பாக பேச பேச்சாளர்களை தயார் செய்து கட்சிகள் களம் இறக்குவதும் வாடிக்கை. தலைவர்களின் பிரச்சாரங்கள், அறிக்கைகள், துண்டு பிரசுரங்கள், மேடை பேச்சுகள் என எங்கு பார்த்தாலும் ஒரே பரபரப்புதான். அதனால்தான் தேர்தலை திருவிழாக்கள் என்று கூட சொல்வதுண்டு. கட்சிகளின் வாக்குறுதிகளை பறைசாற்றும் தேர்தல் அறிக்கைகளும் தற்போது மக்களின் பல்ஸ் ரேட்டை அதிகரிக்க தொடங்கியுள்ளன.

ஆரம்பத்தில் ஒரு சம்பிரதாயமாகத்தான் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. ஆனால், 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க அறிவித்த தேர்தல் அறிக்கை அந்த சம்பிரதாயத்தைப் புரட்டி போட்டது. தி.மு.க தலைவர் கலைஞர் அறிவித்த அந்த தேர்தல் அறிக்கை மிகப்பெரிய பேசு பொருளானது. குறிப்பாக அனைத்து குடும்பங்களுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கப்படும் என்ற அறிவிப்பு பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது. தி.மு.க.வின் இந்த தேர்தல் அறிக்கையை ஒரு கதாநாயகன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வர்ணித்தார். தி.மு.கவின் தேர்தல் அறிக்கையின் பக்கம் மக்களின் கவனத்தை திருப்ப இது ஒரு காரணமாக அமைந்தது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வரலாற்றை மாற்றி எழுதியதோடு மட்டுமல்லாமல், அந்த தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியையும் தேடி தந்தது. மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல் அனைத்து வீடுகளுக்கும் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன.  நாளடைவில் அது அமோக வரவேற்பு பெற்று, அதனை கலைஞர் டி.வி. என்றே மக்கள் அழைத்தனர். இந்த தேர்தலுக்கு பிறகு நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் அறிக்கைகள் முக்கிய பங்கு வகித்தன. மக்களை கவரும் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் வெளியிட அனைத்து கட்சிகளும் முக்கியத்துவம் கொடுத்தன. தேர்தல் அறிக்கைகள் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை உணர்ந்து கொண்டு அரசியல் கட்சிகளும் அதில் இடம் பெறும் உறுதி மொழிகளை மிகவும் கவனத்துடன் கையாள ஆரம்பித்தன.

DMK-Congress twin at Election report

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் இது தொடர்கிறது. 2006 ஆம் ஆண்டு புரட்சியை ஏற்படுத்தியதை போல் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. தி.மு.க.வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை ஒரு கதாநாயகியாக இருக்கும் என்று கனிமொழியும் கருத்து தெரிவித்து இருந்தார். அதன்படியே, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் பல்வேறு வியத்தகு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 64 பக்கங்கள் கொண்ட இந்த தேர்தல் அறிக்கை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள சமூக இயக்கங்கள், மக்கள் அமைப்புகளை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கை என்று புகழாரம் சூட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த தேர்தல் அறிக்கையில் பல அசாத்தியமான கலர்புல் வாக்குறுதிகளும், ஒன்றிய அரசால் மட்டுமே நிறைவேற்றக்கூடிய திட்டங்களும் இடம் பெற்று இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும், ரெயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் மீண்டும் உருவாக்கப்படும், அக்னி பாத் திட்டம் ரத்து செய்யப்படும், பெட்ரோல் ரூபாய் 75 க்கும், டீசல் ரூபாய் 65 க்கும், சமையல் எரிவாயு ரூ. 500 க்கும் வழங்கப்படும் என தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது போதாது என்று தேசிய மீன்வளக் கொள்கை மறுபரிசீலனை செய்யப்படும், அனைத்து ஒன்றிய அரசுத் தேர்வுகளிலும் தமிழை விருப்ப மொழியாக ஏற்க வகை செய்யப்படும், கபடிப் போட்டியை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டம் சமூக நீதியின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும், ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 361 நீக்கப்படும் என்று நீண்டு கொண்டே போகின்றன தி.மு.க.வின் வாக்குறுதிகள்.  

மேலும், ஜி.எஸ்.டி வரி வசூல் முழுமையாக மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு மாநிலங்களுக்கான பங்களிப்பு போக மீதமுள்ள தொகை ஒன்றிய அரசுக்கு வழங்கப்படும், உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் கூறுகின்றன. இந்த வாக்குறுதிகள் 2021 சட்டமன்ற தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் மறு பிரதியே என்றும், இதன் மூலம் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க நிறைவேற்றவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இன்னும் ஒரு படி மேலே போய், ஏதோ ஸ்டாலின் பிரதமர் ஆகி விட்டது போல் எண்ணிக் கொண்டு தி.மு.க இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்து இருக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

DMK-Congress twin at Election report

இருப்பினும், இதற்கெல்லாம் சளைக்காத முதலமைச்சர் ஸ்டாலின், “மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சி தான் வரப்போகிறது. அதனால் தான் நம்பிக்கையுடன் இந்த வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம்” என்று விளக்கம் அளித்துள்ளார். இதற்கு அத்தாட்சி வழங்குவது போல் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நாட்டு மக்களின் புருவங்களை உயர்த்தி வருகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும் என்று, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

பா.சிதம்பரம் தலைமையிலான குழு மக்களவைத் தேர்தலுக்காக 5 தலைப்புகளில், 25 வாக்குறுதிகள் அளிக்கும் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை போலவே, காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், ஏழை மகளிருக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டால் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிற துவங்கியுள்ளது. இது மட்டுமின்றி, மத்திய அரசு பணிகளில் 30 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும், புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும், நீட் மற்றும் க்யூட் தேர்வுகளை மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப நடத்திக் கொள்ளலாம், விவசாய இடு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், பாஜக இயற்றிய ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்படும், புதிய ஜிஎஸ்டி 2.0 இயற்றப்படும், அக்னி பாத் திட்டம் ரத்து செய்யப்படும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நடைமுறைப்படுத்தப்படாது, நீட் தேர்வு தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும் போன்ற அதிரடி அறிவிப்புகள் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

DMK-Congress twin at Election report

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் மாநில சுயாட்சி கொள்கைக்கு அச்சாரம் போடப்பட்டிருக்கிறது. அதாவது, கல்வி, பண்பாடு, நிதிப் பங்கீடு என பல அம்சங்களில் மாநில சுயாட்சி எனும் தி.மு.க.வின் கொள்கையை காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்குள் ஓர் அற்புதம் நிகழ்ந்திருப்பதாக நெட்டிசன்கள் அங்கலாய்க்கின்றனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்புகளால் காங்கிரஸ் தனது பழமைவாதக் கோட்பாடுகளை முழுமையாக தளர்த்தெறிந்திருக்கிறது.

வடக்குக்கும், தெற்குக்கும் ஒரே கொள்கைளை கடைபிடிக்க முடியாத மிகச் சிக்கலான சில விஷயங்களில் சிறப்பானதொரு தீர்வு, இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதிகாரங்களை மொத்தமாக ஒற்றைப் புள்ளியில் குவித்து வைக்கும் தனது பழைய வழக்கத்தை கைவிட்டு மக்கள் மன்றங்களான, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வகையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள், இது பழைய காங்கிரஸ் அல்ல என்பதை உறுதி செய்கின்றன. நாடு முழுவதும் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரையில் மக்களின் மனங்களை புரிந்து கொண்டதன் அடையாளமாக இந்த அறிவிப்புகள் அமைந்துள்ளன.

DMK-Congress twin at Election manifesto

உண்மையான மதச்சார்பின்மை, மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தோல்வியை விட சிறந்த பாடம் இல்லை; காலத்தை விட சிறந்த ஆசிரியர் இல்லை என்ற கூற்றுக்கு ஏற்ப இந்த மாற்றங்களை காங்கிரஸ் கட்சி தொடர்ந்தால், அக்கட்சி மேலும் பல நுற்றாண்டுகள் உயிர்ப்புடன் திகழும் என்றும் இணையதள வாசிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி எனும் பேரறிஞர் அண்ணாவின் முழக்கத்திற்கு கட்டியம் கூறும் வகையில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை ஒரு கதாநாயகனாக தெரிவதால், திமுக - காங்கிரசின் தேர்தல் அறிக்கைகள் ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதே நிதர்சனம் !