ADVERTISEMENT

"எதிர்க்கட்சிகளுக்கு இருக்க வேண்டிய 3 பண்புகள்" - கபில் சிபல்

12:10 PM Jun 19, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

எதிர்க்கட்சிகளுக்கு இருக்க வேண்டிய 3 பண்புகள் குறித்து கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில் ஆளும் பாஜக தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் இறங்கி உள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் பாஜகவை வீழ்த்த ஓரணியில் திரள முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே பீகார் முதல்வர் நிதிஸ் குமார் தலைமையில் வரும் 23 ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு இருக்க வேண்டிய பண்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்,"பா.ஜ.க.வை தோற்கடிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலானது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானதாக இருக்கக் கூடாது, மாறாக அவர் நிலைநாட்ட விரும்பும் சித்தாந்தத்துக்கு எதிரானதாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு பொதுவான நோக்கம், அதைப் பிரதிபலிக்கும் வகையிலான செயல்பாடுகள், தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆகிய 3 பண்புகள் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT