Skip to main content

தமிழகத்தில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்ப மனு!

Published on 05/03/2021 | Edited on 05/03/2021

 

kanyakumari lok sabha constituency priyanka gandhi


தமிழக சட்டமன்றத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலும் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதால் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதேபோல், பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

 

இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மறைந்த முன்னாள் எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் இன்று (05/03/2021) விருப்ப மனுவைத் தாக்கல் செய்தார். இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட கார்த்தி சிதம்பரம் விருப்ப மனு அளித்துள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக இருந்த எச்.வசந்தகுமார் மறைந்த நிலையில், அவரது மகன் விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் போட்டியிட்டால், அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரியங்கா காந்தி போட்டியிட கார்த்தி சிதம்பரம் விருப்ப மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இதனிடையே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி விரைவில் தமிழகத்திற்குப் பரப்புரைக்கு வர உள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்