Skip to main content

நல்ல நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லையே.. புலம்பும் பா.ஜ.க வேட்பாளர்..!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

Kanyakumari BJP candidate file nomination

 

நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜனை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி நிற்கிறார். இவர் நேற்று (18.03.2021) நாகர்கோவில் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். நேற்று நல்ல நேரம் 11.45 மணியிலிருந்து 12.15 மணிவரை எனவும், அதற்குள் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் முன்கூட்டியே கட்சி நிர்வாகி ஒருவரை அங்கு நிறுத்தியிருந்தார் எம்.ஆர்.காந்தி.

 

இந்த நிலையில், திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் 11.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இதனால் சுரேஷ்ராஜனுக்கு அடுத்து எம்.ஆர். காந்தி வேட்புமனு தாக்கல் செய்வார் என கூறப்பட்டது. இதற்கிடையில் சுயேச்சை வேட்பாளர்கள் 4 பேர் அங்கு வந்ததால், இன்னும் அதிகம் பேர் வருவார்கள் என கருதி அதிகாரிகள் டோக்கன் சிஸ்டத்தைக் கொண்டு வந்தனர். அப்போது எம்.ஆர். காந்தி அங்கு வரவில்லை. டோக்கன் கொடுத்து முடித்த பிறகு எம்.ஆர்.காந்தி அங்கு வந்ததால், அவருக்கு டோக்கன் எண் 6 கொடுக்கப்பட்டது. இதனால் வேட்புமனு தாக்கல் செய்ய அவர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

 

பாஜகவினர் அதிகாரிகளிடம் விஷயத்தை எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அப்போது உடனிருந்த அதிமுக மா.செ. அசோகன், “இது என்ன, இதுவரை இல்லாத முறை? ரெண்டு மூணு ஓட்டுகள் வாங்குறவங்களுக்கு ஆளும் கட்சி நாங்க காத்திருக்கணுமா?” என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். எம்.ஆர். காந்தியோ பக்கத்தில் இருந்தவர்களிடம் நேரத்தைக் கேட்டுக் கேட்டு, நல்ல நேரம் போகுதே என டென்ஷனில் இருந்தார்.

 

உடனிருந்த பொன். ராதாகிருஷ்ணனும், “சரியான நேரத்தில்தான் வந்தோம். ஆனா நல்ல நேரம் நம்மை ஏமாற்றிவிடுமோ” என பேசிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் 12.15 மணி கடந்து எமகண்டத்தில், உற்சாகம் இல்லாத நிலையில் எம்.ஆர்.காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவருக்கு வாழ்த்து சொன்ன கட்சியினரிடமும் நண்பர்களிடமும் நல்ல நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாததைச் சொல்லி புலம்பினார்.

 

 

சார்ந்த செய்திகள்