தமிழகத்தின் தூத்துக்குடி விமான நிலையம் உட்பட இந்தியாவில் 5 விமான நிலையங்களைத் தரம் உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. இதன் மூலம், எதிர்காலத்தில் பல தரப்பட்ட விமான சேவைகளும், பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என வர்த்தகத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Advertisment

இந்திய அளவில் தூத்துக்குடி விமான நிலையம் நான்காம் நிலையில் இருந்து வந்தது. இதனால், விமானசேவைகளில் பல தடங்கல்கள் இருந்தன. இந்தச் சூழலில், தூத்துக்குடி விமான நிலையத்தைத் தரம் உயர்த்த வேண்டும் எனப் பிரதமர் மோடியிடமும், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்திடமும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் திமுக எம்.பி.கனிமொழி.

கடந்த ஜனவரி மாதம் இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டது விமானப் போக்குவரத்து அமைச்சகம். அந்த ஆய்வுகளில் இந்தியாவின் 5 விமான நிலையங்களைத் தரம் உயர்த்த ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அது குறித்த முடிவுகளை எடுப்பதற்குள் கரோனா விவகாரம் தலைதூக்கியதால் விமான நிலையங்களைத் தரம் உயர்த்தும் விவகாரம் கிடப்பில் விழுந்தது.

http://onelink.to/nknapp

Advertisment

இந்தச் சூழலில், மத்திய அமைச்சரவையின் கடந்த கூட்டத்தின்போது இது குறித்தும் விவாதித்துள்ளார் பிரதமர் மோடி. இதனைத் தொடர்ந்து விமான நிலையங்களைத் தரம் உயர்த்த ஒப்புதல் தந்திருக்கிறார் பிரதமர். ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், தமிழகத்திலுள்ள தூத்துக்குடி, உத்தரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூர் மற்றும் ப்ரயாக்ராஜ், கர்நாடகாவிலுள்ள ஹூப்ளி, மத்திய பிரதேசத்திலுள்ள ஜபல்பூர் ஆகிய 5 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.

Kanimozhi

’’விமான நிலையங்கள் தரம் உயர்த்துவதன் மூலம் அந்த நிலையங்கள் அமைந்துள்ள மாவட்டங்களிலும், அதனருகில் இருக்கும் மாவட்டங்களிலும் வர்த்தக வளர்ச்சி விரிவடையும். விமான சேவைகள் அதிகரிக்கும். இதுவரை இரவு நேரங்களில் தூத்துக்குடிக்கு விமான சேவை இல்லை. இனி, அந்த சேவைகள் கிடைக்கும். வட இந்தியாவின் முக்கிய மாநிலங்களுக்கு நேரடியாக தூத்துக்குடியிலிருந்து செல்வதற்கான விமான சேவைகள் அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் சர்வதேச விமானங்கள் இங்கு வந்து போவதற்கான வாய்ப்புகளும் உருவாகும். விமான போக்குவரத்து எளிமையாகவும் அதிக அளவிலும் இருக்கும் பட்சத்தில் தென் மாவட்டங்களில் புதிய புதிய தொழில் நிறுவனங்கள் அமைவதற்கு உதவும். இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் பெருகும்’’ என்கிறார்கள் வர்த்தகத்துறையினர்.

Advertisment

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் புதிய ராக்கெட் ஏவுதளம் திட்டத்தைத் தனது மாநிலத்துக்கு கொண்டு செல்ல காய்களை நகர்த்தியிருந்தது கேரளா. அதனை முறியடிக்கும் வகையில், புதிய ராக்கெட் ஏவுதளம் திட்டத்தைத் தூத்துக்குடியிலுள்ள குலசேகரப்பட்டணத்தில் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசிடம் திமுக எம்.பி.கனிமொழியும், தெலுங்கான மாநிலத்தின் தற்போதைய கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனும் தீவிர முயற்சி எடுத்தனர். அவரகளின் முயற்சி காரணமாக குலசேகரப்பட்டணத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைவதற்கு மத்திய மோடி அரசு அனுமதியளித்தது. அந்தத் திட்டத்தின் பணிகள் நடந்து வருகின்றன.

புதிய ராக்கெட் ஏவுதளம் அமைவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியினூடாகவே தூத்துக்குடி விமான நிலையத்தைத் தரம் உயர்த்த வேண்டும் என்கிற முயற்சியையும் எடுத்திருந்தார் கனிமொழி. தற்போது இதனையும் நிறைவேற்றித் தந்துள்ளது மோடி அரசு.