ADVERTISEMENT

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

12:50 PM Apr 17, 2024 | mathi23

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது.

ADVERTISEMENT

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர். பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார். மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT