Kanimozhi MP says alliance is being announced without EPS even having the right to speak 

தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று (11.04.2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு மக்களுக்கு இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக அதிமுக- பாஜக கூட்டணி அமைந்து இருக்கிறது. தேர்தலில் இந்த கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்றுத் தருவார்கள். பழனிசாமிக்கு பேசக் கூடிய உரிமை கூட இல்லாமல் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அரசு கொண்டுவந்த மக்களுக்கு எதிரான பல்வேறு மசோதாக்களையும், திட்டங்களையும் எதிர்ப்பதாக சொன்ன எடப்பாடி பழனி்சாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் ஒரே மேடையில் மெளனமாக அமர்ந்து, பாஜக - அதிமுக கூட்டணியை ஆமோதித்து ஏற்றுக் கொண்டதை இன்று பார்க்க முடிந்தது. அதிமுகவுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக இந்த கூட்டணி அமைந்து இருக்கிறது. பாஜகவும், அதிமுகவும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள் என பலமுறை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி வந்தார். இந்த கூட்டணி மீண்டும் உருவாகும் என்பதை பல முறை சுட்டிக் காட்டி இருந்தார். அது இன்று உண்மை ஆகியிருக்கிறது. இது இன்று பட்டவர்த்தனமாக தெளிவாக தெரிய வந்திருக்கிறது. மக்களை வெகுநாள் ஏமாற்ற முடியாமல், கூட்டணியை இன்று வெளிப்படையாக அறிவிக்கக்கூடிய நிர்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்” என்றார்.

Advertisment

அதன்பின்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து பேசினார். அந்த வகையில், “தமிழ்மொழிக்கு திமுக செய்ததை பட்டியலிட முடியுமா என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்கிறாரே?” என்ற கேள்விக்கு, “காசி தமிழ்சங்கம் நடத்துகிறோம் என தமிழுக்கு தாங்கள் செய்துள்ள மிகப் பெரிய தொண்டு என சொல்கிறார்கள். தமிழ் மொழி மூலம் காசிக்கு செய்துள்ள நன்மையாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும். இதனால் தமிழ் எப்படி வளரும் எனத் தெரியவில்லை. சமஸ்கிருதத்துக்கு 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி செலவு செய்கிறது. ஆனால் தமிழுக்கு 100 கோடி ரூபாய் கூட ஒதுக்குவதில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். இப்படி பாரபட்சமாக நடந்து கொள்ள கூடிய ஆட்சிதான் ஒன்றிய ஆட்சி.

தமிழ்நாட்டில் செயல்படும் கேந்திரிய வித்யாலா பள்ளிகளில், தமிழ் பயிற்றுவிக்க ஆசிரியர்களை அமைக்காத ஒன்றிய அரசு, தமிழுக்கு பெரிதாக என்னத் தொண்டு செய்து இருக்கிறது.பிரதமர் மோடி சில மேடைகளில் திருக்குறளை சொல்லுவதும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறளை மேற்கோள் காட்டுவதும் தமிழ் வளர்ச்சிக்கான முயற்சியாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்தியை திணிப்பதைத்தான் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். மும்மொழி கொள்கை ஆக இருக்கட்டும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வஃக்பு திருத்தச் மசோதாவாக இருக்கட்டும், நீட் தேர்வாக இருக்கட்டும்; தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி நிறுத்தப்பட்ட நிலையாக இருக்கட்டும். இது அனைத்தையும் எதிர்த்து குரல் கொடுப்பதாக சொன்ன எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடு என்ன?.

Kanimozhi MP says alliance is being announced without EPS even having the right to speak 

Advertisment

சமீபத்தில் சிறுபான்மை மக்களுடன் தான் நிற்பதாக ஆணித் தரமாக பேசினார். இன்று வஃக்பு மசோதாவை நிறைவேற்றியவருடனே ஒரே மேடையில் அமர்ந்து இருக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா, ஜெயலலிதாவை எல்லாம் தரக்குறைவாக விமர்சித்த தலைவருடன் ஓரே மேடையில் அமர்ந்து கொண்டு, கூட்டணியை யாரோ ஒருவர் அறிவிக்க அதைக் கேட்டுக் கொண்டு அமர வேண்டிய நிலையில் எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டு இருக்கிறார். வழக்கமாக யாரோடு தமைமையில் கூட்டணி அமைகிறதோ அவர் தான் கூட்டணியை அறிவிப்பார். ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு பேசக் கூடிய உரிமை கூட இல்லாமல் கூட்டணி அறிவிக்கப்படுகிறது.

தங்களது தலைவர்களை விமர்சித்தவர்களையே இன்று வீட்டிற்கு விருந்துக்கு அழைக்க வேண்டிய நிலைக்கும் அவர் தள்ளப்பட்டு இருக்கிறார். இப்படி தனது கட்சிக்கும், தமிழ்நாடு மக்களுக்கு செய்து இருக்கக் கூடிய மிகப் பெரிய துரோகம் இது. வரும் தேர்தலில் இந்த கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்றுத் தருவார்கள். தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் பாஜகவுக்கும், ஒன்றிய அரசுக்கும் இன்று அதிமுக ரத்தின கம்பளத்தை விரித்து இருக்கிறது. இது தான் தமிழ்நாட்டுக்கு அதிமுக செய்து இருக்கக் கூடிய மிகப்பெரிய துரோகம்” எனத் தெரிவித்தார்.மேலும்,நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவுடன் கலந்து பேசி முடிவு எடுப்பதாக அமித்ஷா கூறுகிறாரே? என்ற கேள்விக்கு, “முன்பு அதிமுக ஆட்சியில் இருக்கும் போது கலந்து பேசி இருக்கலாமே, இன்றாவது அறிவிக்க சொல்லுங்கள்” எனத் தெரிவித்தார்.

Kanimozhi MP says alliance is being announced without EPS even having the right to speak 

அதனைத் தொடர்ந்து, ஊழலை மறைக்கவே மும்மொழி கொள்கை விவகாரத்தை திமுக கையில் எடுத்து இருப்பதாக குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, “ஒன்றிய பாஜக அரசு தான் மும்மொழி கொள்கையை கொண்டு வந்துள்ளனர். அதனை தான் எதிர்க்கிறோம். என்றுமே இந்தி திணிப்பை எதிர்க்கும் நிலையில், இரு மொழி கொள்கையை மட்டுமே ஏற்போம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி இருக்கிறார். நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சி தலைவர்களை வருமான வரித்துறை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றை கொண்டு ஒடுக்குவதற்காக பயன்படுத்துகிறது ஒன்றிய அரசு.

யாரெல்லாம் எதிர்த்து பேசினாலும் இந்த நடவடிக்கை தொடர்கிறது. 95 சதவீதம் எதிர்கட்சி தலைவர்கள் மீதே அமலாக்கத்துறை தொடர்பான வழக்கு போடப்படுகிறது. ஆனால் குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது 2 சதவீதம் கூட கிடையாது. பா.ஜ.க. பொய்யான வழக்குகளை தொடுப்பது இதன் மூலம் உறுதியாகிறது. அதே பாணியில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நம்மையும் மிரட்டி விடலாம் என தப்புக் கணக்கு போடுகிறார்கள். தங்களது ஆட்சியில் செய்யும் தவறுகளை திசை திருப்பவே இது போன்ற வழக்குகளை அவர்கள் தொடுக்கிறார்கள்” எனப் பேசினார்.