Advertisment

தமிழகத்தில், பா.ஜ.க.வின் பினாமி ஆட்சியில், எந்த திட்டங்களும் நிறைவேறவில்லை என கனிமொழி குற்றச்சாட்டு

தி.மு.க.வின் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’பிரச்சார பயணத்தின் மூலம் தமிழகம் முழுவதும் கனிமொழி எம்.பி. சுற்றுபயணம் மேற்கொண்டு, மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு வருகிறார். இதில் 3 நாள் பயணமாக கடந்த 18-ம் தேதி குமரி மாவட்டம் வந்த கனிமொழி, நேற்று (19 ஜன.) காலை கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை பாதத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அந்த நேரத்தில் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளிடமும் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுடன் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

Advertisment

தொடர்ந்து காமராஜர் மணிமண்டபத்துக்கு வந்த கனிமொழி, அங்கிருந்த காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு தோவாளை பூ சந்தையில், பூகட்டும் ஆண் மற்றும் பெண்கள் மற்றும் வியாபாரிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

Advertisment

பின்னர் அங்கிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் விசுவாசபுரத்தில் டீ கடையில் இருந்தவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர், அந்த டீ கடையில், டீ மற்றும் பப்ஸ் வாங்கி சாப்பிட்டார். பின்னர் நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, வடசேரி காய்கறி சந்தைக்கு வந்த கனிமொழி, பொதுமக்கள் வியாபாரிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து வடசேரி பஸ் நிலையம், மீன் சந்தைக்கு வந்து பஸ் பயணிகள் மற்றும் பொது மக்களிடம் பேசி குறைகளைக் கேட்டறிந்தார்.

அதன் பிறகு மணவாளக்குறிச்சியில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் பிரச்சனைகளைக் கேட்டறிந்து, அதை நிவர்த்தி செய்வதைக் குறித்து பேசினார். பின்னர் குளச்சல் சென்ற கனிமொழி, மீனவர்களைச் சந்தித்து பேரிடா் காலங்களிலும் அதே போல் மீன்பிடி தொழிலுக்கு அண்டை மாநிலங்கள் மற்றும் நாடுகளில் குமரி மீனவர்கள் படும் துன்பங்கள் மற்றும் இன்னல்களைக் கேட்டறிந்தார்.

இதற்கிடையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கனிமொழி, “மக்களின் வரி பணத்தை செலவு செய்து தமிழக அரசு ‘வெற்றி நடை போடுகிறது’ என்ற பொய்ப் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். தமிழகத்தில் இளைஞர்கள் முதல் முதியோர்களுக்குவரையிலான எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் எல்லா துறைகளும் நலிவடைந்துதான் காணப்படுகிறது. எதை செய்ய வேண்டுமனாலும் டெல்லியை கேட்டுதான் செய்கிறார்கள். இங்கு நடப்பது பா.ஜ.க.வின் பினாமி ஆட்சிதான். இதனால்தான் எந்த திட்டங்களும் நிறைவேறவில்லை. விரைவில் வரவிருக்கிற தி.மு.க. ஆட்சியில், எல்லா மக்கள் திட்டங்களையும் ஸ்டாலின் நிறைவேற்றுவார்” என்றார்.

kanimozhi Kanyakumari
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe