Advertisment

மத்திய அமைச்சர் மீது கனிமொழி எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ்!

Kanimozhi MP issues notice against Union Minister

Advertisment

நாடாளுமன்ற மக்களவையில் மொழிக் கொள்கை தொடர்பாக இன்று (10.03.2025) பரபரப்பான காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் பேசுகையில், “மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. புதிய கல்விக் கொள்கையைப் பின்பற்றாததால் தமிழகத்தை மத்திய அரசு பழிவாங்குகிறது’ என குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுத் தவறானது. தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களை திமுக தவறாக வழிநடத்துகிறது.

தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ-டர்ன் போட்டது. மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இவர்கள் ஜனநாயகம் அற்றவர்கள், அநாகரீகமானவர்கள் (undemocratic, uncivilized)” என இருமுறை குறிப்பிட்டார். மேலும் அவர், “சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டுக் கையெழுத்திட மறுத்தனர். யார் அந்த சூப்பர் முதல்வர் என்பதைக் கனிமொழிதான் கூறவேண்டும். பாஜக ஆளாத மாநிலங்களிலும் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது” என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள், ‘தமிழ்நாட்டிற்குக் கல்வி நிதி வேண்டும்’ என முழக்கமிட்டனர். இதனால் சிறிது நேரம் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதிலளித்து கனிமொழி பேசுகையில், “உங்கள் பேச்சு எனக்கு வலியையும் காயத்தையும் தந்துள்ளது. தமிழர்கள் அநாகரிகமானவர்கள், நாகரீகமற்றவர்கள் என்ற வார்த்தையைத் திரும்பப் பெற வேண்டும். மும்மொழி கொள்கையை ஏற்பதாக திமுக எம்பிக்கள் ஒருபோதும் கூறியது இல்லை. தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசும், எம்.பி.க்களும் ஒருபோது ஏற்றதில்லை. தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே தெளிவாகக் கூறிவிட்டார்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தனது பேச்சு காயப்படுத்தி இருந்தால் அநாகரிகமானவர்கள் என்ற வார்த்தையைத் திரும்பப் பெறுகிறேன்” எனத் தெரிவித்தார்.

Advertisment

இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி எம்.பி. நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டிஸ் அளித்துள்ளார். அதில், ‘தர்மேந்திர பிரதான் பேசியது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது. அநாகரிகம், தவறாக வழிநடத்துதல் போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். எனது பெயரைக் குறிப்பிட்டுப் பேசிவிட்டு, இது தொடர்பாக என்னை விளக்கம் அளிக்க அனுமதிக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

kanimozhi Notice
இதையும் படியுங்கள்
Subscribe