Skip to main content

சாத்தான்குளம் தந்தை, மகன் சம்பவம் எதிரொலி... கனிமொழிக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ்... அதிருப்தியில் திமுகவினர்!

Published on 25/06/2020 | Edited on 25/06/2020

 

dmk

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளைத் திறந்ததாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கோவில்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.  இந்தச் சம்பவத்தில் இரண்டு எஸ்.ஐ.-கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பணியிடை நீக்கம் போதாது, சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்குக் கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.  

இந்த நிலையில் தந்தை, மகன் இறப்பு சம்பவம் குறித்து தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருந்தார். அதில், சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக  தமிழக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்?உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக தமிழக அரசு சார்பில் நிதியுதவியும், அரசு வேலையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும், கோவில்பட்டி சிறையில் தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவு காரணமாகவும், மகன் பென்னிக்ஸ் மூச்சுத் திணறல் காரணமாகவும் உயிரிழந்ததாக முதல்வர் கூறுகிறார். இன்னும் உடற்கூராய்வு முடிய வில்லை. அதற்குள் பழனிசாமி அவர்களுக்கு இறப்பின் காரணம் எப்படி தெரிந்தது? அதோடு, வன்முறைதான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெளிவாகத் தெரிந்தும், உண்மைக்கு புறம்பாக பேசும் முதல்வர் கொலைக்கு காரணமான காவல்துறையினர் மீது எப்படி உரிய நடவடிக்கை எடுப்பார்? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து திமுக எம்.பி கனிமொழி வீட்டிற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த காவலர்கள் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக காவலர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் சாத்தான்குளம் காவலர்கள் மீது கனிமொழி நடவடிக்கை எடுக்க மனு அளித்ததன் விளைவாகவே போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தால் திமுகவினர் மற்றும் எதிர்க்கட்சிகள் அதிருப்தியில் உள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்