Skip to main content

‘நல்ல  மாட்டுக்கு  ஒரு  சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்  நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில்  கல்லூரி மாணவ மாணவிகளின் அமைப்பான ரோட்டராக்ட் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  பேசியபோது,  ’’நான் சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ளமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும் நல்ல சட்டை போட்டுக் கொண்டுதான் வெளியில் வருவேன்’’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து பேசினார். மேலும்,  தன்னைப்பார்த்து காப்பி அடித்துதான் கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் நடத்துகிறார் என்றும் விமர்சனம் செய்தார் கமல்ஹாசன்.

 

k

 

கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்தும்,  அவருக்கு எச்சரிக்கை விடுத்தும், இன்று வெளியாகியிருக்கும் முரசொலி பத்திரிகையில், கமலின் அரசியல் அரைவேக்காட்டுத்தனம் என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் கட்டுரை இது:     ’’கடை விரித்தேன் கொள்வாரில்லை’’ என்ற நிலையில் உள்ளவன் எந்த மனநிலைக்கு ஆளாவானோ அந்த மனநிலையில் கலைஞானி கமல்ஹாசன் நிதானமற்று பிதற்றத்தொடங்கிவிட்டார்.  அவர் எந்த அளவு நொந்து நூலாகியிருக்கிறார் என்பதை எம்.ஆர்.சி. நகரில் மாணவர்களிடையே  நடத்திய  கலந்துரையாடலில்,  அவர்  கொதிக்கும் எண்ணெய்ச்  சட்டியில்  போட்ட கடுகாக  வெடித்ததிலிருந்தே  அறிய  முடியும்!

நான்  சட்டையைக்  கிழித்துக்  கொள்ளமாட்டேன்  என, சம்பந்தமில்லாது,  அவலை இடிப்பதாக  நினைத்து  உரலை இடித்துள்ளார்  கமல்! அவர்  பேசுவது  என்ன;  ஏன் இப்படிப்  பேசுகிறார்  எனப் புரியாது; கேட்போரை எல்லாம் சட்டையைக் கிழித்துக் கொள்ள வைப்பாரே  தவிர,  அவர்  சட்டையை  ஒருநாளும்  கிழித்துக்கொள்ள மாட்டார் என்பதை நாடு நன்கறியும்!


கிராம சபை என்பதை தான்தான் முதன்முதலாக நடத்தியதாகவும்,  அதனை  ஸ்டாலின் காப்பி  அடித்துள்ளார்  என்றும் கூறி, காப்பி அடிக்க வெட்கமில்லையா எனத் தனது அரசியல் கத்துக்குட்டித்தனத்தை  வெளிச்சம்  போட்டுக்  காட்டியுள்ளார் கமல்!   அதாவது அவருக்கு சொந்தப் புத்தியும் கிடையாது, சொல்புத்தியும் இல்லை; அரசியல் வரலாறுகளைப்  படித்தறியும் பக்குவமும்  கிடையாது  என்பதற்கு  இதனைவிடச்  சிறந்த எடுத்துக்காட்டு  தேவையில்லை! அவர்  நடத்திய  கிராமசபைக்  கூட்டம்  கூட  அவர் மண்டையில்  உதித்ததல்ல;  சட்டப்  பஞ்சாயத்து  நடத்துபவர்கள்  கூறிய ஆலோசனை எனக்  கூறி,  தனக்கு  சொந்தப்  புத்தி  இல்லை என்பதைப்  பறைசாற்றி  அறிவித்துள்ளார். இந்த  கிராமசபைக்  கூட்டத்தை  தலைவர்  கலைஞர்  முதல்வராக  இருந்தபோதே, தனது அமைச்சரவையிலுள்ள  அமைச்சர்களைக்  கொண்டு  நடத்தியுள்ளார். அவரே பங்கேற்று நடத்திய  கூட்டம், அன்று வடஆற்காடு மாவட்டம் -  வாணியம்பாடி தொகுதியிலுள்ள   விண்ணமங்கலம்   கிராமத்தில் தொடங்கி  வைக்கப்பட்டது!

கமலஹாசனுக்கு  இதெல்லாம் தெரிய நியாயமில்லை; அந்தக் காலகட்டத்தில், அவர் ஏதாவது கதாநாயகியுடன்  `டூயட்’  பாடி,  ஆடிக்  கொண்டிருந்திருப்பார்! அதனால்தான், அவருக்கு  வரலாற்று  அறிவும்  மட்டு  என்று கருதுகிறோம்! இந்த வரலாறுகளெல்லாம் தெரியாததால்தான்,நேற்று  வந்த  சின்னப்பயலைக்  காப்பியடிக்க வெட்கமில்லையா? எனக் கேட்டு, தனது சின்னப்பிள்ளைத்தனத்தை, அவரே வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறார்! 

 

k

 

திராவிட  முன்னேற்றக்  கழக  வரலாற்றை முதலில்  கமலஹாசன்  படித்தறிய  வேண்டும்! எங்கள்  இயக்கத்  தலைவர்கள்,  முன்னோடிகள்;அது  தந்தை  பெரியாராக  இருந்தாலும், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் போன்றோரும், ஏன்;எங்களது  இன்றைய தலைவர் ஸ்டாலின் ஆனாலும்.  அவர்கள்  கால்  பதியாத  மண்,  அதுநகரமாக இருந்தாலும், கிராமமாக - குக்கிராமமாக இருந்தாலும் தமிழகத்தில்  இருக்க  முடியாது. இந்தத் தமிழ் மண்ணின் ஒவ்வொரு துளியிலும் அவர்களது பாதச்  சுவடு  பட்டுள்ளது. அதனால்தான் அரசியல் ஜாம்பவான்களால் கூட தி.மு.கழகத்தை அசைத்திட முடியவில்லை! தி.மு.கழகத்தை அழித்து, அது இருந்த இடத்தில் புல்முளைக்கச் செய்துவிடுவோம் எனச் சவால் விட்ட இயக்கங்கள் எல்லாம்  காணாமல்  போனதே  தவிர, கழகம்  இன்றும்  ஆழவேரூன்றி தழைத்தோங்கி நிற்கிறது என்றால், அதன் காரணமே, அது  நகரங்கள்  மட்டுமின்றி,  குக்கிராமம்  வரை,  ஆழ  வேர்பதித்து, அடித்தட்டு  மக்கள் வரை  அது  படர்ந்துள்ளதால்தான் என்பதை கமலஹாசன் உணராமல் பிதற்றக் கூடாது!

அறிவுலக  ஆசான்  அறிஞர்  அண்ணா,  தி.மு.கழகத்தினருக்குக் கற்றுத் தந்த பால பாடமே,``மக்களிடம் செல்! அவர்களோடு  கலந்திடு! அவர்களை அறிந்துகொள்!அவர்களை  நேசித்துப்  பணியாற்று! அவர்களோடு  இணைந்து  திட்டமிடு! அவர்கள் அறிந்ததிலிருந்து  தொடங்கு! அவர்கள் எண்ணங்களுக்கு வடிவமைத்திடு!’’-  என்பதுதான்.  முதலமைச்சர்  கனவில்  கட்சி  ஆரம்பித்து, அதனைக்  கொள்வாரில்லை  என்பது தெரிந்துவிட்ட  நிலையில்,  விரக்தியின்  உச்சக்  கட்டத்தில் நின்று  கமலஹாசன்  புலம்பத் தொடங்கியுள்ளார்!

தலைவர் ஸ்டாலின் மீது பாய்கிறார்; ரஜினி மீது விஷத்தைக் கக்குகிறார்; தன்னைத் தானே ‘சின்னப்பயல்’, ‘நேற்று வந்த  பயல்’  எனக்  கூறிக்கொள்கிறார்.  வெட்கம்  என்பதன் பொருளறியாது, பல வெட்கங்கெட்ட செயல்களை வெளிப்படையாகச் செய்து கொண்டிருப்பவர், நம்மைப் பார்த்து வெட்கமில்லையா எனக் கேட்கிறார்! இதை எல்லாம் பார்க்கும்போது  உச்சகட்ட  காட்சியாக, 'மூன்றாம் பிறை' திரைப்படத்தில் ரயில் நிலையத்தில், தலைமுடியைப்  பிய்த்துக்  கொண்டு,சட்டையைக்  கிழித்துக்  கொண்டு, பிளாட்பாரத்தில்  அங்குமிங்கும்  ஓடுவாரே,  அந்தக்  காட்சிகள்  நிஜத்தில்  நடந்துவிடுமோ என்று அஞ்சுகிறோம்! அரசியல் கட்சி துவங்கி,  எதனை  நோக்கிச் செல்கிறோம், பின்னால் வருபவர்களை  எங்கே  அழைத்துச்  செல்லப்  போகிறோம்  என்று  தெளிவற்றுத்  திரியும் கமல்ஹாசன், மற்றவர்களைப் பார்த்து வெட்கமில்லையா எனக்  கேட்பது கேலிக்கூத்தல்லவா?

மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கமலஹாசன் தனது அரசியல் அரைவேக்காட்டுத்தனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார்! நமது ஊடகத் துறையினர், கமல்ஹாசன் இந்த மாணவர் சந்திப்பில் நமது கழகத் தலைவர் தளபதி குறித்துத்தரக்குறைவாக  பேசியது  பற்றி  புதுவையில்  அவரிடம், "கமல் உங்களைக்   கடுமையாக விமர்சனம் செய்துகொண்டிருக்கிறாரே!’’ எனக் கேள்வி கேட்டபோது, "நான் அரசியல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்’’ என பதிலளித்தாரே, அது ஒன்றே கமலஹாசனுக்கு வைத்த சூடல்லவா! புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்து உளறிய கமலஹாசனின் 'புத்திசாலித்தனத்தை',  ஒரே வரியில் பல்லிளிக்க வைத்து விட்ட பதில் அல்லவா அது! ‘நல்ல  மாட்டுக்கு  ஒரு  சூடு போதும்' என்பார்கள். கமல்ஹாசன் மேலும் ‘சூடு’களை எதிர்நோக்கமாட்டார் எனக் கருதுகிறோம். ’’

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் காட்டிய கறார்; ஓரங்கட்டப்பட்ட சீனியர் - யார் இந்த முரசொலி?

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Thanjavur Parliamentary Constituency Candidate murasoli Details

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த வகையில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் 20 ஆம் தேதி வெளியிட்டார். அந்த வேட்பாளர் பட்டியலில் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன், டி.ஆர். பாலு போன்ற திமுகவின் முக்கிய புள்ளிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுமுக வேட்பாளர்கள் 11 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை மேடையில் வெளியிட்ட மு.க. ஸ்டாலின், தஞ்சையில் முரசொலி என்ற வேட்பாளரை அறிமுகப்படுத்திவிட்டு, 'முரசொலியே அங்கே நிற்கிறது' என அழுத்தமாக கூறினார். அப்போதே அனைவரது கவனத்தையும் புதுமுக வேட்பாளர் முரசொலி பெற்றார். இந்த நிலையில், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிமுகமான முரசொலி, 9 முறை தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு அதில் 6 முறை எம்.பியாக தஞ்சையில் வெற்றிபெற்ற சீனியரான பழநிமாணிக்கத்தை ரேஸில் வீழ்த்தி வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

போட்டியிடும் தொகுதி மக்களுக்கே ஆச்சரியம் கொடுத்துள்ளார் புதுமுக வேட்பாளர் முரசொலி. தலைமை எப்படி அவரை தேர்ந்தெடுத்தது என்பது குறித்து தஞ்சை திமுகவினர் வட்டாரத்தில் பேசுகையில், பல தகவல்கள் கிடைத்தது. முன்னதாக தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு பழநிமாணிக்கம், முரசொலி, ராதிகா மணிமாறன், அஞ்சுகம் பூபதி, கலைவாணி மோகன் உள்ளிட்ட 24 பேர் விருப்ப மனுவை திமுக தலைமையிடம் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், நேர்காணலில் திமுக தலைமை முரசொலி மற்றும் ராதிகா மணிமாறனிடம்  மட்டும் எவ்வளவு பணம் தேர்தலுக்கு செலவு செய்வீர்கள் எனக் கேட்டு விவரம் பெற்றுள்ளனர். ஆனால், சீனியர் சிட்டிங் எம்.பி. பழநிமாணிக்கத்திடம் எதுவும் கேட்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதுவே, சிட்டிங் எம்.பி. பழநிமாணிக்கத்திற்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்காது எனப் பேசுபொருளை உண்டாக்கியுள்ளது.

இப்படியிருக்கையில், முரசொலியோ தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்னே தொகுதிக்கு உட்பட்ட சில எம்.எல்.ஏக்களை சந்தித்து சீட் கிடைத்தால் ஆதரவு வேண்டும் என ஆசி பெற்றுள்ளார். இதனால், முரசொலி தான் தஞ்சை வேட்பாளர் என திமுகவினர் பரவலாகப் பேசியுள்ளனர். இந்த செய்தி அறிந்த சிட்டிங் எம்.பி. பழநிமாணிக்கம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் முகாமிட்டு மீண்டும் தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தியுள்ளார். ஆனால், அவரை அழைத்துப் பேசிய திமுக தலைமை, இந்த முறை உங்களுக்கு சீட் இல்லை. கட்சி அறிவிக்கும் நபரை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று வெளிப்படையாக சொல்லியுள்ளது. அப்போது, இந்த ஒரு முறை மட்டும் என தஞ்சை சிட்டிங் எம்.பி. பேச்சை ஆரம்பிக்க, கட்சியின் தலைமையோ ஸ்ட்ரிக்டாக புதுமுகம் தான் இந்த முறை என சொல்லியதாகக் கூறுகின்றனர். இந்த நிலையில், திமுக தலைமை புதுமுகமான முரசொலியை வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளதாக தஞ்சாவூர் திமுகவைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

தஞ்சை தொகுதிக்குள் பெரிதாக அறிமுகம் இல்லாத முரசொலி, வேட்பாளராக இடம் பிடிப்பதற்கு அவருடைய அமைதியான சுபாவம் தான் முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது. மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ. துரை. சந்திரசேகரனின் நெருங்கிய ஆதரவாளர் முரசொலி. திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடையது பாரம்பரியமான தி.மு.க குடும்பம். முன்பே வடக்கு ஒன்றியச் செயலாளருக்கான உள்கட்சித் தேர்தலில் பழநிமாணிக்கம் தரப்பை எதிர்த்து முரசொலியை ஒன்றியச் செயலாளர் ஆக்கினார் சந்திரசேகரன். அதன் பிறகு கட்சிப்பணிகளை செய்து வந்த முரசொலி, ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, இரண்டு இடங்களில் 50 அடி உயர கொடிக் கம்பத்தில் தி.மு.க கொடி ஏற்றும் நிகழ்வை விமரிசையாக நடத்தினார்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் முரசொலியை வெகுவாகப் பாராட்டினார். அமைச்சர் அன்பில் மகேஸ், மேயர் சண். ராமநாதன் ஆகியோரின் சிபாரிசும் அவருக்கு கிடைக்க வேட்பாளர் ரேஸில் வெற்றி பெற முக்கிய காரணமாக திமுகவினர் கூறுகின்றனர். அதிலும் மேயர் ராமநாதன், முரசொலிக்காக தனிப்பட்ட முறையில் உதயநிதியிடம் பேசியதாகச் சொல்லப்படுகிறது. டி.ஆர். பாலு ஆதரவும் இருந்தது இவருக்கான ப்ளஸ் பாயிண்ட். தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த முரசொலி எளிமையாவர், அமைதியான சுபாவம் கொண்டவர் எல்லோரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர் என்கின்றனர் திமுகவைச் சேர்ந்தவர்கள். அந்த பண்பே முரசொலி சத்தமில்லாமல் சாத்தித்துள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். துரை. சந்திரசேகரன் ஆதரவாளரான முரசொலிக்கு சீட் கிடைத்திருப்பதன் மூலம் சந்திரசேகரனின் கை தஞ்சையில் ஓங்கியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

புதுமுகமாக இருந்தாலும் தஞ்சை தொகுதியில் தி.மு.க-விற்கு பெரும்பான்மையான ஆதரவு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சாதாரண பொறுப்பில் இருப்பவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை நிரூபிக்கும் விதமாக புதியவரான முரசொலிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை பழநிமாணிக்கத்திற்கு வயது அதிகம் ஆகிவிட்டது என்றும், 6 முறை ஒரே தொகுதியில் எம்.பியாக வென்ற ஒருவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கினால், அந்த மாவட்டத்தில் பணியாற்றும் புதியவர்கள் சோர்ந்து போய்விடுவார்கள் என்பதும் தான் அக்கட்சியினர் கூறும் காரணமாக இருக்கிறது. ஆனால், சீட் கிடைக்காதவர்கள், அதிருப்தியில் உள்ளடி வேலை செய்யக்கூடும், தொகுதிக்கு புதிய முகம் உள்ளிட்டவை முரசொலிக்கு சவாலாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனிடையே, முரசொலியின் ஆதரவாளர்கள் தஞ்சையில் தடபுடலாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர்.

Next Story

“விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என முதலில் அழைத்தது நான்தான்” - கமல்ஹாசன்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Kamal Haasan says I have already spoken to Vijay who has entered politics

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு இன்றைய நாளோடு 7ஆம் ஆண்டை நிறைவு செய்கிறது. அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க சென்னையில் இன்று (21-02-24) கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியை சென்னை அலுவலகத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஏற்றினார். 

அதன்பின், கமல்ஹாசன் தனது கட்சித் தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்தியாவிலேயே 40 சதவீதம் பேர் ஓட்டு போடாமல் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் ஓட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும். என்னை எல்லோரும் முழு நேர அரசியல்வாதியா? என்று கேள்வி கேட்கிறார்கள். ஆனால், ஓட்டு போடாமல் இருப்பவர்கள் முழு நேர குடிமகனாக கூட இருக்கவில்லை. எனவே, அனைவரும் வாக்களிக்க வேண்டும். முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை. என் சொந்த காசை வைத்து கட்சி நடத்துகிறேன். என்னுடைய அரசியல் பயணம் என்பது ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து அழுத்தமாக நடைபோட்டுக்கொண்டே இருப்பேன். அரசியலை விட்டு என்னைப் போக வைக்க முடியாது. 

நாட்டு மக்களிடம் குடியுரிமை ஆட்டம் கண்டுள்ளது. விவசாயிகளை தடுக்க ஆணி படுக்கையை சாலையில் போட்டுள்ளது ஒன்றிய அரசு. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக வேளாண் பட்ஜெட்டின் விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்துள்ள நன்மையில் 10% கூட ஒன்றிய அரசு செய்யவில்லை. தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என்று நினைப்பவர்கள் தான் ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ளார்கள். மாநிலங்களுக்கு சரியான வரிப்பகிர்வு அவசியம்” என்று பேசினார்

அதனை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “கூட்டணி குறித்து நான் மட்டும் தனியாக சொல்ல முடியாது. மற்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு தான் கூற முடியும். கூட்டணி இறுதியானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கட்சி அரசியலை தாண்டி நாட்டு நலன் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. அரசியலுக்கு வந்துள்ள விஜய்யுடன் ஏற்கெனவே பேசியிருக்கிறேன். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறிய முதல் வரவேற்பு குரல் என்னுடைய குரல் தான்” என்று கூறினார்.