இந்த தேர்தலில் மக்கள் சிந்தித்து நல்லவருக்கு ஓட்டுப்போட வேண்டும். அந்த நல்லவராக மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் இருப்பார் என ஈரோட்டில் நேற்று மாலை நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.

Advertisment

kamalhasan campaign erode

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஈரோடு மக்களவைத் தொகுதி வேட்பாளர் எ.சரவணகுமாரை ஆதரித்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: "காமராஜர், எம்.ஜி.ஆர். போன்ற பெரிய தலைவர்கள் பெரிதாக படித்தவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் மக்களைப் படித்தவர்கள், அவர்களை பார்த்து, படித்து நான் இங்கு வந்திருக்கிறேன். இந்த தேர்தல், பிரதமர் யார் என்று முடிவு செய்வதற்கான தேர்தல் அல்ல. நம்முடைய எதிர்காலம் என்ன என்று நாம் முடிவு செய்யும் தேர்தல். நாட்டுக்கு நல்லது எது என முடிவு செய்யும் தேர்தல். யார் பிரதமர் என்பதை தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.கள் சேர்ந்து தான் முடிவு செய்ய வேண்டும். இப்போதே முடிவு செய்து சொல்வது என்பது அரசியல் மாண்பு இல்லை.

ஓட்டுப்போடுவதை அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என இளைஞர்கள் விட்டுவிடக்கூடாது. அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என 30 ஆண்டுகளை கடந்துவிட்டீர்கள். நீங்கள் எல்லாம் இளைஞர்களாக இருந்தபோது, அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டதை தான், உங்கள் முதுமையில் இப்போதுள்ள இளைஞர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisment

தமிழகம் புரட்சியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. அதற்கு வலு சேர்க்க மக்கள் நீதி மய்யத்தில் சேர திமுக, அதிமுகவில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வருவார்கள். எங்களை நோக்கி இளைஞர்கள் வரக்காரணம், நாங்கள் நேர்மையானவர்கள் என்பது தான்.

பண மூட்டை பதுக்கிக்கொண்டிருக்கும் திருடர்கள் எப்படி பேச முடியும். இப்போது திருடர்களுக்கு தேள் வேறு கொட்டிவிட்டது, இனி பேசவே மாட்டார்கள். ஈரோட்டில் இருந்த பெரியவர் கொடுத்த தைரியத்தில்தான் நான் இவ்வளவு தைரியமாக பேசுகிறேன். யாரையும், எந்த தலைவரையும் அவமதிப்பது என்னுடைய நோக்கமல்ல. ஆனால், திருடனை, திருடன் என்று சொல்லும் தைரியம் எனக்கு உள்ளது. இந்த தைரியம் தமிழ் மக்களுக்கு வந்தே ஆக வேண்டும்.

kamalhasan campaign erode

Advertisment

ஊழல் செய்பவர்கள் எல்லோருமே திருடர்கள்தான். அவர்களை நீங்கள் வணங்கக்கூடாது. அவர்கள் உங்களை வணங்க வைக்க வேண்டும். நம்முடைய குடியரசுக்கு வணங்கியாக வேண்டும். மாண்புள்ள தலைவர்கள் பலர் இருந்த தமிழ்நாடு, திருடர்கள் நாடாக மாறிவிடக்கூடாது. இது திரு நாடு, திருடர்கள் நாடு அல்ல.

ஆட்சியாளர்கள் திருடுவதை நிறுத்தினாலே, 2 தமிழ்நாடு நடத்த முடியும். இதை நீக்கியே ஆக வேண்டும். இவர்கள் இத்தனை நாள் மாண்புடன் வணங்கிக்கொண்டிருந்த 2 கழகங்கள் அன்றைய தமிழகத்தின் தேவையாக இருந்தது. அதனால் அப்போது அவர்கள் வந்தார்கள். இன்றைய தேவை அவர்கள் அகற்றப்பட வேண்டும். காலம் உங்களுக்கு காட்டும் செய்தியாக மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். நாம் நல்ல காலத்தை நோக்கி தமிழகத்தை நடத்துவதற்கு மக்கள் இந்த தேர்தலில் யோசித்து செயல்பட வேண்டும்.

இளைஞர்கள் நோட்டாவுக்கு ஓட்டுப்போடாதீர்கள். நாடு நன்றாக இருக்க, உங்கள் மனசாட்சி சொல்லும் நல்லவருக்கு ஓட்டுப் போடுங்கள். அந்த நல்லவர் கண்டிப்பாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக இருப்பார். ஓட்டுப்போடப்போகும்போது உங்கள் மனதை மாற்ற பல வேலைகள் நடக்கும். ஆனால் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு ஓட்டுப்போடுங்கள். உங்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் நீதி மய்ய பிரதிநிதி தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் அவரது ராஜினாமா கடிதம் உங்களுக்கு வந்து சேரும்” என கமலஹாசன் பேசினார்.