Skip to main content

பி.ஜே.பி. அழுத்தத்தின் காரணமாக தன்னிலை மறந்து பிதற்றத் தொடங்கி உள்ளார் கலைஞானி - திமுக பாய்ச்சல்

kamal


    
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், கடும் விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:- கலைஞானி கமல்ஹாசனின் தோல் உரியத் தொடங்கி உள்ளது.

திரையில் பல்வேறு வேடங்களைக் காட்டினார். நடிப்பாற்றல் என்று மகிழ்ந்து அவரைப் பாராட்டினோம். இப்போது அரசியல் பிரவேசம் நடத்தி, அதேபோல வேடங்களை மாற்றி வித்தை காட்டத் தொடங்கி உள்ளார். ஜென்மத்தோடு பிறந்ததை எதைக் கொண்டும் சீர் செய்ய முடியாது என்பார்கள்.

உதாரணமாக, ‘நாய் வாலை நிமிர்த்த இயலுமா?- என்று கேட்பார்கள். ஆனால், அதிசயமாக நிமிர்ந்து நின்ற வாலைப் பார்த்து, வா.ராவைப் போல இதோ ஒரு அதிசய மனிதர் தோன்றி இருக்கிறார் என வியந்தோம்.

ஆனால், இப்போதுதான் வாலில் கட்டிய சிம்பு விலகியதால் வால் மீண்டும் வளைந்துள்ளது.

ஊடக விவாதங்களிலும், சில அரசியல் மேடைகளிலும் பேசி வரும் தோழர் மதிமாறன், கமல் அரசியல் வேடம் கட்டிய நாளிலிருந்து, இவர்களெல்லாம் பி.ஜே.பி.யால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை சுட்டிக்காட்டி வருகிறார். நம்மில் சிலர் கூட நினைத்தோம், ஏன் நாம் கூட எண்ணினோம். கமல்ஹாசனை தேவையின்றி ஏன் சீண்ட வேண்டும். திராவிட இயக்க உணர்வோடு ஒத்துப் போகும் அவரை நோக்கி, ஏன் இது போன்ற குண்டூசித் தாக்குதலை நடத்த வேண்டும் என்றெல்லாம் நம்மிடையே கருத்துக்கள் நிலவின.

 

kamal-murasoliமதிமாறன் போன்றோர் கொண்ட கருத்து, எத்தனை தீர்க்கதரிசனமானது என்பதை நிரூபித்திடும் வகையில், கலைஞானி கமல்ஹாசனின் இன்றைய பேச்சு துல்லியமாக அமைந்துள்ளது. அரிதாங்கள் மேல் உடலை மாற்றலாம். ஆனால், உள்ளுணர்வை மாற்ற இயலாது என்பதற்கு சிறப்பான எடுத்துக் காட்டாகி விட்டார் கமல்ஹாசன்.

மூட்டைகளைச் சுமக்கும் பிராணிக்கு கனம் தெரியுமே தவிர, அதனுள் இருப்பது என்ன என்பதை உணர முடியாது. மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியாது. எஜமான் தூக்கி வைப்பதைச் சுமந்து செல்வது தான் அதன் வழக்கம்.

சில பிராணிகள் கூட மோப்பத்தில் எஜமானை அறிந்து விசுவாசத்தில் வால் ஆட்டும். மூட்டை சுமக்கும் பிராணியோ கோல் தூக்கியவனை எல்லாம் எஜமானாகக் கருதிச் செல்லும். கோல் தூக்கி மிரட்டிய எஜமானுக்கு பயந்து கோலோச்சப் புறப்பட்ட கமல்ஹாசனுக்கு செக்குக்கும், சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாது போய் விட்டது. பாவம், அவரைச் சொல்லிக் குற்றமில்லை, கட்சி தொடங்கி பல மாதங்கள் கடந்த பின் இப்போதுதான் தி.மு.க. ஊழல் கட்சியாகக் காட்சி தருகிறது அவருக்கு.

‘பத்மஸ்ரீ’ பட்டம் பெற்ற போதும், பாராட்டு விழாவுக்கு அன்றைய முதல்வர் கலைஞரை அழைத்த போதும், தி.மு.க. ஊழல் கட்சியாகத் தோன்றவில்லை.

மருதநாயகம் படப்பிடிப்பைத் தொடங்க அன்றைய தி.மு.க. முதல்வரை அழைத்தபோது, ஊழல் தெரியவில்லை. ஏன் அவ்வை சண்முகியாக வேடம் கட்டி, தலைவர் கலைஞரைச் சந்தித்து ஆசிபெற்ற போதும் ஊழல் தெரியவில்லை.

ஆனால் இப்போது திடீரென தி.மு.க. ஊழல் கட்சியாக அவர் முன் உருவெடுத்திருக்கிறது என்றால், என்ன காரணம்? ஆட்சியில் இருந்த போதெல்லாம் ஊழல் கட்சியாகத் தோன்றாத ஒன்று, ஆட்சி அதிகாரத்தை இழந்த 7 ஆண்டுகள் முடிந்தபின் திடீரென ஊழல் கட்சியாக கமலுக்குக் காட்சி அளிக்கிறது என்றால், அது அவரது சொந்தக் கருத்தாக இருக்க முடியுமா?

சினிமா பாணியில் சொல்ல வேண்டுமெனில், நாம் பல படங்களில் பார்த்த காட்சி மூலமே இதனை விளக்கிட இயலும்.

நாயகனின் நண்பன் பாத்திரத்தில் தோன்றுபவன், திடீரென நாயகனுக்கு எதிராகப் பேசுவான். நாயகன் குற்றவாளி என்பான். படம் பார்ப்பவர்கள் திகைப்பார்கள். என்ன இப்படி நேரம் பார்த்து காலை வாரி விட்டு விட்டானே எனப் படம் பார்ப்பவர்கள் எல்லாம் திகைத்திருக்க, அதுவரை இரு பாத்திரங்களை மட்டும் ‘குளோசப்’பில் காண்பித்த கேமரா பின் நோக்கிச் செல்லும்- அப்போது மூன்றாவது பாத்திரம் ஒன்று, நாயகனின் நண்பனுக்குப் பின்னால் அவர் முதுகின் மீது கத்தியையோ அல்லது துப்பாக்கியையோ வைத்து அழுத்திக் கொண்டிருப்பது காண்பிக்கப்படும்.

அதே நிலைதான், பின்னால் பி.ஜே.பி.யின் துப்பாக்கி அழுத்தத்தின் காரணமாக தன்னிலை மறந்து பிதற்றத் தொடங்கி உள்ளார் கலைஞானி. ஆனானப்பட்டதாகக் கருதப்பட்ட புரட்சி நடிகர்கள் கூட அமலாக்கத்துறை, வருமானத் துறை மிரட்டலுக்குப் பயந்து, அவர்களை வளர்த்த கட்சியின் மார்பில் பாய்ந்த வரலாற்றைத் தெரிந்தவர்கள் நாம். “வளர்த்த கடா மார்பில் பாய்ந்த தடா” - எனத் தன் வெண்கலக் குரலால் மறைந்த நாகூர் ஹனீபா பாடிய பாடல் கேட்டிருப்போம்.

அதனையே, எதிர் கொண்டு போராடி இந்தப் பேரியக்கத்தைக் காப்பாற்றி வந்தவர்கள் நாம். நம்மை இந்த “பூம் பூம்”காரனின் மாடு என்ன செய்து விடும்.

தலைவர் கலைஞர் அடிக்கடி கூறுவது போல, புலி வேட்டைக்குச் செல்பவன், இடையில் பன்றிகள் வீசும் சேற்றைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. அது நமது கவனத்தை, குறியை திசை திருப்பும் செயலாகும். அவற்றை அலட்சியப்படுத்தி லட்சியத்தை எட்டி, பீடு நடைபோடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்