ADVERTISEMENT

எம்.ஜி.ஆர் தொகுதியில் கமல்... பரபரப்பு தகவல்கள்!

01:48 PM Feb 28, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட 'மக்கள் நீதி மய்யம் கட்சி' முதன் முதலாக 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. குறைந்த காலத்திலேயே தேர்தலை சந்தித்திருந்த நிலையில் தற்போது சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்க இருக்கிறது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கான தீவிரமான முயற்சிகளை மக்கள் நீதி மய்யம் மேற்கொண்டிருக்கிறது. ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட பிரச்சாரத்தில் நடிகர் கமல்ஹாசன் ஈடுபட்டிருந்தார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமல்ஹாசன் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

இரண்டாவது முறையாக ஒரு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள தொடர்ந்து திட்டமிட்டிருந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை, கூட்டணி போன்ற பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அதற்கான குழுவையும் கமல்ஹாசன் அமைத்துள்ளார். அதேபோல் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரைப் பயணத்தை தொடங்குவதற்கான பணிகள் மற்றும் ஆலோசனைகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் கமல் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்கின்ற கேள்வி இருந்தது. இந்நிலையில் அவர் சென்னைக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றில்தான் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. இதுகுறித்து நாம் சிலரிடம் பேசிய போது, கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேச வேண்டும் அப்பொழுதுதான் தமிழகம் முழுவதுமுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்வமாக இருப்பார்கள். அதேபோல் அவர் போட்டியிடக் கூடிய தொகுதி சென்னைக்கு உள்ளேயும், பரப்பளவு குறைவாகவும் இருந்தால்தான் குறுகிய காலத்தில் அவர் அவருக்காக பிரச்சாரம் செய்து கொள்ள ஏதுவாக இருக்கும் என நினைக்கிறார். எனவே சென்னைக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தான் போட்டியிட வேண்டும் என கமல்ஹாசன் நினைக்கிறார். அதில் ஒன்று ஆலந்தூர் மற்றொன்று மயிலாப்பூர் தொகுதி. ஆலந்தூர் தொகுதி எம்.ஜி.ஆர் தொடர்ந்து போட்டியிட்ட தொகுதிகளில் ஒன்று. அப்பொழுது பரங்கிமலை என்றிருந்த தொகுதியானது தற்பொழுது ஆலந்தூர் தொகுதியாக இருக்கிறது. இந்த இரண்டில் ஒன்றை அவர் கண்டிப்பாக தேர்ந்தெடுத்து போட்டியிடுவார் என்றனர்.

முதல்கட்ட பிரச்சாரத்தின் பொழுதுகூட ''எம்.ஜி.ஆர் மடியில் தவழ்ந்து வளர்ந்தவன் நான்'' என எம்ஜிஆரை மேற்கோள்காட்டி கமல்ஹாசன் பேசியிருந்தார். இது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதிமுக அமைச்சர்களும் கமலின் இந்த பேச்சுக்கு, எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கம் அதிமுக எனவே எம்.ஜி.ஆரை அதிமுக மட்டுமே உரிமை கொண்டாட முடியும் என பதிலளித்திருந்தனர். இந்நிலையில் எம்.ஜி.ஆர் தொடர்ந்து போட்டியிட்ட தொகுதி கமல் போட்டியிடும் தொகுதியின் விருப்பப்பட்டியலில் உள்ளது என்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT